என் ‘லண்டன் டயரி’ நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம் வெளியீடு)
சாயந்திரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக்க நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரஞ்சு நண்பர்கள் இருவர்.
விடுமுறை நாள் இது. காலையிலிருந்து திரைப்பட விழா கொண்டாடி, ராபர்ட்டோ ரோஸலினி, லூயி புனுவல், பெட்ரோ ஆல்மடோவார் என்று திரையுலகச் சிற்பிகளின் படங்களை வரிசையாகப் பார்த்து முடித்து, விவாதித்தபடியே மதுக்கடையில் நுழைந்திருக்கிறோம்.
“மதுக்கடை வினாடிவினா நடக்கப் போகிறது. நீங்களும் பங்கேற்கிறீர்களா?” என்று விசாரிக்கிறார் கடை உபசரிப்புப் பெண். “இல்லை; ஆளுக்கொரு கோப்பை ஒயின் போதும்” என்று சிரித்தபடி தலையசைக்கிறார் நண்பர் பாஸ்க்யூல். இத்தாலிய உச்சரிப்பில் அவருடைய ஆங்கிலம் மென்மையான சங்கீதம் போல் ஒலிக்கிறது.
“லூயி புனுவல் சினிமாவின் விஷ¤வல் சர்ரியலிசத்தில் சால்வடார் டாலி ஓவிய பாதிப்பு”. பிரஞ்சு நண்பர் அந்த்வான் விவாதத்தைத் தொடர, நான் கைகாட்டி நிறுத்துகிறேன். “இன்றைக்கு முழுக்க இலக்கியத்தரமான சினிமாவை சுவாசித்து. பகல் சாப்பாட்டோடு மென்று, குடிதண்ணீரோடு கலக்கிக் குடித்தாகிவிட்டது. வேறே ஏதாவது பேசலாமே. உதாரணமாக இந்த மதுக்கடை பற்றி, அந்த தேம்ஸ் நதி பற்றி”.
“அது தேம்ஸ் இல்லை, டெம்ஸ்”, இத்தாலிய நண்பர் சிரித்தபடி குவளையை உயர்த்துகிறார். சினிமா வரலாற்றோடு, லண்டன் சரித்திரமும் முழுக்கத் தெரிந்தவர்.
“ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜ்க்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்”. ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லை என்பதால் இன்றைக்கும் அதிகாரபூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்.
இளங்கோவடிகள் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், ‘நடந்தாய் வாழி தேம்ஸ்’ என்று அந்த நதியைப் பெண்ணாக உருவகித்துப் பாடியிருக்க முடியாது. காரணம், இந்த நாட்டுப் பாரம்பரியப் பிரகாரம் தேம்ஸ் நதி ஆண். நதியம்மா இல்லை. நதியப்பா.
அப்பாவோ, அம்மாவோ, ஆயிரம் வருடத்துக்கு மேலாக தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் குடியிருக்கிறார்கள். அதில் படகு ஓட்டிப் போகிறார்கள். நூற்றைம்பது வருடம் முன்புவரை தேம்ஸில் குளித்திருக்கிறார்கள். மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் பல தொழில் நடத்தி, நதியை அங்கங்கே தேங்கி நிற்கச் செய்திருக்கிறார்கள்.
1666-ம் வருடம் லண்டனில் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டு மூன்று நாள் தொடர்ந்து ஊரே பற்றி எரிந்தது. அப்போது கூட இருக்க இடம் கிடைக்காமல், லண்டன் பாலத்தில் இரு பக்கத்திலும் வரிசையாகக் கூரை எழுப்பிக் கீழ்த்தட்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். பாலத்தில் வீடு கட்டி தண்ணீருக்கு மேல் இருந்ததாலோ என்னமோ ஊரை எல்லாம் அழித்த அந்த நெருப்பு பாலத்தில் ஏறாமல் நின்றுவிட்டது.
ஆனாலும் நதிக்கரையிலும், நதிக்குக் குறுக்கே ஆற்றுப் பாலத்திலும் சகலரும் இஷ்டத்துக்கு அசுத்தம் செய்ய, அந்தக் கால தேம்ஸ் இந்தக்காலக் கூவம் போல் மணக்க ஆரம்பித்தது. காற்று அதிகமான நேரங்களில் லண்டன் முழுக்க இந்த சுகந்த பரிமள வாசம் நிறைந்து பரவ, மக்கள் மூக்கைக் கையால் பொத்திக்கொண்டு நடைபயில வேண்டிப் போனது. அந்தப்படிக்கே சாப்பிடவோ அல்லது அதைவிட முக்கியமாக மதுக்கடையில் பியர் குடிக்கவோ கஷ்டமாக இருந்ததால் அரசாங்க அலுவலகங்களில் புகார் மனுக்கள் குவிந்தன. 1858-ம் வருடம் ஒரு பகல் பொழுதில் தேம்ஸ் நதியில் எழுந்த உச்சபட்ச வாடை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகுந்து அடர்த்தியாகக் கவிய, எதிர்க்கட்சி மட்டுமில்லை, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து உடனடியாக வெளிநடப்பு அல்லது வெளியோட்டம் செய்ய வேண்டி வந்தது. உலக சரித்திரத்திலேயே கழிவுநீர் வாடை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிவந்தது முதல்தடவையாக அப்போதுதான்.
இத்தாலிய நண்பர் டெம்ஸ் நதியின் பழங்கதையைச் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருக்க, எந்த வாடையும் இல்லாது, பளிங்கு போல் தண்ணீரோடு சுத்தபத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக்கால தேம்ஸை நினைத்துப் பார்க்கிறேன். இருபது கோடி லிட்டர் சுத்த நீர். காஸ்டோல்ட் பகுதியில் பிறந்து வடகடலில் கலக்கிறவரை மாசுமறுவற்று ஓடுகிற ஆற்றில் ஒரு தேங்கலோ அடைப்போ அசுத்தமோ கிடையாது என்று நண்பர் சொல்லும்போது ‘எங்க தலைநகரத்துலேயும் இப்படி ஒரு ஆறு இருக்கு’ என்கிறேன். இத்தாலிய நண்பர் இப்போதைக்கு சென்னை வரப்போவதில்லை என்பதில் ஒரு ஆறுதல்.
மதுக்கடையில் ‘பப் க்விஸ்’ என்ற வினாடிவினா ஆரம்பமாகிறது. மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?
“தேம்ஸ் நதியில் ஒருகாலத்தில் மீன்பிடிக்கும் தொழில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பெரிய வலை விரித்துப் பெரிய மீனைப் பிடிப்பது போதாமல், ஆகக் குறுகிய வலை நெய்து சின்னச் சின்ன, வயதுக்கு வராத மீனை எல்லாம் வாரி எடுப்பது தொடர்ந்தது. சட்டம் போட்டு வலை சைஸ் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இப்போது தேம்ஸில் மீனே கிடைப்பதில்லை. ஆனால் அன்னப்பறவை அவ்வப்போது தட்டுப்படும். அதை வேட்டையாடத் தடை உத்தரவு அமலில் உள்ளது. அன்னப்பறவை மாமிசம் சாப்பிட இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. எலிசபெத் ராணியின் அம்மா மகாராணி இரண்டு வருஷம் முன்னால் அன்னம் ரோஸ்ட் சாப்பிட்டுவிட்டுத்தான் கடைசி மூச்சை விட்டார் ” நண்பர் தேம்ஸ் கதையைத் தொடர்கிறார். அந்த அன்னத்துக்குப் பதிலாக சுடச்சுட சீரகச் சம்பா அன்னம், சாம்பார், கீரை மசியல் சாப்பிட்டிருந்தால் ராணிப்பாட்டி இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று தோன்றுகிறது.
“சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பிரதமர் யார்?” மதுக்கடை வினாடிவினா நடத்துனர் நிறுத்தி நிதானமாகக் கேட்கிறார். சாயந்திரம் பத்திரிகை படிக்காமல் போனது நினைவு வர, பதறுகிறேன்.
“1812-ம் வருடம் மே பதினொண்ணாம் தேதி நாடாளுமன்ற வராந்தாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்பென்சர் பெர்சிவல்” விக்கலுக்கு நடுவே ஒரு குடிமகன் பியர் கோப்பையை உயர்த்திச் சொல்லிய விடை சரியானதாக அறிவிக்கப்படுவதைக் கேட்டபடி வெளியே வருகிறேன்.