சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்: சுஜாதா’ புத்தகத்திற்காக எழுதி, நீளம் கருதி நான் வெளியிடாமல் போன ஒரு சிறு அத்தியாயம் இது :
சுஜாதாவின் நாலாயிரத் திவ்யப் பிரபந்த ஈடுபாடு, தமிழ் மரபுக் கவிதையில் ஈடுபாடாக முகிழ்ந்தது. முக்கியமாக வெண்பாப் பிரியர் அவர். வாசகர்களை வெண்பா எழுதத் தூண்டியதோடு அவ்வப்போது அவரும் உற்சாகமாக நேரிசை வெண்பா எழுதினார்.
வெண்பாவில் எத்தனையோ தலைமுறை கடந்து இளையோரின் விருப்பம் அரும்பியிருக்கிறது என்றால் சுஜாதாவின் அட்டகாசமான, தற்காலக் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டும் விளையாட்டு, வைர ஊசி வெண்பாக்களும் அதற்கு ஓரளவு காரணம்.
’வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு அவர் எழுதிய வெண்பா இது –
பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.
திருவள்ளுவரைத் தன் வெண்பாவுக்குள் அழைத்து வந்து ஆங்கில நகைச்சுவைக் கவிதை வடிவமான லிம்ரிக் பாணியில் சுஜாதா எழுதிய வெண்பா –
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
மரபுக் கவிதையில் தற்காலத்தைச் சித்தரிப்பது அவருடைய ‘உடன்’ என்ற கவிதை. கிட்டத்தட்ட எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த மூன்று செய்யுட்கள் இவை. உலகச் சிறார் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் எழுதியது.
கோயிலுக்குப் பக்கத்தில் கார்துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட்எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள்பிடிப்பாய்
வாய்மொழியின் வார்த்தைகளில் வயதை மீறிடுவாய்
வழியெல்லாம் கிடக்கின்ற ப்ளாஸ்டிக் பொறுக்கிடுவாய்.
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல்உடைப்பாய்
கார்அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டுவிற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழாஎடுக்கப் போகின்றோம்.
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்சநாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..
அவருடைய ’கவிஞர்களே இவ்வருஷம்’ மரபுச் செய்யுள் இப்படி முடியும் –
நித்த நித்தம் உயிர்வாழும் யத்தனத்தில்
நேர்மைக்கும் கவிதைக்கும் நேரம் இன்றி
செத்தொழியக் காத்திருக்கும் மனுசர் நெஞ்சின்
சிந்தனையைக் கவிதைகளாய்ச் செய்து பார்ப்போம்
முத்தனைய சிலவரிகள் கிடைக்கா விட்டால்
மூன்றுலட்சம் ‘ ராமஜெயம் ‘ எழுதிப் பார்ப்போம் !
மரபில் ஈடுபாடு என்பதால் சுஜாதா புதுக்கவிதையைப் புறக்கணித்தார் என்பதில்லை. கல்யாண்ஜி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் என்று தேடிப் படித்து எழுதிச் சிலாகித்தார் அவர்.
ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவும் சுஜாதா மூலம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக அறிமுகமானது.
அவர் இங்கே பிரபலமாக்கிய ஒரு ஜப்பானிய ஹைக்கூ இது –
அழகான மரக்கிண்ணம்
பூக்களை நிரப்புவோம்
அரிசிதான் இல்லையே.
’ஹைக்கூ மூன்றே வரிதான் இருக்க வேண்டும். எழுதுகிறவரின் அனுபவமாக இருக்க வேண்டும். உவமை, உருவகம் இருக்கக் கூடாது. முதல் இரண்டடி ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக, மூன்றாம் வரி ஒரு புதிய சிந்தனையைச் சொல்வதாக இருக்க வேண்டும்’ என்ற ஹைக்கூவின் இலக்கணத்தைக் கூறி, வாசகர்களை தமிழ் ஹைக்கூ எழுதத் தூண்டி, தன் பத்திரிகைப் பத்திகளில் அவற்றைப் பிரசுரித்து உற்சாகப்படுத்தியவர் சுஜாதா.
அறிவியலை ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தில் பொதிந்து வைத்து அவர் எழுதிய தமிழ் ஹைக்கூ இது –
சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப் பூட்டினேனா?
ஹைக்கூ பாதிப்பில் அவர் எழுதிப் பார்த்த குறுங்கவிதை இது –
மன்னாரு வந்தான்
மணி பார்த்தான், படுத்து கொண்டான்
சென்னை விட்டு திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்
அவ்வப்போது சுஜாதா ஆங்கிலக் கவிதைகளில் அவருடைய உள்ளம் கவர்ந்தவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தம் எழுத்து மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை இது –
புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சிலவேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்- அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கி விழுகிறது
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.
எது நல்ல கவிதை என்பது பற்றி சுஜாதாவுக்கு சந்தேகமே இல்லை. நினைவு கூரும் கவிதை (evocative poem) தான் உயர்ந்த கவிதை என்பார் அவர். அந்த அளவுகோட்டோடு தமிழ்ப் புதுக்கவிதை, மரபுக் கவிதை மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அணுகினார் அவர்.
குறிப்பிடத் தகுந்தவை என்று அவர் கருதியவற்றைச் சளைக்காமல் தம் வாசகர்களுடனும் பகிர்ந்து கொண்டார்.
நல்ல கவிதை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய மறுமொழி அவர் எழுதிய கவிதைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக் கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன.
அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவறவிடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.