திகில் கனவொன்று கண்டேன்

(ஆர்.கே.நாராயண் ஆங்கிலக் கட்டுரை – மொழியாக்கம் இரா.முருகன்)

சமீபத்தில் நான் ஒரு பயங்கரக் கனவு கண்டேன். ஸனாடு என்ற பெயரில் வினோதமான ஒரு நாடு வந்த கனவு அது. நான் அந்த தேசத்தின் குடிமகனாகி இருந்தேன். அந்த நாட்டு அரசாங்கம் திடுதிப்பென்று கதைகள் கண்காணிப்பாளார் என்று ஒரு அதிகாரியை நியமித்து விட்டதாக அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் எழுத்தாளர்களுடைய பிரதிநிதியும் இடம் பெற்றிருக்கும் தேசம் ஸனாடு. எழுத்தாளர்கள் தங்கள் பிரதிநிதியை இது பற்றிக் கேட்க, அவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வினா எழுப்பினார் : ‘கதைகள் கண்காணிப்பாளர் என்று ஒரு புது அரசுத் துறை ஏன் ஏற்படுத்தப் பட்டது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?’

ஆளுங்கட்சி சார்பாக வந்த பதில் : ‘அரசு அச்சிடும் துறையில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோர்ஸ் (Controller of Stores) என்று அச்சிட்டிருக்க வேண்டிய ஐந்து டன் காகிதப் படிவங்கள், கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோரீஸ் (Controller of Stories) என்று அச்சாகி விட்டன. ஒரு எழுத்து (ஐ i ) அதிகம். இந்தப் படிவங்களைப் எப்படிப் பயன்படுத்துவது என்று தீர்மானிப்பது அரசின் முக்கிய கடமையாகிப் போனது’.

‘என்ன மாதிரி உபயோகம்?’ உறுப்பினர் கேட்டார்.

‘தவறுதலாக நடந்ததென்றாலும் ஐந்து டன் படிவங்கள் அச்சடிக்க்கப் பட்டுவிட்ட காரணத்தால், அவற்றில் அச்சடித்தபடி, கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோரீஸ் – கதைகள் கண்காணிப்புத் துறை தொடங்கப்பட்டது’.

‘ஒரு புது அதிகாரி துறைத் தலைவராக நியமிக்கப் பட்டாரா? அப்படி எனில், பொதுப்பணி ஆணையத்தின் சுற்றறிக்கை இது குறித்து ஏதேனும் உண்டெனில் மாண்பு மிகு அமைச்சர் அதை மேற்கோள் காட்ட முடியுமா? இந்தப் பதவி ஏற்படுத்தியதால் சம்பளம் இதர வகைகளில் அரசுக்கு எவ்வளவு செலவு ஏற்படும்? எங்கிருந்து அந்தப் பணம் கிடைக்கும்? அரசு கணக்குகளில் எந்த கணக்கில் இதற்கான செலவினங்கள் பற்று எழுதப்படும்? இது குறித்த முடிவு எடுக்க வேண்டிய அதிகாரி யார்? இது குறித்து கணக்குத் தணிக்கை மேலாளரின் கருத்துகளை இந்த அவையின் முன் வைக்க முடியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் பேசிக்கொண்டே போனார். சங்கிலித் தொடர் போல் நீண்ட, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கேள்விப் பின்னலில் அமைச்சரைச் சிக்க வைக்க அவர் முயன்றார். இது போன்ற உபாயங்களை எத்தனை முறை அமைச்சர் சந்தித்திருப்பார்? அவர் கறாராக மறுமொழி சொன்னார்:

’கேள்வி அ-வுக்கு பதில் இல்லை. ஆ – அரசு நிலமையைக் கவனித்து வருகிறது. இ – இந்தக் கேள்வி எழ முகாந்திரம் இல்லை. ஈ – ஆவுக்கான பதிலைக் கவனிக்கவும். உ – பொதுநலன் கருதி இக்கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்க்கிறேன்’,

அவர் மிக வேகமாக, நிறுத்தாமல் பேசியதால் கேள்வி கேட்ட உறுப்பினர் தடுமாறிப் போனார். என்றாலும் சளைக்காமல் அவர் மறுபடி கேட்டார் – ‘இது அண்மையில் அறிவிக்கப் பட்ட அரசின் சிக்கன நடவடிக்கைகளோடு ஒத்துப் போகிறதா என்பதை மதிப்புக்குரிய அமைச்சர் விளக்குவாரா?’

‘இதற்கான பதில், ஆம்’.

‘அவர் இப்போது சொன்ன பதிலுக்கான விளக்கத்தைத் தயவு செய்து சொல்வாரா?’

’நிச்சயமாக. முதலாவதாக, மிகப் பெருமளவில் அச்சடிக்கப்பட்ட படிவங்களை நாம் உபயோகப்படுத்த நடவடிக்கை எடுத்து விட்டோம். உலகில் காகிதக் கட்டுப்பாடு பற்றிய அறிதல் உள்ள யாரும் இந்த நடவடிக்கையைப் பாராட்டவே செய்வார்கள். இரண்டாவதாக, கதைகள் கண்காணிப்பு என்ற புதிய துறை துவங்க கூடுதல் செலவு ஏதும் இல்லை. கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோர்ஸ் நிர்வாக அதிகாரியே கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோரீஸ் துறைக்கும் கௌரவத் தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். அவர் கதைகள்துறைப் பணிகளையும் சேர்த்தே ஆற்றுவார். ஏனெனில் எல்லா ஸ்டோரிகளும் ஒரு விதத்தில் ஸ்டோர்கள் தான்’. (ஸ்டோரி – கதை; ஸ்டோர் – சேமித்து வைக்குமிடம்).

இந்த கதைகள் துறை பற்றிய ஏன் – எப்படி – எவ்வாறு – எங்கு தகவல்களை எங்களுக்குத் தர முடியுமா?’

’இது குறித்துப் பேச எழுந்துள்ள சந்தர்ப்பத்தைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய வாழ்க்கையில் கதைகளின் முக்கியத்துவம் குறித்து அரசு நன்கு அறிந்திருக்கிறது. இது மக்கள் நலம் பேணும் அரசு. ஆதலால், குடிமக்களைப் பாதிக்கக் கூடிய எல்லா செயல்பாடுகளையும் அவதானிப்பது அரசின் தலையாய பணிகளில் ஒன்றாகும். உணவு, தண்ணீர் இவற்றுக்கு அடுத்து கதைகளே அதிகமாகக் கோரப்படுகின்றன என்பது அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், எங்கோ யாரோ யாரையோ ஒரு கதை கூறச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார்கள். அது ஆசிரியரைக் கேட்கிற குழந்தையாக இருக்கலாம். நாவலாசிரியரைக் கேட்கிற வாசகனாக இருக்கலாம். பத்திரிகை ஆசிரியரைக் கேட்கிற சந்தாதாரனாக இருக்கலாம். அல்லது லட்ச லட்சமாக முதலீடு செய்து எல்லா உபக்ரணங்களும் தயாராக இருக்க, சினிமாப் படம் எடுக்கக் கதை மட்டும் இன்னும் கிடைக்காத சினிமா தயாரிப்பாளராக இருக்கலாம். மேலும், நம் வானொலி நிலையங்களும், நாடகக் கொட்டகைகளும் கதைகள் வேண்டுமென்று கேட்கின்றன. கதைகளுக்கான தேவை உற்பத்தியாகிற கதைகளை விட மிக அதிகமாக இருக்கிறது. கதை கிடைத்தாலும், அது வெறுக்கத் தகுந்த மோசமான கதையாக இருக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மோசமான கதைகளை இந்த அரசு இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த இடத்தில் கேள்வி கேட்ட உறுப்பினர் குறுக்கிட்டார் – ‘மோசமான கதைகள் என்றால் என்ன என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? மதிப்புக்குரிய அமைச்சர் உதாரணங்களுடன் விளக்குவாரா?’

‘மன்னிக்கவும். இதுவே மோசமான கதை என்று நான் எந்த ஒரு கதையையும் சுட்டிக் காட்ட இயலாது. அப்படிச் செய்தால் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில் முடிவு எடுக்கப் படுவதாகச் சந்தேகப்பட ஏதுவாகலாம். நன்றாக இல்லாத கதைகளே மோசமான கதைகள் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த விளக்கத்தோடு நம் மதிப்புக்குரிய உறுப்பினர் திருப்தி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்’.

‘இந்தத் துறை எப்படி செயல் படும் என்று தெரிந்து கொள்ளலாமா?’. உறுபினர் அடுத்துக் கேட்டார்.

’கதைகள் கண்காளிப்பாளர் உடன் ஒரு மத்திய கதை அலுவலகத்தை ஆரம்பிப்பார். அந்த அமைப்பு, மாநில வாரியாக முதன்மை கதை அதிகாரி அலுவலகங்களைத் தொடங்க முயற்சி எடுக்கும்’.

‘நாட்டின் இருக்கும் கதை எழுத்தாளர்களுக்கு இந்த நடவடிக்கைகள் எவ்விதத்தில் தொடர்பு உள்ளவை என்று தெரிந்து கொள்ளலாமா?’.

‘ஒவ்வொரு கதை எழுத்தாளரும் படிவம் அ-வைப் பூர்த்தி செய்து, கருவூலத்தில் பத்து ரூபாய் பணம் செலுத்தி வாங்கிய ரசீதோடு அப்படிவத்தை மத்திய கதை அலுவலகம் – பொதுக் கிளைக்கு அனுப்ப வேண்டும். அந்த அலுவலகத்திலிருந்து அவர் தன்னைப் பதிவு செய்யப்பட்ட கதை எழுத்தாளர் என்று அழைத்துக் கொள்ளத் தேவையான அனுமதி கிடைக்கும். அதன் பிறகு, எப்போதெல்லாம் கதை எழுத உந்தல் ஏற்படுகிறதோ, அது சிறுகதை எழுத என்றாலும் சரி, நாவல் எழுத என்றாலும் சரி, அவர் அந்தக் கதைக் கருவைச் சுருக்கமாக எழுதிய குறிப்பின் நான்கு பிரதிகளை மத்திய கதை அலுவலகம் – தொழில்நுட்பப் பிரிவுக்கு அனுப்பி, அந்த அலுவலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அந்த அனுமதியோடு தான் அவர் கதையை மேற்கொண்டு எழுத முடியும்.

’அது ஏன் நான்கு பிரதி அனுப்ப வேண்டும்?’

‘வழிமுறைகளைச் சரியாக நடப்பாக்கத்தான். மத்திய கதை அலுவலகம் – தொழில் நுட்பப் பிரிவு நான்கு இயக்குநரகங்களைக் கொண்டதாக இருக்கும். ஒன்று கதைக்கரு, அடுத்தது கதாபாத்திரங்கள், மூன்றாவது கதைக் களன், நான்காவது கதையின் முடிவு இவற்றுக்கான இயக்குநரகங்கள் இவை. தங்கள் பணி வரம்புக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட கதை எழுத்தாளர் நான்கு பிரதிகள் அனுப்பிய கதைக் குறிப்பை இந்த இயக்குனரகங்கள் ஒவ்வொன்றும் தீர ஆய்வு செய்து தேவையானால் கதை பற்றிய ஆலோசனைகளையும் கதையை மேம்படுத்துவது குறித்த கருத்துகளையும் தெரிவிக்கும். இந்த இயக்குநரகங்களின் பரிசீலனை முடிந்து கதை தொடர்பான மாற்றங்கள் உறுதியான பிறகு கதையை எழுத இறுதி கட்ட அனுமதிச் சான்றிதழ கதை எழுத்தாளருக்கு வழங்கப்படும். எழுத்தாளர் இந்த அனுமதியை எளிதில் கண்ணில் படும் வண்ணம் தன் வீட்டு முன்னறையில் காட்சிப் படுத்த வேண்டும். தகுந்த அனுமதி இன்றிக் கதை எழுத முற்படுகிற எந்த எழுத்தாளரும் ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்கு உட்பட்ட கால அளவு சிறையில் அடைக்கப் படுவார்… இப்படியான தீவிர நடவடிக்கைகளைத் தவிர்க்கவே அரசு விரும்புகிறது. அரசின் முக்கிய நோக்கம் தேசிய கலாசாரத்தை முன்னேற்றுவதே ஆகும். இந்தக் கதைகள் துறை ஏற்படுத்திச் செயல்படுவது தொடர்பான நடவடிக்கை கதை எழுதுவதில் ஒரு புரட்சியை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு உண்டு. தேசிய கதை வாரத்தை நாங்கள் தொடங்கி வைக்க இருக்கிறோம் என்பதை மதிப்புக்குரிய உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘நல்ல கதை எழுதுவோம்’ இயக்கம் நாடு முழுவதும் இந்த தேசியக் கதை வாரத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது மூலம் பிறப்பெடுக்கும்.’.

அமைச்சர் இறுதியாகக் கூறியதாவது : ‘இதெல்லாம் இந்த நாட்டில் எழுதப்படும் கதைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அங்கமாகும். நாங்கள் இந்த நடவடிக்கைகளின் பலனை கவனமாக நோக்கி வருவோம்.’

அமைச்சர் இந்த இடத்தில் குரலை உயர்த்திச் சொன்னார் : ‘மோசமான கதை எழுத்தாளர்களின் மசிப் புட்டிகளை உடைத்தெறிய இந்த அரசு சற்றும் தயங்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் மோசமான கதைகள் எந்த வடிவத்திலும் பிறப்பெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. மாநிலக் கதை அதிகாரிகள் அனுப்பும் காலாண்டு அறிக்கைகளின் அடிப்படையில் நிலமையை நாங்கள் கூர்ந்து கவனித்து அதன் போக்கை அவதானிப்போம். எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தில் முன்னேற்றம் எதையும் காட்டாமல் இருந்தால், ஆளுங்கட்சி உறுப்பினர்களான நாங்களே கதை எழுதத் தொடங்கி விடுவோம் என்பதைச் சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கில்லை’.

இந்தக் கட்டத்தில் நான் விழித்துக் கொண்டேன்.
(நன்றி : A writer’s nightmare – R.K.Narain’s essays anthology)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன