நாவல் ‘1975’ – மதிப்புரை – வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி ஆர்.வி.எஸ்

நண்பர் ஆர்.வி.எஸ் எழுதிய 1975 நூல் மதிப்புரை. அவருக்கு என் நன்றி

சங்கரன் போத்தி ஒரு வங்கி பணியாளர். எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸ், அரசூர் மற்றும் புதுதில்லியில் பணியாற்றுகிறார். இருபது அம்சத் திட்டத்தில் ஊரெல்லாம் கடன் வழங்குகிறார்கள். வங்கிகள் எப்படி அப்போது இருந்தன என்பதை ஒரு வசனமாக இரா. மு எழுதுகிறார்.

>>>>>>>>>>>>
”வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்கூடாது, வழங்கிகளாக இருக்க வேண்டும்”
<<<<<<<<<<< அந்தக் காலத்துச் சம்பங்களின் கோர்வை 1975ன் கதைக்கரு. கருப்பு-வெள்ளையில் காட்சிகள் விரிகின்றன. இரா. முருகன் சாரின் மாய யதார்த்த கதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். அவரது பயோஃபிக்ஷன்களும்தான். இந்த 1975ல் போத்தி கதை சொல்வதாக எமர்ஜென்ஸியைப் படம் பிடித்திருக்கிறார். அவருடைய எல்லா நாவல்களைப் போலவே எடுத்தால் மூடாமல் படிக்கும் தினுசுதான் இதுவும். கிண்டிலில் படித்துக்கொண்டிருந்த நான் அச்சுப்புத்தகமாக கிழக்கு வெளியிட்டீல் வந்ததை எடுத்து படுக்கையில் புரண்டு படித்தேன். 390 பக்கங்களை ஒரே நாளில் ஒரே மூச்சாக முடித்தேன். எமர்ஜென்ஸி காலத்தில் ஜனநாயகத்தை சாவடித்துவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு ஏகக்கெடுபிடி. சென்சார். இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் சர்க்காரை எதிர்ப்பதாக ஒரு லோக்கல் பத்திரிகையில் விளம்பரம் தயார் செய்கிறார்கள். எப்படித் தெரியுமா? >>>>>>>>>>>>>
”25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்” என்று எதிர்ப்பை மறைமுகமாகத் தெரிவிக்கும் விளம்பரம்
<<<<<<<<<<<<< கதையெங்கும் பல பாத்திரங்கள் மூலமாக புத்தக சிபாரிகள் கிடைக்கின்றன. 1. ஜி.வி. தேசானியின் புதிய அலை. All about H. Hatterr. 2. E. L. Doctorow வின் The Writer in the Family. 3. மதுரை ஆதீனம் எழுதிய “இறந்தவர்கள் வாழும் நிலையும் பேச்சும் முறையும்” 4. ராகுல சாங்க்ருதியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை” 5. காஃப்காவின் மெட்டமார்ஃபஸிஸ் 6. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் 7. கருங்குயில்குன்றத்துக் கொலை 8. தமிழ்வாணனின் பேய் பேய்தான். 9. “கிளையினிற் பாம்பு தொங்க, விழுதென்று, குரங்கு தொட்டு” - பாரதிதாசன் கவிதை. கதையில் போத்தியுடன் வரும் கதைமாந்தர்கள் அனைவருமே படிக்கப் படிக்க நமக்கும் தெரிந்தவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் போத்தி எதிரில் நின்று பேசுபவர் நம் எதிரில் நின்று பேசுபவர் போன்ற மாயை உருவாகிவிடுவது இரா. முருகன் சாரின் எழுத்து செய்யும் ஜாலம். நரிக்குறவர்களுக்கும் லோன் வழங்கப்படுகிறது. அவர்களது பெயர்கள் எண்ணூறு, ஆயிரம், காஞ்சிபுரம் என்றெல்லாம் வருகிறது. அவர்களில் ஒருவர் லோன் வேண்டாம் என்று சொல்கிறார். >>>>>>>>>>
”இப்போ வாணாம் சாமியோவ்! இருவது பள்ளிக்கூடத்துல படிப்பான்… அப்ப தேவையின்னா கேட்டு வாங்கிக்கிறேன்”
சிரித்தார் எண்ணூர் என்ற அந்த குருவிக்காரர்.
“இருபதுன்னா?” நான் கேட்டேன்.
“பிறந்திருக்கிருக்கிற பிள்ளை. இருபது அம்சத் திட்டப் பெயரை வச்சுட்டார்” என்றார் ஜெபர்சன்.
<<<<<<<<< VEDAKAN என்ற ஸ்பெல்லிங் கொண்ட ஆசாமி ஒருவருக்கு வங்கிக் கணக்குத் துவங்குகிறார்கள். போத்தி அவரை “வடக்கன்” என்று கூப்பிடுகிறார். உடனே கோரஸாக வங்கியில் இருப்பவர்கள் “வேதக்கண்” என்றார்களாம். ”இங்கிலீஷ் ஏமாற்றிய நாள் அது” என்று போத்தி சொல்வதோடு அந்த காட்சி முடிகிறது. 🙂 கடுமையான வயத்துப் போக்கு ஏற்படும் ஒரு இடத்தில் கதாபாத்திரம் பேசும் வசனம் ஒன்று. >>>>>>>>>>>
”கொடுமையான வயத்துப் போக்கு. அது பாதக மலம். மருந்து கொடுத்து நிறுத்தலேன்னா, கடவுளோட பாத கமலம்….. நல்லா இருக்கா?”
<<<<<<<<<< எமர்ஜென்ஸி பற்றிய ஒரு முழுச் சித்திரம் புனைவாகக் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்! அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்! பின் குறிப்பு: பொதுவாக என் நண்பர் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி தானெழுதும் கதைகளுக்கு 6174, 7.83 ஹெர்ட்ஸ் என்று எண்களிலேயே தலைப்பு வைத்து அசத்துபவர். இம்முறை இரா. முருகன் அண்ணாவின் எண் தலைப்பு 1975! 🙂 #1975 #கிழக்கு #இரா_முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன