என் ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் இருந்து –
நவராத்திரியோ, பொங்கலோ, தீபாவளியோ ராணியும் ராஜாவும் இருந்த வரை அதுவும் செயலில்லாமல் முடங்கி, அப்புறம் எதுவும் கொண்டாட யாருமில்லாமல் அரண்மனை அட்டுப் பிடித்துக் கிடந்ததெல்லாம் அடி முதல் நுனி வரை மாறியதில் ராணிக்கும் மகிழ்ச்சிதான்.
வேதையன் பள்ளிக்கூடத்துக்கு அரண்மனைக்குள் இடமும், வாசகசாலையும் ஏற்படுத்தி வைத்த அப்புறம், கோவிலைச் சீராக்கினதன் பின்னால், இந்த இடத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. கொண்டாட்டமும் மிதமாக இருந்ததில்லை.
ராஜாவும் ராணியும் உறங்கியும் ஊர்ந்தும் இருந்த அறைகளும், பரம்பரை பரம்பரையாக வாள், சுரிகை, ஈட்டி, வேல், வேல் கம்பு, வளரி, கேடயம் என்று தளவாடங்களைக் காபந்து செய்து வைத்த இடமும் இன்னும் பூட்டித்தான் இருக்கின்றன. ஆனால் அவை கிரமமாகப் பராமரிக்கப்பட்டு தூசு துப்பட்டை நீங்கி, சுத்தமும் சுகாதாரமுமாக எப்போதும் காட்சியளிக்கின்றன. இதுவும் ராணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தான்.
என்னத்தை சுத்தம். அவன் ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு பிள்ளை பெத்து, அதெல்லாம் ஓடி விளையாடி, ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இருந்து, ஒரே வீச்சமா வீசிக் கெடந்தா, அதோட அழகுக்கு, இதெல்லாம் உறை போடக் காணாது.
ராஜா ரொம்ப நாள் சொல்லிக் கொண்டிருந்தது வேதையனும் போய்ச் சேர்ந்த பிறகு நின்று போனது. அவன் எங்கே இப்போது? ராஜா யோசித்தார்.
ராணி மாதிரியா, இல்லே என்னை மாதிரியா? லேசுப் பட்டவனா என்ன? அவன் படிச்ச படிப்பும், பார்த்தும் கேட்டும் கத்துக்கிட்டதும், கத்துக் கொடுத்ததும் அவனை இனியும் சுத்தித் திரியாம கொண்டு போய் நிலையா வச்சிருக்கும்.
ஆமா அதே தான் என்றான் சமையல்காரன் பழநியப்பன் சகலமும் கரை கண்ட இன்னொரு புஸ்தி மீசைக் கிழவனாக.
அட பயலே நீ இன்னும் வேறே லெக்குக்குப் போகலியா?
ராஜா கேட்கும் போதே தன் பிரியமான சமையல்காரனை சகல விதமான பிரியத்தோடும் விசாரிக்கும் குரல் சுபாவமாக வந்திருந்தது. அவனோடு அவருக்கு என்ன விரோதம். யாரோடு தான் என்ன பகை?
அரண்மனை வளாகத்தில் அவர் புகையிலைச் செடி பயிரிட்ட பூமியைச் சுற்றி கிடுகு வேலி போட்டு அடைத்து அரைக் கல்யாணத் தோதில் பந்தல் போட்டிருந்தது மட்டும் ராஜாவுக்கு ஒட்டும் பிடிக்கவில்லை.
கூரையும் பந்தலும் போட்டால், மதில் சுவரில் இருந்து எதிர் மதில் வரை வளைத்து, முழுக்க கிடுகு வேய்ந்து கொட்டகை போட வேண்டும். பார்க்க ஒரு கெத்தாக, ராஜா வசித்த இடத்துக்கும் அவருடைய நினைவுக்கும் கௌரவம் சேர்க்கிற மாதிரி கம்பீரமாக இருக்க வேணாமோ ஏற்பாடுகள் எல்லாம்?
செஞ்சிருப்பாங்க. அவகாசம் கிட்டலே அதான் போல, அரையும் குறையுமா ஆக்கி வச்சிருக்காங்க. போகுது. எல்லாம் நம்ம பிள்ளை, பேரப் பிள்ளை வகையறா தானே. நல்லா காரியம் எல்லாம் நடத்தி நல்லா இருக்கட்டும்.
ராணி வாழ்த்துச் சொல்லியபடி உள்ளே போனாள்.
கரகரவென்று சுழன்று அடுத்த ரெக்கார்ட், கட்டித் தங்கம் வெட்டியெடுத்து தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா என்று வெகு பவிஷாகப் பாடியது. ஒப்பாரி போல வருமா இது? ராஜா ஏக்கத்தோடு கேட்டபடி நின்றார். அது ஓய, ஊசி வைத்து முடுக்கி, அடுத்த பாட்டு இன்னும் இரைச்சலோடு ஆரம்பமானது.
ஓசைப்படாமல் மிதந்து கொண்டு திரும்ப வந்து சேர்ந்த மீசைக் கிழவன் ரிகார்டில் சுழலும் பாட்டுக்கு இசைவாக அபிநயம் வேறே பிடித்தபடி இருந்தான். ராஜகுமாரி, ரோஜா மலர், பக்கத்தில் வரலாமா என்று மனம் உருகிப் பாடும் ஆணும், கூடவே இங்கிதம் தெரியாமல் அதை முழுக்க அப்படியே ஒப்பிக்கும் பெண்களின் கூட்டமுமாக ஒரு சினிமாப் பாட்டு. ஊசி நடுவில் மாட்டி, வரலாமா வரலாமா வரலாமா என்று கீச்சிட, கிழவன் அதே படிக்கு விடாமல், முன்னால் வந்து வந்து, பின்னால் போய் ஆடிக் காட்டினான். ஆடற வயசா அவனுக்கு?
என்ன மாமா, அவனுக தான் கிறுக்குப் பய புள்ளேங்கன்னா உங்களுக்கு என்ன கெரகம்? ஆட்டமும் பாட்டமும் சிரிப்பாணியும் பொத்துக்கிட்டில்லே வருது.
ராஜா சொல்லச் சொல்ல அவர் முகத்தில் மறுபடியும் சிரிப்பு. ஆனந்தம். பழநியப்பன் மட்டும் இல்லை, இந்தக் கிழவனும் அடிப்படையில் நல்ல மாதிரித் தான். சேர்க்கை சரியில்லாமல் கிருத்துருமத்தோடு குழிக்குள் போனான். அவ்வளவே.
ஏன் மாப்பிள்ளே, இம்புட்டு கோலாகலமா நவராத்திரி எல்லாம் கொண்டாடுறாங்க. பழைய உசிருக்கெல்லாம் ஒரு மடக்கு கள்ளுத் தண்ணியோ சாராயமோ ஊத்தணும்னு தோணலியே. நீ எம்புட்டு பொறுப்பா சோசியக்கார அய்யன் கிட்டே எழுதி வாங்கிட்டு ஆள் அம்பு ஏற்பாடு செஞ்சு ஊத்தினே. அதுலே ஒரு துளி கெடச்சா கூட வேணாம்னா சொல்லப் போறேன். வாய்க்கலியே.
கிழவன் ஆட்டத்தை நிறுத்தாமல் சொன்னான்.
ஆக, குழிக்குள் கிழவன் போனது சகவாச தோஷத்தால் உண்டான வக்கிரமோ கிருத்துருமமோ உடன் கொண்டில்லை. நாட்டு சரக்கு, சீமைச் சாராயம், கள்ளுத் தண்ணி, கஞ்சா, அபின் உருண்டை என இன்னும் மாயாத ஆசையோடு தான்.
ராஜாவுக்கு பரிதாபமாக இருந்தது. இன்னும் எத்தனை காலம் இவன் உடுத்துக்கிட்டு ஆடிக்கிட்டு இங்கேயே சந்தோஷமா மிதக்கப் போறான் தெரியலை அவருக்கு. வந்திருக்கும் பயல்களில் யாருக்காவது முடியுமானால் இவனுக்கு மறுபடி தாகசாந்தி செய்விக்கலாம் என்று அவருக்கும் தோன்றியது.
அரண்மனை வாசலில் ஏதோ சத்தம். என்ன ஏது என்று புரியாமல் ராஜா பார்க்க, எல்லாம் தெரிந்த அறிவாளி, மீசையை நீவிக் கொண்டு மிதந்து முன்னால் வந்தான்.
வல்லார இத்யாதி, உன் மீசையை வழிச்செடுத்து செனைத் தேவாங்கு மாதிரி ஆக்கிடறேன் பாரு. ராஜா மனதில் கருவிக் கொண்டே என்ன மாமா என்றார்.
அதென்னமோ, ஒரு வினாடி இவன் மேல் பிரியம் வந்தால், அடுத்த வினாடி நாக்கை மடித்து வசவு எறியத் தோன்றுகிறது.
அரண்மனை வாசலில் சத்தத்துக்குக் காரணம் கண்டு வந்த கிழவன் சொன்னான் –
கல்யாணம் கருமாதிக்கு சோறு போடற மாதிரி இந்தப் பார்ப்பான் ஒரு நூத்தம்பது பேரை வரச் சொல்லியிருக்கான் வைபவத்துக்கு. ஆரம்பிக்க முந்தி, எல்லோருக்கும் வடையும், இடியாப்பமும், தோசையும், காப்பித் தண்ணியும் கொடுக்கறதா ஏற்பாடு. ஓட்டல் அய்யன் அதெல்லாம் பண்ணி எடுத்து வந்து உச்சிப் பகலுக்கே இறக்கிட்டான். தவல வடையும், சுவியனும் நல்லா இருக்கவே, ஊர்ப்பட்ட கூட்டமும் இங்கே தான். வராதீங்கடா, திங்கத் தர ஒண்ணும் இல்லே, சட்டியும் பானையும் தான் இருக்குங்கறான் அவன். வந்தவனுங்கள்ளே, தீனி வேணாம்னு திரும்பிப் போகிறவனா ஒருத்தனும் இல்லே. அவனுங்க கூட்டுற சத்தம் அது. புத்தகம் போட்டு கூட்டம் நடத்த தவலை வடையும் வெங்காய வடையும் என்ன எளவுக்கு? சாராயம் ஊத்தினாலும் சன்மத்துக்கும் புண்ணியம்.
தவலை வடை, வெங்காய வடை, உளுந்து வடை, ஆமை வடை, மிளகு வடை, கீரை வடை. கிழவனுக்கு அய்யர் மூலம் கள்ளுத் தண்ணி ஊற்றலாம் என்றால் ராஜாவுக்கும் யாராவது இதில் ரகத்துக்கு ஒண்ணாவது ருசிக்கத் தரலாம்.
மாமா. நீங்க போய்ச் சேர்ந்தபோது என்னமா சமைச்சுப் போட்டான். பூணூல் இல்லே உடம்பிலே. ஆனா, அருமையான சமையல் அய்யன் அவன். புளிக்குழம்பும், வாழக்கா கறியும், சுவியனும், வடையும், தோசையும், லட்டு உருண்டையும், காரசேவும், தேங்குழலும், அதிரசமும். அடடா அடடா அடடா.
ராஜா உற்சாகமாகச் சொல்ல, புஸ்தி மீசைக் கிழவன் நமட்டுச் சிரிப்போடு கேட்டான் – ஏன் மாப்பிள்ளே, இன்னொரு வாட்டி போய்ச் சேரச் சொல்றீகளா?
ஐய்யே நான் அப்படி எல்லாம் சொல்வேனா என்ன? அந்த விருந்து அமோகம்னு சொல்ல வந்தேன். ராஜா பின் வாங்க, ஒரு பெரிய கூட்டமாக வந்த பள்ளிக்கூட வாத்தியார்களும், நீதிமன்ற குமாஸ்தாக்களும், சில கன்யாஸ்திரிகளும், வயதான குடும்ப பெண்களும் கூச்சலாகச் சொன்னார்கள் –
விருந்தும் வேண்டாம். மற்றதும் வேண்டாம். கீர்த்தனை கவனப்படுத்தறவங்களையும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் பின்முடுகு வெண்பாவும் எழுதறவங்களையும் பார்க்கறதே அபூர்வமான காலம். ஒருத்தர் பழங்காலத்திலே எழுதி, இன்னொருத்தர் அதைச் செப்பனிட்டு ராகக் குறிப்பு சேர்க்க, மூணாமவர் அதைப் பாட சங்கீத நோட் எழுதிச் சேர்க்க, இன்னொரு சின்ன வயசுப் பொண்ணு அதை எல்லாம் அந்தப்படிக்கு கானம் பாட, இதெல்லாம் எல்லாம் எல்லாம் கிறிஸ்துநாதர் மேலே இருக்க. இந்த அருமையான வைபவத்துக்கு வந்தோமேயல்லாமல், தவலை வடைக்கும் பூண்டுத் தொகையலுக்கும் வரல்லே நாங்க. சந்தை கூடும்போது தமுக்கு போட்டு அறிவிச்சதால் வந்தோம். வடை தீர்ந்து போகுதேன்னு விசனப்படாம, வைபோகம் நடக்க விடுங்க தயவு செய்து. எத்தனை வடை வேணும் சொல்லுங்க. பக்கத்துலே ஓட்டல்லே உங்களுக்கு ரசவடை வாங்கி வரச் சொல்கிறோம்.
அவர்கள் தியாகராஜ அய்யனிடம் தெரிவித்தபடி உள்ளே போக அது சரிதான் என்றார் ராஜா. அவர் சுற்றிலும் பார்க்க, அவரும் பழநியப்பனும் மட்டும் தான் நின்று கொண்டிருந்தார்கள்.