பெண்
கனவிலும்
வரிசை தப்பாது வரும்
வீடுகள் கடந்து
கோபுர நிழல் நீளும்
சின்ன வீதியில்
நடக்க மாட்டேன்.
ஆற்றங் கரையில்
ஊற்றுத்தோண்டிக்
கதைகள் பேசி
அலுத்த பின்னே
குடம் நிறைத்து
ஈரமண் உதிரும்
சிற்றாடை அசையக்
கூடநடந்து வந்த தோழிகளைத்
தேட மாட்டேன்.
அப்பா வந்ததும் குதித்தோட
அண்ணாவோடு காத்திருந்த
கல் யானைப் படிகள் ஏறி,
ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில்
அம்மாவின் பழம்புடவை
தரை புரளும் ராணியாய்
வலம் வந்த திண்ணை கடந்து
இருண்ட நடையுள்
போக மாட்டேன்.
மௌனமாய்க் கண்ணீரில்
அம்மா கரைய,
அண்ணா உறவு மறுக்க,
தெருவே கூடிப் பேசி நிற்க,
படமாய்த் தொங்கிப் புன்னகைக்கும்
அப்பாவையே பார்த்தபடி
நின்ற கூடத்தில்
பாதம் பதிக்க மாட்டேன்.
உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து
மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும்.
பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க
மனம் மட்டும் அங்கெல்லாம்
மெல்லப் பயணம் போகும்.
(கணையாழி 1985)