புதிய குறுநாவல் – பசுவன் – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன்

2)
எல்லாப் பையன்களையும் போல யட்சி என்று யாராவது சொல்லிக் கேட்க சீத்துவுக்கும் மனசுக்குள் அதிகபட்ச குறுகுறுப்பு அலையடித்தபடி உற்சாகமாக இருந்தது. அவளைப் பற்றி முழுக்கத் தெரியாமல் சுகமான, பயமான சொப்பனம் வர ஆரம்பித்திருந்தது. யார் யாரோ வர்ணித்திருந்த யட்சி அவன் உதட்டில் தொடங்கி கீழே இறங்கி வந்து குறும்பு செய்யும் கனவின் சுகம், அவள் இடதுகை ஆள்காட்டி விரலை உறிஞ்சும் கோர சொப்பனத்தின் பயத்தில் முழுக்க அடங்குவதில்லை.

முந்தாநாள் சாயந்திரம் அவளைப் பக்கத்தில் இருந்து உற்றுப் பார்க்க அவனுக்குக் சந்தர்ப்பம் கிடைத்தது. கமலி இல்லை, யட்சிதான் அவள்.

சாயந்திர வெய்யில் மஞ்சள் பூத்து மசமசவென்று சுவரிலும் மரங்கள் மேலுமெல்லாம் சீராகப் படிந்த பொழுது ஏற்பட்டது அது. சாயந்திரமும் இல்லை பின்மாலைப் பொழுதுமில்லை. பிற்பகலும் இல்லை ராத்திரியும் வரவில்லை. எல்லாமான ஏதுமில்லாத நேரம் அது. எதுவும் செய்யாமல், பேசாமல், கேட்காமல், பார்க்காமல் உறைந்து போகச் சொன்ன பொழுது.

சீத்துவின் அப்பா குஞ்சரன், கடைத்தெரு ஜவுளிக்கடை, மருந்துக்கடை, ஸ்டேஷனரி கடைகளுக்கும் பெரிய வீடுகளுக்கும் குடிதண்ணீர் கொண்டு வந்து தந்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒரு குடம் குடிதண்ணீருக்குப் பத்து நயா பைசா, பத்து நயா பைசாவாக சம்பாதிக்கக் குடத்தை எடுத்துப்போய் ஊரணியில் நல்ல தண்ணீர் மொண்டு வந்து ஊற்றும் நேரம் அது. இரண்டு பெண்கள் வீட்டில் உண்டு. ரெண்டு பேரும் சீத்துவுக்கு அக்காதான். இந்தப் பத்து நயா பைசா வருமானத்தில் அவர்களுக்குக் கல்யாணம் நடத்தி வைத்து வந்தவர்களுக்கு நல்ல சாப்பாடு போட வேண்டும்.

குஞ்சரன் முந்தாநாள் சாயந்திரம், பெரியக்கா கல்யாண மாப்பிள்ளை அழைப்புக்கு குஞ்சாலாடு பெரிய சைஸில் பிடித்து போளியோடு கல்யாண விருந்து இலையில் பரிமாறலாம் என்று சீத்துவிடம் யோசனை சொன்னார்.

அவருடைய குஞ்சரன் என்ற பெயர் விளக்கத்தை சீத்து எத்தனையாவது முறையாகவோ கேட்டிருந்த நேரம் அது.

“குஞ்சரன்னா யானை முகத்து கணபதி. கொழக்கட்டை, லட்டு, பொரி உருண்டை எல்லாம் பெரிசு பெரிசா வேணும். அவர் பெயரை வச்சுண்டு நம்மாத்து கல்யாணத்திலேயும் திருப்பதி லட்டுலே பாதி அளவாவது இலைக்கு லட்டு போட வேண்டாமா? அவனவன் பந்தியிலே குந்தி நன்னா தின்னுட்டு பர்ருனு குசுவிண்டு போகட்டும். கல்யாணம் அப்பத்தான் களை கட்டும்”, என்றார் குஞ்சரன். காலிக் குடத்தை செல்லரித்துப்போன தூண் நிற்கும் வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு, வியர்த்து வடியும் முகத்தைத் தோள் துண்டால் துடைத்தபடி அக்கறையாகச் சொன்னார் அவர். மாடப்பிறையில் பம்பரம் தேடி எடுத்திருந்தான் சீத்து அப்போது. ஏயென்ற பெரிய சிரிப்புப் பொத்துக்கொண்டு வர இறுக்கமான டிரவுசரை இழுத்து விட்டபடி வெளியே ஓடினான் அவன். நாகு என்ற நாகம்மா பாட்டி மேல் மோதிக்கொண்டு சீத்து ஓடிப் போக, “பாத்து போடா குழந்தே” என்றபடி நடந்தாள் நாகுப்பாட்டி. இத்தணூண்டு பீங்கான் ஜாடியில் மோரும் பொட்டலத்தில் சத்துமாவும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அவள். இலவசமாகத் தினமும் வரும் ராத்திரி உணவு அது.

சிவராமன் குடும்பமான ராமவிலாஸ் ஓட்டல்காரர்களின் வடக்குவாடித் தெருக் கோடி வீட்டில் ஏழை விதவைப் பாட்டிகள் பத்து பேருக்கு தினசரி காலையிலும் சாயந்திரமும் ஒவ்வொருத்தருக்கும் நாலு கரண்டி மோரும், காலையில் ஆழாக்கு அரிசியும் சாயந்திரம் ரெண்டு கரண்டி சத்துமாவுப் பொடியும் இனாமாகத் தருவதை சீலமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பத்து பாட்டிகளில் ஒருத்தி சீத்து குடும்பத்தோடு ஒண்டுக் குடித்தனத்தில் இருக்கிறாள்.

நாகுப்பாட்டி என்ற நாகம்மா பாட்டி போன பவுர்ணமிக்கு வீட்டு முற்றத்தில் சீத்துவோடும் அவனுடைய அக்காள்களோடும் கூட இருந்து நிலாச்சோறு சாப்பிட்டாள். சீத்து குடும்பம் மொட்டைத்தண்ணி மோரில் பச்சை மிளகாய் அரிந்து போட்ட மோர்சாதமும், நாகுப்பாட்டி சத்துமாவும் கொண்டு வந்து அறுசுவை சாப்பாடாக சங்கல்பம் செய்து பகிர்ந்து உண்டது அந்த ராத்திரி. அப்போது பாட்டி, யட்சி விஷயம் பேசிக் கொண்டிருந்ததில் தான் யட்சி மேல் சீத்துவுக்கு பெரிய ஈர்ப்பு.

பாட்டியின் யட்சி தும்பைப்பூ போல பரிசுத்தமானவள். செம்பருத்தி போல மலர்ந்த முகம். கை இரண்டும் மணக்கும் தாழம்பூ போல நீளமானவை. வைக்கோலோ கற்றாழையோ வாடை அடிப்பவை இல்லை அவை. அவள் சிவராமன் விவரிக்கும் யட்சி போல் புரியாத ஏதோ தப்புக் காரியம் செய்கிறவள் இல்லை. ஔவையார், காரைக்காலம்மையார் போல் வயசான சிவபக்தை. கே.பி.சுந்தராம்பாள் குரலில் பாடுவாள். காரைக்காலம்மையாரை சீத்துவுக்குத் தெரியாதுதான். நாகுப் பாட்டிக்கு அம்மையார் எலும்புக்கூடாக சுவர்க்கம் போன கதையும் தெரியும். இன்னொரு நாள் சொல்கிறேன் என்றாள் அவள்.

நாகுப் பாட்டியைத் தவிர்த்து ஒதுக்கி, யட்சி மேல் மட்டும் கவனம் நிலைக்க முயற்சி செய்தபடி, சீத்து தேர்ப்படியில் உட்கார்ந்து, இன்னொரு விள்ளல் தேங்காய்ப் பத்தையை நிஜார் பாக்கெட்டில் இருந்து எடுக்க, பஜ்ஜி பொரித்த எண்ணெய் வாடையோடு பம்பரம் தான் கையில் தட்டுப்பட்டது.

முந்தாநாள் அவன் தேரடியில் அனுபவப்பட்டதை மனம் திரும்ப நினைவு படுத்திக் கொண்டிருந்தது.

முந்தாநாள் மஞ்சள் வெய்யில் நேரத்துக்கு முன் வெய்யிலே இல்லாத மேக மூட்டமான நேரம் வந்து போனது. மழை கொஞ்சம் கொஞ்சமாகப் பெய்து ஓய்ந்து மறுபடி பெய்து வெய்யிலுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது அப்போது.

ஈரம் குளித்த மர வேலைப்பாடும், நனைந்த கருங்கல் பாளப் படிகளுமாகத் தேரடி அவனை வா வா என்று அழைத்தது. தேரடிப் படிகளில் ஏறியபோது அவை அசைந்த மாதிரி இருக்க, சற்று நின்றான். அவன் கவனித்துக் கொண்டிருந்தபோதே தரையிலிருந்து மூன்றாம் நான்காம் படிகளுக்கு இடையே கல் பாளம் விலகி இடம் விட உள்ளே சீரான மஞ்சள் வெய்யில் மினுக்கிக்கொண்டு ஒரு மணல்வெளியும் பழைய கட்டிடங்களுமாக சீத்துவுக்குக் கண்ணில் பட்டது.

யாரோ பிரியத்தோடு அழைக்க அவன் அந்த வினோதமான உலகத்துக்குள் பம்பரத்தோடு அடியெடுத்து வைத்தான். அது, முந்தாநாள் சாயந்திரம்.

உள்ளே போனதுமே நெருப்புக் கோழிகளும், இடுப்பில் தொளதொளவென்று பைஜாமா அணிந்து விரிந்த மஞ்சள் மணல் வெளியில் அந்த நெருப்புக்கோழிகளை மேய்த்துப் போகும் கோழி மேய்க்கியும் கண்ணில் பட்டார்கள். நெருப்புக் கோழிகளை சீத்துவுக்குத் தெரியும். பூகோள வகுப்பில் அவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார் ஆசிரியர். அவை ஆப்பிரிக்காவில் காணப்படுபவை என்று சீத்துவுக்கு நினைவு. இவ்வளவு உயரமும் கனமுமான அந்தப் பறவை பறக்காது என்று படித்ததும் கூடவே ஞாபகம் வந்தது. நல்லதுக்குத்தான். சீத்துவை நிஜார் பாக்கெட்டில் பம்பரத்தோடு தூக்கிக் கொண்டு அவை பறந்து விடாமல் இருக்கும்.

வெடவெடவென்று உயரமாக இருந்த கோழி மேய்க்கி சீத்துவைப் பேரென்ன என்று விசாரித்தான். சீத்து என்றான் இவன் நடந்தபடிக்கே. யாரைப் பார்க்க வந்திருக்கே? விடாமல் விசாரித்தான் மேய்க்கி. இவனிடம் என்னதுக்கு சொல்லணும் என்று சீத்துவுக்குப் புரியவில்லை. மஞ்சள் வெய்யில் வெளியில் அடிப்பதைவிட இன்னும் தீர்க்கமாக சகலமான இடத்திலும் பூசியிருந்ததைக் கவனித்தான் சீத்து. மணல் மஞ்சளும் சிவப்பும் கலந்த மெல்லிய ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது. நெருப்புக் கோழிகள் எல்லாம் பொன்னால் உடம்பு ஆனது போல் தலை குலுக்கி நிற்க மேய்க்கி வாயில் சிவப்புச் சாயத்தைப் பூசியிருந்தது மஞ்சள் வெய்யிலில் வெகு வினோதமாகத் தெரிந்தது. அவன் ’சீத்து தொடை சினிமா தொடை’ என்று பாடியபடி, வாயில் எச்சில் ஒழுக சீத்துவை நெருங்கி வர, நெருப்புக் கோழிகளும் அதைத் திரும்பப் பாடியபடி அவன் காலுக்குப் பக்கமாக வந்தன. சீத்து விரசாக விலகி நடந்தான்.

”பசுவா .. பசுவா”

யாரோ அவனைக் கூப்பிடும் சத்தம். மெல்லிய பெண் குரல்.

”உன் பெயர் பசுவன் தானே? யட்சிக்குத் தொடையைப் பார்க்கணுமாம். கூப்பிடறா. போய்க் காட்டு”.

மேய்க்கி சத்தமாகச் சொல்ல அந்த நெருப்புக் கோழிகள் எக்கெக்கெக்கென்று சிரித்துத் தலையை மணலில் புதைத்துக் கொண்டன. தங்கம் பூசிய குன்றுகள் போல அவை நின்றதை வேடிக்கையாகப் பார்த்தபடி சீத்து நிற்க மேய்க்கியும் ஒரு நெருப்புக் கோழி ஆனான். அல்லது நெருப்புக் கோழி தான் இத்தனை நேரம் மேய்க்கியாக மாறி நின்றதோ. அவன் உயரமும் எடையும் கூடிய பிராணியாக வலுவான கால்களால் நீண்ட அடி எடுத்து வைத்துத் தங்க மணல் பரப்பில் விலகி ஓட, பறக்காத மற்றப் பறவைகள் பின் தொடர்ந்தன. அவை ஓடிய திசையில் வரிசையாகக் கோவில்கள் தெரிந்தன. கூடவே மரங்களும் அக்கோவில்களோடு பின்னிப் பிணைந்து பிரம்மாண்டமாக அந்த இடத்தை வியாபித்திருந்தன.

”சீத்து… சீத்து..”

பெண்குரல் மறுபடி வந்தது. அந்த அடர்ந்த மரக் கூட்டத்துக்குள் இருந்து வந்த பெண்ணின் இனிய குரல். சீத்துவின் அக்கா ரெண்டு பேருக்கும், அவன் அம்மாவுக்கும் வாய்க்காத, சந்தோஷமும் பிரியமும் சிநேகமும் சிரிப்புமாக வரும் குரல். ஊருணிக்குத் தண்ணீர் எடுக்கப் போகும் சிற்றாடைப் பெண்களுக்கும் இல்லாத குரல் அது. அந்தச் சிரிப்பு மட்டும் யட்சி கடித்த விரல் மாதிரி தனியாக இருந்தது. இது நடந்தது, முந்தாநாள் சாயந்திரம், அதேதான்.

”சீத்து, சாப்பிட்டியா? அவன் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தபோது அந்தப் பெண் உள்ளிருந்து வாசலில் பிடிவாதமாகப் படர்ந்திருந்த சிலந்திப் பூச்சி வலையை அகற்றியபடி வந்து நின்றாள்.

”என் பேரு எப்படித் தெரியும்?” சீத்து கேட்டான்.

“எப்படியோ. நான் உன்னை விட பெரியவ ஆச்சே. அதான் எல்லாம் தெரியும்”.

“எத்தனை வயசு பெரியவ? எங்க பெரியக்கா மாதிரி நாலு வயசா, சின்னவ மாதிரி ரெண்டு வயசா பெரியவ நீ?”

”நூறு வயசு, நூற்றைம்பது வயசு பெரியவ நான் உனக்கு”.

“அவ்வளவு பெரியவ அப்படீன்னா செத்துப் போக வேண்டாமோ”.

”போகப் பிடிக்கலே. சாவை நிறுத்தி வச்சிருக்கேன். நினைச்சபோது போயிடுவேன். இப்போ இல்லை”.

அவளைத் சீத்து கவனித்துப் பார்த்தான். யட்சி சின்ன அக்கா சாயலோ? இல்லை, இந்தத் தோரணை ஊருணிக்குத் தண்ணீர் மொண்டு வந்து கொண்டிருக்கும் சிற்றாடைப் பெண்களுடையது. அதென்னமோ வெறுங்குடத்தோடு தண்ணி தூக்கப் போகும்போது இருக்கும் சிநேகிதம் ஊருணித் தண்ணீரை எடுத்து வரும்போது மாறிவிடுகிறது. தண்ணீர் தங்கமாச்சே. இது அவர்கள் சொல்வதில்லை. சீத்துவின் அப்பா குஞ்சரன் பத்து நயா பைசாக்களை ஒரு தடவைக்கு நாலு முறை எண்ணிச் சுருக்குப் பையில் போடும்போது சொல்வது. தினம் அவர் ஒரு ரூபாயாவது சம்பாதிப்பார்.

இந்தப் பெண்பிள்ளை ஊருணிக்குத் தண்ணீர் தூக்கப் போகிற பெண்களின் கூட்டத்தில் இல்லை. அவர்களிடம் கம்புக்கூட்டில் காய்ந்த வியர்வையும் மல்லிகைப் பூவுமாக ஒரு கதம்ப மணம் அடிக்கும். அப்பா மேலும் அக்காக்கள் மேலும் வைக்கோல் வாடைதான் எப்போதும் அடிக்கும். சோப்பு வாங்கக் காசு ஏது என்று வைக்கோலை வைத்துத் தேய்த்துத் தேய்த்து அக்கா குளிக்கும் போது பாவமாக இருக்கும் சீத்துவுக்கு. அவனும் வைக்கோல் தேய்த்துக் கொள்வான். ஸ்கூல் போகும்போது பிள்ளையார் கோவில் வாசல் வீபுதிப் பரணியில் இருந்து ஒரு கை வீபுதியை அள்ளி அக்குளில் தேய்த்துக் கொண்டு சாம்பல் மணக்க கிளாஸுக்குப் போவான். வைக்கோல் வாடைக்கு சாம்பல் வாடை எவ்வளவோ பரவாயில்லை என்று வகுப்பில் சோமு வாத்தியார் பக்கத்தில் வரச்சொல்லி மேஜைக்கு அடியில் டிராயருக்குள் கைவிட்டு செல்லமாக நசுக்கிக் கொண்டே சொல்வார். சீத்துவிடம் ஏதாவது தப்பு கண்டுபிடித்து வாரம் ரெண்டு மூணு தடவையாவது இப்படி நெறிப்பது நடக்கும். அவர் மேல் மூக்குப்பொடி வாடை தான் எப்போதும் அடிக்கும்.

”சாப்பிட்டியான்னு கேட்டேன்”.

அந்தப் பெண் தலையைச் சாய்த்துச் சிரித்தபடி ஞாபகப் படுத்தினாள். சீத்துவுக்கு வெட்கமாக இருந்தது. புதுசாக ஒரு ஊருக்கு வந்து விட்டு அங்கே வடிவான ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டு நிற்கும்போது விதைக்கொட்டையை நெரிக்கும் கிழவர் நினைவுதான் வர வேண்டுமா என்று அவனையே அவன் கேட்டுக் கொண்டான்.

”சாப்பிட்டுட்டேனே. அம்மா வக்கீலாத்துலே கொடுத்தான்னு கரப்பு கிடந்த ரவையைக் கொண்டுவந்தா. கரப்பை எடுத்துப் போட்டுட்டு வெய்யிலே ரவையை காயவைச்சு வறுத்து, அம்மா ஆளாளுக்கு ரெண்டு ஆப்பக் கரண்டி வர்ற மாதிரி ரவா உப்புமா பண்ணிக் கொடுத்தா”.

சீத்து சகஜமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். முகம் செம்பருத்தி போல, மூக்கு எள்ளுப்பூ போல, கை தாழம்பூ போல என்று யட்சியை நாகுப்பாட்டி வர்ணித்ததும் தப்பு போல. அவள் தலைமுடி உச்சந்தலையில் சிக்கான, கொஞ்சம் பூசினாற்போல உடல் ஆகிருதி கொண்ட, தாடையில் சொரசொரப்புள்ள முகத்தில் சுருக்கங்கள் தென்படும், பல்லில் பல்காரை லேசாகப் படர்ந்த, கண்ணால் சிரிக்கிற அழகான பெண். பொங்கிப் பூரித்து விம்முகிற மாரிடம் இவளுக்கு உண்டு. சுப்பா சாஸ்திரிகள் போல இல்லை.

அவன் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டான். முந்தாநாள் சாயந்திரம் அது.

“என்ன சிரிக்கறே, நான் திங்கத் தந்தா சாப்பிடுவியா?” அவள் கேட்டாள். அந்த அத்துவானக் காட்டுக்குள்ளே அவள் என்ன பட்சணம் பண்ணுவாள்?சாதம் தான் எப்படி வடிப்பாள்? என்ன கொடுப்பாள்? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு உபசாரத்துக்கு, அப்பா பிரண்டைக் கொடி பறிச்சு கீழத் தெருக்கோடி மெஸ்கார வீட்டுலே அப்பளம் இடும் நாகுப் பாட்டிக்கும் அவள் தோழி சுந்தரிப் பாட்டிக்கும் கொண்டு வந்து கொடுக்கும்போது ”காப்பி போட்டுத் தரேண்டா குஞ்சா. ஒரு வாய் குடிச்சுட்டு போ” என்று பாட்டிகள் வாய் நிறைய உபசரிப்பார்கள். அவர்கள் யாரும் பாலைப் பார்த்தே வருடக் கணக்கிலிருக்கும் என்று தெரிந்த குஞ்சரன், ”அப்புறம் ஒரு நாள் வர்றேன் மாமி. பிரண்டைச் சாறு பிழிஞ்சு அப்பள மாவு ஒரு உருண்டை முடிஞ்சா கொண்டு வாங்கோ” என்று பாட்டிகளிடம் சொல்லி அனுப்புவார். அப்பள மாவுருண்டை ஒன்றோ இரண்டோ பிரண்டைச் சாறும் மிளகாய்ச் சாறும் மணக்க அவர்கள் கொண்டு வருவார்கள். சீத்து அதை அழிச்சாட்டியம் பண்ணித் தின்று விடுவான். இந்தப் பெண் அப்பள மாவுருண்டை தருவாளோ.

அவள் முன் மண்டபத்தில் இருந்து இறங்கி, சிறிய தனிக் கல் கட்டடமாக இருந்த மண்டபம் போன்ற கோவிலுக்குள் நுழைந்தாள். சீத்துவும் அவள் பின்னாலேயே போனான். அந்த மண்டபத்துக்குள் விக்கிரகம் எதுவும் இல்லை. பெரிய ஆல மரம் ஒன்று கட்டிடத்தைப் பிளந்து நட்டநடுவில் வளர்ந்து நாலு பக்கமும் நெருக்கிக் கொண்டிருந்தது.

உள்ளே போகாமல் வாசலிலே நின்றுவிட்டான் சீத்து. அவள் உள்ளே இருந்து ஒரு பழுக்காத் தட்டில் ஏதோ கொண்டு வந்து தந்தாள். பஜ்ஜியா என்று கேட்டான் சீத்து. அவனுக்குப் பெயர் தெரியாத உப்பும் காரமுமான பலகாரம் எல்லாம் பஜ்ஜி என்ற பொதுப் பெயரில் அவன் வயிற்றுக்குள் போகும். அதுவே சர்க்கரைத் தித்திப்பில் இருந்தால் சொஜ்ஜியா என்று கேட்பான் சம்பிரதாயமாக. எதுவாக இருந்தால் என்ன? இனிப்பு இனித்துக் கிடக்கணும். உரைப்பு, உப்பு காரம் தூக்கலாக இருக்கணும். அவ்வளவு தான்.

இது என்ன கோவில்? கேட்டபடி வாசல் படி தாண்டி உள்ளே போனான் சீத்து. அந்தப் பெண் உள்ளேயிருந்து அவன் கையைப் பற்றி விழாமல் உள்ளே இழுத்தாள். சில்லென்று இருந்த கை அது.
நல்லா இருக்கா என்று கேட்டு விட்டு உடனே வார்த்தை மாற்றிக் கொண்டு நன்னா இருக்காடா என்றபடி அவன் தலையைத் தடவினாள். ”நன்னா வெகு பேஷா இருக்கு” என்றபடி அந்த பஜ்ஜியைப் பிய்த்துத் தின்றான் சீத்து. எதுக்களித்துக்கொண்டு வந்தது. போகிறது. சொல்ல வேண்டாம். நிஜார் பாக்கெட்டில் போட்டு எடுத்துப்போய் சீத்து அதை எப்படியாவது சாப்பிட்டு முடித்து விடுவான்.

நிஜார் பாக்கெட்டில் போட்ட ஒரு வினாடியில் யட்சி அதைப் பார்த்து விட்டாள். “ஏண்டா சாப்பிட முடியலியா?” அவள் பாக்கெட்டில் கை நுழைக்க சீத்து நெளிந்தான். கையை விலக்கப் பார்த்தான். வேண்டியிருந்தது அது.

”சாப்பிட்டுட்டு காப்பி தருவேன்னு எதிர்பார்க்காதே. பாலுக்கு எங்கே போவேன், பசுமாட்டுக்கு எங்கே போவேண்டா பசுவா பசுவய்யா?” காலை நீட்டித் தூசி படிந்த தரையில் உட்கார்ந்தபடி கேட்டாள் பூடகமாகச் சிரித்தபடி. கோலாட்டம் தெரிந்த யட்சி தான் போலிருக்கிறது அவளுடைய உடுப்பில் அழுக்கு எதுவும் ஒட்டவில்லை என்பதை சீத்து கவனித்தான்.

அவள் கேட்டாள் – ”இந்த வருஷமும் கோலாட்ட ஜோத்திரைக்கு பசுவன் நீதானே. எனக்கு தத்தம்மா சரிதம் கோலாட்டப் பாட்டு வேணும். வக்கீல் வீட்டுலே இருக்கும். இருக்கும் என்ன, இருக்கு. எனக்குத் தெரியும். நான் தானே வாங்கி அடுக்கி வச்சேன் ஒரு காலத்துலே. அதைக் கேட்டு வாங்கிண்டு வந்து கொடு”.

அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் உடனே நினைவு வந்தது. வக்கீல் வீட்டுக்கு அவனை சாயந்திரம் ஆறரை மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். கோலாட்ட ஜோத்திரைக்கு, பசுவனாக இருக்க சம்மதம் என்று அவனும், அவன் அப்பாவும் நேரில் போய்ச் சொல்ல வேண்டும்.

”சரி, நான் போய்ட்டுச் சாவகாசமா வரேன்”. சீத்து சொல்லியபடி பட்சணத்தில் ஊறியிருந்த எண்ணெயை முழங்காலில் தேய்த்துக் கொண்டான். இன்னும் மிகுந்திருக்க, அவள் அவனுடைய கையைப் பிடித்துத் தன் முழங்காலில் பூசச் செய்தாள்.

“எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே”.

நியாயமான அங்கலாய்ப்பு தான் அவளுடையது. கொஞ்சம் உப்பு தூக்கல் என்று அப்பா தினசர் அம்மா சமையலைப் பற்றிக் குற்றம் குறை சொல்வது போல் ரொம்ப எண்ணெய் என்று சொல்ல நினைத்தான் சீத்து. எதுக்குச் சொல்லணும்? சாப்பிடக் கொடுக்கிறாள். அதிலே குற்றம் குறை எதுக்கு?

’திவ்யமா இருந்தது. அது என்ன பஜ்ஜி?” இதுவரை வெட்டிய இடது கை ஆள்காட்டி விரல்களைப் பொரித்தெடுத்தது அதெல்லாம் என்று சொல்லுவாளோ. கேட்டால் தானே? சீத்து கேட்கப் போவதில்லை.

உன் பெயர் என்ன என்று விசாரித்தான் சீத்து. யட்சி என்றாள். அவள் உதடுகள் சிவந்திருந்தது சீத்துவின் கவனத்தில் அடர்ந்து நிலைகொண்டது. எந்தப் பெண்ணின் உதட்டையும் கவனித்துப் பார்த்து மயங்கியதில்லை இதுவரை அவன்.

“எப்போ மறுபடி வருவே?” சீத்து விசாரித்தான்.

“அது உன் மனசுலே தானே தட்டுப்படும். போய்ட்டு வா” .

முந்தாநாள் சாயந்திரம் இப்படித்தான் போனது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன