பசுவன்
1)
காஞ்சங்காட்டு யட்சி.
சத்தம் போட்டுச் சொன்னான் சிவராமன். அவன் என்ன சொன்னாலும் அதைத் திருப்பி ரெண்டு மூணு தடவை சொல்ல ஒரு கோஷ்டி காத்திருக்கும். இருந்தது. அந்தப் பையன்கள் பம்பரம் விட்டுக்கொண்டே, ”அச்சி காஞ்சங்காட்டு அச்சி”, என்றார்கள்.
”அச்சி இல்லேடா. யட்சி”.
சிவராமன் அவசரமாக அவர்களைத் திருத்தினான்.
அவனுக்கே சந்தேகம். அச்சி தானோ. போகட்டும். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்பார்கள். அவன் நில் என்றால் தரையில் மண்டி போட்டு நரநரப்பான மணல் முழங்காலில் குத்த அவர்கள் நடப்பார்கள். கால் வளைந்தாலும் அவர்கள் எல்லோரையும் விடப் பெரிய பையன் அவன். லீடர். சாப்பிட சாயந்திரங்களில் ஏதாவது கொண்டு வந்து பகிரும் ஹோட்டல்காரப் பிள்ளை. தூள் பக்கோடாவோடு ஆஜராகி இருக்கிறான். யட்சி பற்றி எல்லாம் தெரிந்தவன்.
திடீரென்று ஊர்ப் பேச்சில் ஒரு யட்சி நுழைந்திருக்கிறாள். போன வாரம் பக்கத்து ஊரில் ஒரு பதிமூன்று வயதுப் பையன் ராத்திரி லவகுசா சினிமா பார்த்து விட்டுத் தனியாக வந்தபோது காஞ்சங்காட்டு ரோடில் பின் தொடர்ந்து வந்த அழகான யட்சி மயக்கி ரத்தம் முழுக்க எடுத்துக் கொண்டு, மதுரை பைபாஸில் கொண்டு வந்து கிடத்தி விட்டதாக ஊர் முழுக்க வதந்தி. அது விட்டலாச்சார்யா படம் மாய மோதிரம் போய்விட்டுக் கிறக்கத்துடன் திரும்பி வந்த செக்கன் என்று இன்னொரு வதந்தியும் உண்டு.
விட்டலாச்சார்யா படத்தில் வரும் சினிமா யட்சி போன்ற பெண் ’கட்டிக்கோ இறுக்க கட்டிக்கோ’ என்று குதிக்கும்போது டூரிங் டாக்கீஸ் வட்டாரமே அதிரும். ரெண்டு சினிமா டூரிங் தியேட்டர் இருப்பதால் விட்டலாச்சார்யா படம் ஓடும் தியேட்டருக்குப் போனதாகச் சொல்லாமல் அடுத்த தியேட்டர் பெயரைச் சொல்வது எல்லா வயதுக்கார ஆண்களுக்கும் வழக்கமாக இருந்தது. ஒரே நேரத்தில் புராணக் கதைப்படமும், கவர்ச்சி ஆட்டப் படமும் இரண்டு தியேட்டர்களிலும் காட்சிக்கு வருவதில்லை என்பதால் கௌரவமானவர்கள் எப்போதும் தகுந்தபடி சொல்ல முடிந்தது.
எது எப்படியோ, ஒரிஜினல் யட்சி வந்த பிறகு சினிமா தியேட்டர் போவது குறைந்து போனது. ராத்திரி எட்டு மணிக்கு வீடே ராச்சாப்பாட்டை அவசர அவசரமாக முடித்து உறங்க ஆரம்பித்தது.
பத்து வயதுக்கு மேற்பட்ட பையன்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் வாசல் நிலையில் வேப்பிலை செருகி யட்சியை திருப்பியனுப்ப முனைந்தார்கள். பையன்கள் மட்டுமில்லாமல் வீடு முழுக்க வேப்பெண்ணெய் பூசி ராத்திரி படுத்துறங்கியது. யட்சிக்கு வேப்பிலையும் வேப்பெண்ணெயும் பிடிக்காதாம்.
இருபது வருடத்துக்கு ஒரு தடவை யட்சி வந்துவிடுவாளாம். டாக்டர் மாமா சொன்னார். அவருக்குக் கல்யாணமான வருஷம் யட்சி பற்றி ஊர் பூரா பேச்சாக இருந்ததாகச் சொன்னார். அப்போது அவள் வலதுகை ஆள்காட்டி விரலை முரிக்கிற யட்சியாம். சலவைக்காரனுக்கு துணியிலே நீலம் படர்ந்து பிடிக்கவில்லை என்றால் ஊர் முழுக்க வதந்தி கிளப்பி விடுவதும், அது பரவப் பரவ, கால்வாயில் துவைக்கும் துணியில் பச்சென்று நீலம் ஒட்டி பளிச்சென்று துணி வெளுப்பது நடக்குமாம். டாக்டர் மாமா தான் சொன்னார்.
யட்சி வதந்தி இல்லை என்று போகிற போக்கில் சொன்னார் அவர். யட்சியை மட்டுமில்லை, சலவைக்காரனையும் இந்தப் பொடியன்கள் கவனித்துப் பார்த்தது இல்லை. பசங்க துணியை யாரும் சலவைக்குப் போடுவதில்லை. எல்லா அழுக்கோடு அழுக்காகக் குவித்து, செல்லம் சவுக்காரம் போட்டு, கட்டையில் சுற்றி ஓங்கி நாலைந்து தடவை துவைக்கிற கல்லில் அடித்துத் துவைப்பதுதான் வழக்கம்.
”சரி வாங்கடா, இருட்ட ஆரம்பிச்சுடும். வேகமா இன்னொரு ரவுண்ட் குத்து பம்பரம் போடலாமா?”.
ராமஜெயம் கால் கட்டை விரலால் தரையில் சுமாரான வட்டம் போட்டபடி சொன்னான். அதற்கு ஆறடிக்கு அப்புறம் இடதுகைப் பக்கம் தள்ளி இன்னொரு வட்டத்தை சிவராமன் தரையில் அவசரமாக வரைந்தான்.
”யாரோட பம்பரம் ஆக்கர் வாங்கப் போறது?”.
சிவராமன் கேட்டபடி தன் சாட்டைக் கயிற்றை எச்சில் படுத்தி பம்பரத்தைச் சுற்றி இறுக்கி அதைத் தரையில் வட்டத்துக்குள் ஓங்கிக் குத்தினான். மற்ற பம்பரங்களும் அவற்றை இறுகிச் சுற்றியிருந்த நனைந்த சாட்டைக் கயிறுகளும் விர்ரென்று சுழன்று, செம்மண் தரையில் ஏழு பம்பரங்கள் ஆட ஆரம்பித்தன.
“கோஸ் எடுக்க வட்டம் சரியாத் தெரியலேடா”, என்றான் வெங்கிட்டு. ஆட்டம் நின்று வட்டத்தைக் கொஞ்சம் தள்ளி வரையக் கால்கள் பரபரத்தன.
பதிமூன்று வயது பம்பரம் விளையாடும் வயது இல்லைதான். இல்லை என்றால் வேறு என்ன உண்டு? கால் பந்து நிறைவேறாத கனவு. பேட்மிட்டன் யாராவது நகரத்தில் விளையாடும் போது வேடிக்கை பார்த்து, இறகுப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு ஓடி வருவது மட்டும். கிரிக்கெட் தெரியாது. எல்லாம் ஏகத்துக்குச் செலவு வைக்கும் விளையாட்டுகள். யாரும் காசு தர மாட்டார்கள்.
பெரிய வீடுகளில் கூட இதுதான் நிலைமை. பதினைந்து வயதுவரை பம்பரமும் கோலியும் விளையாடி விட்டு, முகத்தில் பரு அரும்ப ஆரம்பித்ததும் வேட்டி கட்டிக்கொண்டு சைக்கிள் பழகி, நடந்தோ சைக்கிளிலோ ஊரைச் சுற்றி நேரத்தைப் போக்குவதாக சாயங்காலம் கழிந்து போகும்.
கமலியும், அவளோடு சாயந்திரம் ஊருணியில் தண்ணீர் எடுக்க எப்போதும் கூட வரும் பெண்களும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது கண்ணில் படப் பையன்கள் அவர்களை சாயந்திர வெய்யிலில் கண் சுருக்கி வெறித்தார்கள்.
”யட்சி இப்படி இருப்பாளா?”.
கமலியை விரலால் சுட்டிக் காட்டாமல் பார்வையால் சிவராமனைக் கேட்டான் ஒருத்தன்.
“இன்னும் உயரமா இருப்பா. தலைமுடி தரை வரைக்கும் இருக்கும். ஜோசியர் மாமி மாதிரி நீளமாக வளர்ந்த நரைச்ச தலை இல்லே. நல்ல கறுப்பு”, சிவராமன் சொன்னான்.
“சரி இப்போதைக்கு இப்படி வச்சுக்கலாம். கிட்டத்தட்ட யட்சி கமலி ஜாடை”.
வெங்கிட்டு சொன்னான். ’ஜாடை எல்லாம் எப்படி உனக்கு தெரியும்?’, அத்தனை பசங்களும் அவனுக்கு ஆக்கர் போட்டார்கள்.
சிவராமன் கொடுத்த தூள் பக்கோடாவை மென்றபடி அவர்கள் யட்சியை அலசினார்கள்.
”அப்புறம்?”
இது பையன்கள் ஆவலோடு பேச்சைத் தொடரத் தொடுக்கும் கேள்வி.
“அப்புறம் விழுப்புரம் தான்”.
“இதானே வேணாம்கிறது. சொல்லு சிவராமா”.
“அப்போ கேளுங்கடா. யட்சிக்கு சுப்பா சாஸ்திரிகள் மாதிரி ரெண்டு தோளுக்கும் நடுவிலே பெரிசு பெரிசா வீங்கியிருக்கும்”.
பூடகமாகச் சொல்லி சிரிப்பை ஆரம்பித்து வைத்தான் சிவராமன். காலேஜ் போக இருக்கும் பெரிய பையன்கள் ஆற்றங்கரைத் தோப்பில் ஒளிந்து மறைத்து சிகரெட் குடிப்பது போல பசங்கள் யட்சி வர்ணனையில், தப்பு செய்யும் முழு ஈர்ப்போடு ஈடுபட்டார்கள்.
தொடர்ந்து வந்த கேள்வி, ’தனியா மாட்டிண்டா என்ன பண்ணுவா?’. இது பெரியவர்களுக்கேயான ரகசியமான, இதுவரை அனுபவித்து அறியாத கேளிக்கை பற்றிக் கற்பனையை விரிக்கும் நேரம். அதைத் தொடங்கி வைக்கும் குறுகுறுப்புக்காகவே கேள்வி கேட்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.
”சொன்னேனேடா”.
“இன்னொரு வாட்டி சொல்லேன்”.
“தனியா மாட்டிண்டா இறுகக் கட்டிண்டு மடியிலே உக்கார்ந்துப்பா. முத்தம் கொடுப்பா. அப்புறம் ..”
“அப்புறம்?”
“இடது கை ஆள்காட்டி விரல் இருக்கு இல்லே அதை வாயில் வச்சு உறிஞ்சுவா அந்த யட்சி. பீச்சாங்கை”.
“அது நாத்தமா இருக்குமே”.
“இருக்கட்டுமே. உனக்கு என்ன போச்சு? யட்சிக்குப் பிடிச்சிருக்குன்னா ஓகே தான். அவள் அதை முழுக்க எச்சப் பண்ணிட்டு வெடுக்குனு கடிப்பா. சரியா? அப்புறம் ரத்தம் கொட்டக் கொட்ட அதைத் தரையிலே சிந்தாம ஆறின காப்பி குடிக்கற மாதிரி மடமடன்னு குடிப்பா..
வெண்டைக்காய் முனை முறிக்கற மாதிரி பட்டீர்னு .. விரல் பிஞ்சு போய் அவ வாயிலே இருந்தாலும் சுகமா இருக்குன்னு கண்ணை மூடிண்டே அவ பின்னாலே போய்ண்டிருப்போம்”.
“இடது கை ஆள்காட்டி விரல்லே என்ன விசேஷம்?”.
“ஒரு விசேஷமும் இல்லை. எந்த விரல்னாலும் சரிதான்”.
“அது நீளமா இருக்கணும். அப்படித்தானே?”.
சிவராமன் பதில் சொல்லவில்லை. எல்லாருக்கும் எல்லாம் புரிகிறது.
”கட்டக் கடோசி ஆட்டம்டா”. சிவராமன் ஓங்கிக் கத்தினான்.
ஏய்ய்ய் என்று சிரித்தபடி அவர்களுடைய பம்பரங்களைத் தரையில் குத்தி எறிந்து சுழல விட்டார்கள். கமலி மெல்ல நடந்து பக்கத்தில் வந்து கொண்டிருந்தாள்.
யார் பம்பரமோ ஊருணியில் தண்ணீர் எடுக்கக் குடத்தோடு வந்திருக்கும் அவள் முந்தானைக்கு மேலே பட்டுத் தெறித்து விட்டது. அந்தப் பம்பரம் திரும்பப் போவதற்கு முன் கமலி அதைக் கையில் பிடித்து வெறும் குடத்துக்குள் போட்டுக்கொண்டு விட்டாள்.
“முடிஞ்சா எடுத்துக்குங்கடா”.
குறுகுறுப்போடு பதினைந்து வயது கமலியை பார்த்தபடி ’பம்பரத்தை கொடு’, ’பம்பரத்தைக் கொடு’, என்றனர் கூட்டமாக. பம்பரத்தைக் கொடு அக்கா என்று போன வருஷம் கேட்டிருப்பார்கள். இப்போது கூப்பிடத் தோன்றவில்லை. குடத்தைச் சாக்கு வைத்துப் பக்கத்தில் அவள் மார்பை வெறித்துப் பார்க்க மட்டும் ஆசையாக இருக்கிறது.
”ஒழிஞ்சு போங்கடா”.
கமலி ஈரமான பம்பரத்தைத் தூக்கிப் போட்டபடி ஊருணியை நோக்கி நடந்தாள். தண்ணீர் மொண்டு, சற்றே உயர்த்திக் கட்டிய பாவாடைக்கு வெளியே ஊருணியின் செம்மண் துகள்கள் ஒட்டிய ஈரக் கால்கள் மினுமினுக்க, அவள் படியேறும்வரை பார்த்தபடி நின்றிருந்தார்கள் அவர்கள்.
அத்தனை பேரும் அவளை வெறிப்பதை அறிந்து பார்வையைத் தாழ்த்தியபடி பெருமையோடு நடந்து வந்தாள் கமலி. கொஞ்சம் பின்னால் அவளோடு தண்ணீர் எடுக்க வந்த தோழிகள்.
‘சுப்பா சாஸ்திரிகள்’.
வெங்கிட்டு கிசுகிசுத்தான். சிவராமன் ரகசியமாக ’அவங்கப்பா’ என்று சொல்ல பையன்கள் சிரிப்பை அடக்க முடியாமல் குரல் எழுப்பாது சிரித்தார்கள். குடத்தில் தண்ணீரோடு அந்தப் பெண்கள் கடந்து போக வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். இவன்கள் பம்மிப் பம்மிப் பின்வாங்க, கமலியும் இதர சிற்றாடைக் குட்டிகளும் துணிச்சலோடு அடி முன்னால் எடுத்து வைத்து ”டேய் பசங்களா” என்று இவன்களை விளித்து ”இருட்டிக்கிட்டு வருது, யட்சி துரத்தி வந்து இறுக்கிக் கையிலே பிடிச்சு இழுத்துப் போய் காலத்துக்கும் முதுகு தேய்ச்சுக் கழுவி விட வச்சுடுவா, சீக்கிரம் வீட்டுக்குப் போய் அடங்குங்கடா” என்று சிரிப்பும், சிங்காரமும் மறைமுகமாக விதைத்தபடி நடந்து போனார்கள். அந்தப் பெண்களுக்கும் யட்சி பற்றி நிறையக் கற்பனைகள் உண்டு.
யட்சியும் யட்சிக் கதைகளும் ஊரெங்கும் புழங்கி வந்த காலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்ததை அங்கங்கே கொஞ்சம் புதிதாக ஒட்ட வைத்து திரும்பத் திரும்ப சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது நடக்கிறது. வயசுக்கு வந்த பெண்களுக்கும் சின்னப் பையன்களுக்கும் அவரவர் அணியாகக் கூடி இருக்கும்போது எங்கே தொடங்கி எங்கே அரைகுறையாக நிறுத்திச் சேர்ந்து சிரிப்பது என்று சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
”சீத்து பசுவன் வராண்டா”.
பம்பரத்தைத் தொளதொளவென்று தைத்த நிஜார்ப் பையில் பதுக்கியபடி கிட்டு சொன்னான்.
“நாளையிலே இருந்து அவனைச் சுத்திச் சுத்தி வந்து பொண்ணுங்க எல்லாம் பசுவா பசுவான்னு பாடிக் கோலாட்டம் போடும். கன்னத்தை தடவி விடும். முத்தம் கூடக் கொடுக்கும். ஜாலிடா”,
சிவராமன் கிண்டலும அசூயையுமாகச் சொல்லியபடி நடந்தான்.
சீத்து கோவில் வாசல் கருப்பன் தேரடிப் பக்கம் நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கடந்து போன தண்ணீர்க் குடம் சுமந்த குமரிகள் விளையாட்டாக உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் வார்த்து அவன் மேல் விசிறியபடி மெல்ல நடந்தார்கள். உடுத்திக் கழித்துக் கட்டிய, காலை இறுக்கிப் பிடிக்கும் கருப்பு நிஜாரும், பொம்மை போட்ட இறுக்கமான சட்டையுமாக வந்து கொண்டிருந்தான் அவன். சட்டை டாக்டர் மாமி பெண்ணுடையது. டிராயர் அவள் பிள்ளையுடையது. ரெண்டு பேரும் சீத்துவுக்கு ஒன்றிரண்டு வயது இளையவர்கள். பட்டணத்தில் படிப்பவர்கள்.
”தொடையைப் பாரு. சினிமாக்காரி மாதிரி. வேட்டி கட்டுடா”.
சீத்துவைப் ஈரக்கையால் முதுகுக்குக் கீழே பின்னால் தட்டி அவர்கள் மீதிச் சிரிப்பை ஒருமித்து சிந்தி, விழுங்குவது போல் அவனைப் பார்த்துக் கடந்து போனார்கள்.
பதிமூன்று வயதுக்கு நல்ல உயரமும், பளபளக்கும் கை காலும் தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அவர்களுடைய அந்தரங்கப் பேச்சிலும் கடந்து வருபவன் அவன். கொஞ்சம் அசமஞ்சமாக இருப்பதால் அவனைத் தொட்டுத் தடவிக் குறும்பு பண்ணினாலும் சும்மா சிரித்தபடியே உட்கார்ந்திருப்பான். அது போதும் அந்தப் பெண்களுக்கு.
’பசுவா பசுவா பசுவய்யா’ என்று அவர்கள் பாடியபடி போக, சீத்து தலையைத் தஞ்சாவூர்ப் பொம்மை போல ஆட்டினான்.
அவன் பசுவன் தான். வருடம் ஒரு முறை மழைக்காலம் தொடங்கும் முன் நாலு தெருப் பெண்கள் களிமண்ணால் செய்த பசுவையும் கன்றையும் வைத்துச் சுற்றி வந்து கோலாட்டம் போடும்போது நட்டநடுவே மழைக்கான தேவர்களின் பிரதிநிதியாக, பசுவோடும் கன்றோடும் வந்த பசுவனாக கழுத்தில் மல்லிகைப்பூ மாலையோடு உட்கார்ந்திருப்பான் சீத்து. ’பசுவா பசுவா பசுவய்யா’ என்று எல்லாப் பெண்களும் அவனைக் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கோலாட்டம் அடித்துச் சுழன்றாடுவதும் அப்படியே குளக்கரைக்கு அவன் தலையில் களிமண் பசுவையும் கன்றையும் ஏற்றிப் போய்க் கரைப்பதும் ராத்திரி மழை பெய்வதும் வருஷா வருஷம் நடக்கிற சம்பவம். எல்லா வருஷமும் பசுவன் அவன் தான். ’பசுவா பசுவய்யா’ என்று ஊர் முழுக்க கோலாட்டம் ஒலிக்கும். அந்த நேரத்தில் அவனை சீத்து என்று யாரும் கூப்பிடுவதில்லை. அவன் அம்மாவுக்குக்கூட பசுவன் தான் அவன்.
’குசுவா குசுவா குசுவய்யா’ என்று சுந்தரம் அதே மெட்டில் பாடிய போது பம்பரத்தை டிரவுசர் பாக்கெட்டில் வைத்தபடி அத்தனை பசங்களும் சிரித்துக்கொண்டே வீட்டுக்கு ஓடினார்கள். அந்தப் பெண்களும் பையன்களை விட இன்னும் உரக்கச் சிரித்தபடி நடந்தார்கள். ‘சாமியைக் கிண்டல் பண்ணாதே, மழை பெய்யாது’ என்று சொல்லவும் அவர்கள் மறக்கவில்லை. பசுவன் சீத்துவாக இருக்கும் வரை சாமி கோபித்துக் கொள்ள மாட்டாது என்று அவர்கள் எல்லோருக்கும் நம்பிக்கை உண்டு.
ஆள்காட்டி விரலை ஆகாசத்தைப் பார்த்துச் சுட்டினான் சீத்து. நாலு தடவை அப்படியே தட்டாமாலை சுற்றினான். கிறுகிறுப்பை அனுபவித்துக்கொண்டு நின்றான். மண்டையை ஆட்டிக்கொண்டு கருப்பன் தேர்ப்படி ஓரமாக உட்கார்ந்து, பிள்ளையார் கோவில் வாசலிலிருந்து பொறுக்கி எடுத்து வந்த சிதறு தேங்காய் விள்ளல்களைக் கடித்துத் தின்ன ஆரம்பித்தான் அவன்.
தேங்காய்ப் பத்தை கை நிறையக் கிடைத்தது. வீட்டுக்கு எடுத்துப் போனால் மண்டை வெல்லம் உடைத்துப் போட்டுக் கலந்து அம்மா எல்லோருக்கும் தருவாள். வெல்லத்துக்கு எங்கே போக?
ரொம்ப நாளாகக் கட்டிப்பட்டுப் போய் மளிகைக்கடை கழித்துக் கட்டி குப்பையில் போடாமல் சீத்துவின் அப்பா குஞ்சரனிடம் கொடுத்த உதிர்ந்த கருப்பட்டியைக் கலந்தாலும் சரிதான். வீட்டில் எல்லோரும் சேர்ந்து இருந்து சாப்பிடலாம். தனியாக இங்கே உட்கார்ந்து அத்தனையையும் சாப்பிட வேண்டாம் என்று ஒரு விள்ளல் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை டிராயர் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டபோது தொடையைப் பார்த்தான். யட்சிக்கு இப்படித்தான் இருக்குமா?
யட்சி இன்றைக்கு வருவாளா? அவளுடைய நினைவு பலமாகக் கவிந்தது அவன் மனதில். யட்சியின் பக்கத்தில் இருக்க வேண்டும், பக்கத்தில் பொம்மை வைத்துக் கொண்டு குழந்தை தூங்குவது போல யட்சியைப் பக்கத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு கூட உறங்க வேண்டும் என ஆசை.
(தொடரும்)