உங்கம்மா சுமங்கலியாப் போயிட்டா. அப்பாவும் தீர்க்காயுசா இருந்து கல்யாணச் சாவு தான். பித்ரு காரியத்தை மட்டும் குறை வைக்காம பண்ணு. மாசாந்திரம் அமாவாசைக்குப் பண்ணாட்டாலும் பரவாயில்லே. இது வருஷ முடிவிலே வர்றது. அனிவர்சரி. மேரேஜுக்கு கொண்டாடறது மாதிரி ஜாம்ஜாம்னு செய்ய வேண்டிய காரியம். உங்கப்பாவும் சந்தோஷப்படுவார் கேட்டுக்கோ. ஷேமமா இரு.
சீனு வாத்தியார் காலையில் வந்ததும் தெற்கிலிருந்து திவசத்துக்கு மூதாதையர் சகிதம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த சாமாவுக்கும் கேட்கிற சத்ததில் இரைந்து ஆசிர்வாதம் சொல்லி, ஆத்துக்காரியை வரச் சொல்லு என்றார்.
நான் மட்டும்தான் வந்திருக்கேன்.
பம்மிப் பதுங்கிச் சொன்னான் சின்னச் சங்கரன் அப்போது.
சாஸ்திர விரோதமாகத் தான் எந்த நல்ல, அல்லாத காரியத்தையும் இந்த ஜன்மம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கிற இந்த அறுபத்து ரெண்டு வயசு வரை நடத்தி வைத்ததில்லை என்றும் இனி இருக்கக் கூடிய சொற்ப காலத்திலும் அந்த சீலத்தை மாற்ற உத்தேசம் இல்லை என்றும் இன்னும் பெருஞ்சத்தமாக, சாமா விதிர்விதிர்க்கவும், கூட வந்தபடி இருக்கும் முன்னோர்கள் இது ஏதடா ஏடாகூடமாச்சே, நிலைமை சரியாக என்ன செய்யணுமோ என்று மருகவுமாகச் சொன்னார் சீனு வாத்தியார்.
தியாகராஜ சாஸ்திரிகள் தான் கை கொடுத்தார். தில்லியில் வீட்டு வாசல்படி தாண்டி நகர முடியாதபடி சின்னச் சங்கரன் பெண்டாட்டியின் – மாமி பெயரென்னடா – வசந்தா. வசந்தலட்சுமி உடம்பு ஸ்திதி கொஞ்சம் காஸிங் கன்சர்ண். டாக்டர்கள், சங்கரனும் அங்கேயே இருந்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கண்டிப்பாகச் சொன்னாலும், அக்கம் பக்கத்தில் சொல்லி வைத்து விட்டு, வீட்டோடு இருக்க நர்சம்மாவையும் பெரும் செலவில் அமர்த்தி விட்டு சங்கரன் இங்கே வந்தான். ஆபீசில் லீவு கிடைக்காமல் கடைசி நிமிஷத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு புறப்பட்டது, மூணு ராத்திரி ரெண்டு பகல் முழுக்கக் கூட்டமான ரயிலில் நின்றும், கக்கூஸ் பக்கம் ஈரத் தரையில் உட்கார்ந்தும் மெட்றாஸ் போய்ச் சேர்ந்தது, மெட்றாஸில் இருந்து பல பஸ் மாறி ராத்திரி முழுக்கத் தூங்காமல், முழங்கால் வீங்கி உடம்புச் சூட்டில் கண் பொங்கி, தலைக்குள் குடைச்சலான அவஸ்தையோடு அரசூருக்கு வந்து சேர்ந்தது எல்லாமே இங்கே வைதீக காரியம் முடங்காமல் நடத்தித் தரத்தான் என்று ஏகத்துக்கு சங்கரனின் அவஸ்தைகளைப் பட்டியலிட்டார் தியாகராஜ சாஸ்திரிகள். அதில் பலதும் சங்கரனே அறியாதது.
புரோகிதத்துக்கான தட்சணையைக் கணிசமாக உயர்த்தும் உத்தேசத்தோடு சங்கரன் வந்திருக்கிறான். கோதானம் கொடுக்கவும் பணமும் மனமும் உண்டு. வெங்கடாசலக் கோனாரிடம் சொல்லி வைத்து அவர் காராம் பசுவோடு வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பணம் கொடுத்து பசுவை வாங்கித் தானமாக சீனு வாத்தியாருக்குக் கொடுத்து, ஒரு மணி நேரம் கழித்து சீனு வாத்தியார் கோனாருக்கே, வாங்கினதுக்கு ஐம்பது ரூபாய் குறைவாகப் பசுவை விற்று விடலாம். இதையெல்லாம் உத்தேசித்து, ஒரு தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதை சின்னச் சங்கரன் பெண்டாட்டியாக சங்கல்பித்து, ஆத்திர அவசரத்துக்குத் தோஷமில்லை என்றபடி, எடுத்த காரியத்தை நல்ல படிக்கு நிறைவேற்றி முடிக்க வேண்டியது தான்.
போறது, இவரோட அப்பா சாமா தங்கமான மனுஷர். அப்பேர்க்கொத்தவர், திதிக்கு வந்துட்டு பசியோடு திரும்பினா, என்னடா வைதீகன் நீன்னு என்னையில்லையோ சபிப்பார்? தாங்குவேனா?
சீனு வாத்தியார் அதிகமாகவே நடுநடுங்கி வசந்தியைத் தருப்பையில் சங்கல்பித்து மளமளவென்று வருஷாப்திக காரியத்தை நடத்திப் போய்க் கொண்டிருக்கிறார்.
மீதி இருக்கப்பட்ட நெய்யை எல்லாம் அக்னியிலே விட்டுடுப்பா. எலை போடச் சொல்லு.
சீனு வாத்தியார் அறிவித்ததற்குப் பத்து நிமிஷம் கழித்து வைதீகர்கள் சாப்பிட்டுத் திருப்தி அறிவித்து வாசலுக்குப் போக, கொம்பில் ஜவந்திப் பூ சுற்றி, நெற்றியில் குங்குமம் வைத்து நின்றிருந்த பசு மாடு தானமாகியது.
தெருவில் இருந்த, சாமாவுக்கும், புகையிலைக்கடை குடும்பத்துக்கும் வேண்டப்பட்ட ஒரு முப்பது பேர் பேச்சு நெடுக சுவாதீனமாக சாமாவை நினைவு கூர்ந்தபடி, பெரிய இலையில் விளம்பப்பட்ட நேர்த்தியான வாழைக்காய்ப் பொறியல், கொத்தவரங்காய்க் கறி, அவரைக்காய்க் கூட்டு, பாகற்காய்ப் புளிக்கூட்டு, இஞ்சித் துவையல், வெல்லம் போட்ட பாசிப்பருப்புப் பாயசம், பால் திரட்டுப் பால், எள்ளுருண்டை, உளுந்துவடை, அப்பம், மிளகூட்டான், புத்துருக்கான நெய், சம்பா அரிசிச் சாதம், சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு, மிளகரைத்த காரக் குழம்பு, ரசம், தயிர்ப் பச்சடி, மாங்காய்ப் பச்சடி, சேனை வறுவல், கெட்டியான மோர், பலாச் சுளை, வாழைப்பழம் என்று ரெண்டு பந்தியாக இருந்து, திருப்தியாக உண்டு முடித்துக் கிளம்பிப் போனார்கள்.