4
சனிக்கிழமையும் ஞாயிறும் பள்ளிக்கூட விடுமுறை என்பதால் பசுவனுக்கு பஜனை மடத்தில் ஓவர்டைம் பார்க்க வேண்டி வந்தது. அது வேறொண்ணுமில்லை. காலையில் குளித்து விட்டு பஜனை மடம் போய்விட வேண்டும். சாப்பிடாம வந்துடு என்று வக்கீல் மாமி சொன்னாள்.
சனியும் ஞாயிறும் காலையில் நல்ல இட்டலியும், தோசையும், வடையும், பொங்கலும், காப்பியும் அவனுக்கு தாராளமாகக் கொடுத்து பஜனை மடத்தில் வைத்தே சாப்பிடச் சொன்னார்கள்.
தின்ன முடியாமல் மீந்து போனதை சீத்து வீட்டிலிருந்து ஏனம் எடுத்து வந்து அதில் போட்டு வைக்க, குஞ்சரன் வந்து வாங்கிப் போனார். சாப்பிட்டுவிட்டு ஒரு மர ஸ்டூலில் உட்கார்ந்து நாலு பக்கமும் பார்த்தபடி தூங்கி வழிவதே சீத்துவுக்கு வேலை.
அவனைச் சுற்றி ஒரு இருபத்தைந்து பெண்கள் ரயில் வண்டிக் கோலாட்டம் போட்டார்கள். ஒருத்தர் பின்னால் ஒருத்தர் கோலாட்டக் கழிகளை அடித்து ஆடி வர வரிசையாக நகரும் ரயில் அது. சுற்றி வளைந்து நகர்ந்து சுழன்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கழிகளை மோதிக்கொண்டு சீராக ஆடியபடி விரசாக நகர்வது மலைப்பாம்புக் கோலாட்டம். பத்து பதினைந்து நிமிடம் பார்த்தபின் எல்லாம் அலுத்துப் போக, உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தான் பசுவன்.
”பாலும் பெருகிக் குடங்கள் நிறைய பசுவா பசுவய்யா
கோலும் அடித்து கூடியே ஆடினோம் பசுவா பசுவய்யா”
என்று அடிகளை திரும்பத் திரும்ப வெவ்வேறு வேகத்திலும் ராகத்திலும் பாடி அவனைப் பார்த்து ஆடிக் குதித்தார்கள்.
”பசுவன் தூங்காம இருக்க, பசுவா பசுவய்யான்னு வர்றபோது வலக்கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணலாமே”.
டாக்டர் மாமி சொல்ல, ”நன்னாத்தான் இருக்கு, இத்தணூண்டு பையன் பழுத்த சுமங்கலிகளை ஆசீர்வாதம் பண்ணறதாவது. அதெல்லாம் நம்மடவா வழக்கம் இல்லே”, என்றாள் நாகுப்பாட்டி சீத்துவுக்கு ஆறுதல் தரும்படியாக.
எத்தனை தடவை கையைத் தூக்கி ஆசிர்வாதம் செய்வது. கையில் பாத்திரம் கீறியது வேறே இன்னும் வலிக்கிறது. நேற்று ராத்திரி சின்னக்காவிடம் சொன்னபோது பக்கத்து வீட்டுத் தொழுவத்திலிருந்து பசுஞ்சாணி எடுத்து வந்து கை விரலில் வைத்து இட்லித் துணியால் கட்டி விட்டாள். காலையில் பசுவன் டியூட்டிக்கு கிளம்பியபோது ”இதென்னடா சாணியும் கையுமா. எடுத்துட்டு போ” என்றார் அப்பா.
சாணி விரலோடு இட்லி தின்ன முடியாது, டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடக் கொடுத்து விடவும் முடியாது என்று அவருக்குத் தெரியும்.
”ஆசீர்வாதம் இல்லாட்ட பரவாயில்லே. குளுமையா அப்பப்போ சிரிச்சா போறும். ஜானவாச ஊர்வலத்துலே மாப்பிள்ளை மாதிரி”.
இது ஜவுளிக்கடை ஐயங்கார் பெண்டாட்டியின் யோசனை.
“கார்லே ஊர்வலம்னாலே அசட்டு அம்மாஞ்சி களை வந்துடுறது. இதுலே சிரிப்பு வேறேயா?”. வக்கீல் மாமி தள்ளுபடி செய்ய, சீத்துவைப் பார்த்து வேறு யோசனைகள் புறப்படாமல் கோலாட்ட சத்தம் மட்டும் சீராகத் தொடர்ந்தது.
சனிக்கிழமை நடுப்பகல் சாப்பாடும் போட்டு பிற்பகல் மூணு வரை கோலாட்டம். அப்புறம் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு ராத்திரி ஏழு மணிக்கு வந்தால் போதும். வீட்டில் வடையையும் சுண்டலையும் சுவியனையும் கொடுத்து விட்டு சீத்து தேரடிக்கு ஓடினான்.
படிகளுக்கு நடுவே பள்ளம் பறித்து உள்ளே மரங்களும் பழைய கோவில்களுமாக அவனுக்குப் பழக்கப்பட்ட இன்னொரு உலகம் எங்கே?
தேரடிக் கருப்பனின் சந்நிதி கீகடமான இடத்தில் தேரடிப் படிகளுக்குப் பின்னால் இருட்டில் தெரியாது கிடக்கும் வெளியில் சீத்துவின் பார்வை பட்டது. உள்ளே மரங்களும் பழைய கோவில்களுமாக அங்கே அந்த சாயந்திர உலகம் தெரிந்தது. வெளியே மஞ்சள் வெய்யில் பூத்திருக்க, உள்ளே அடர்த்தியாக மஞ்சளும் சிவப்பும் பூரித்துப் படிந்து சீத்துவை வா வா என்று கூப்பிட்டது. அந்தக் கோவில்களின் வரிசை, முன்பு பார்த்தது போல் இல்லை. சிறிய கோவில் ஒன்று சாயந்திர மஞ்சள் பூசி நாணத்தோடு நின்றது. அதன் பின்னால் பரந்து நின்ற ஒரு பிரம்மாண்டமான மரம் பின்னிருந்து அந்தக் கோவில் மண்டபத்தை இறுக்கித் தழுவி, தூண்களைத் துளைத்துப் போயிருந்தது. யட்சி எங்கே? அவனை இப்படி அணைத்துக் கொள்ள அவள் வரவேண்டும். வேண்டாம். அவளை சீத்து இப்படிப் பின்னால் இருந்து இறுகத் தழுவி நிற்க வேண்டும். எங்கே போனாய் யட்சி?
தேரடிக் கருப்பனுக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாக நடந்தான் சீத்து. முன்னால் இருந்த தனிக் கோவிலில் நுழைந்து நின்றான். கோவில் மணி அடித்த சத்தம் போல காதில் கேட்டது. மணியே இல்லாமல் மணிச் சத்தம் எங்கிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.
விரலில் வீக்கம் வலித்தது. இடது கையே வலிப்பது போல் பட்டது. யட்சி மாருக்கு நடுவே வைத்துக் கொண்டால் வலி தீரும். அடி யட்சி, எங்கேயடி போனாய்? வா.
யட்சி வராவிட்டால் வீட்டுக்குப் போய் அக்காவிடம் சொல்லி சாணிப் பத்து போட்டுக் கொள்ள வேண்டும். பசுவன் கோலாட்டத்தில் யாராவது கேட்டால் மருதாணிப் பற்று என்று சொல்லி விடலாம். மோந்து பார்க்கவா போறாங்க?
இட்லித் துணி இல்லாமல் அப்பாவின் பழைய வேட்டித் துணியைக் கிழித்து அக்காவைக் கட்டுப் போடச் சொல்லலாம். அப்பா வேட்டி எல்லாம் பழசு தான். வேட்டிக்கு மேலே பள்ளிக்கூட ரிடையர்ட் நாகராஜ வாத்தியார் போட்டிருந்த நைந்த அல்பாகா கோட். அவர் இறந்து போனதுக்கு அப்புறம் வாத்தியார் பெண்ஜாதி நீ போட்டுக்கோ என்று கொடுத்தாள். வாத்தியாரின் சட்டைகள் குஞ்சரனுக்கு ரொம்ப சின்னதாக இருந்ததால், சட்டை இல்லாமலேயே கோட் மட்டும் அணிந்து கொண்டு ஸ்கூல் வாத்தியார் களையோடு தான் ஊருணியில் தண்ணீர் மொண்டுவரப் போவார். அவர் கிடக்கட்டும். யட்சி எங்கே?
”வந்துட்டியா?”.
கோவில் உள்ளே இருந்து யட்சி குரல் கேட்டது. இறுக்கமான டிரவுசரை இழுத்து விட்டபடி பார்த்தான் சீத்து. கதவு சார்த்தி இருந்தது. வக்கீல் வீட்டு சமையல் மாமி ஆளில்லாத அறைகளில் நுழைவது பற்றிக் கண்டித்துச் சொன்னது நினைவு வர சும்மா நின்றான்.
”உள்ளே வாயேன். ஒவ்வொரு தடவையும் சொல்லணுமா?” உரிமையோடு அவன் தோளில் தட்டியவள் தலைமுடியை சிடுக்கெடுத்துப் பின்னிக்கொண்டிருந்தாள். யட்சி தலையை விரித்துக் கொண்டு நிற்பாள் என்று யாரோ எப்போதோ சொன்னது தப்புதான் போல் இருக்கிறது. யாரும் நாள் பூரா தலையை விரித்துக் கொண்டு நிற்பது அசௌகரியமில்லையோ. அதுவும் பூச்சியும் தூசியும் அடந்த இந்தக் காட்டுப் புறத்தில்.
”தத்தம்மா சரிதம் கோலாட்டப் பாட்டு புஸ்தகம் கேட்டேனே, கொண்டு வந்தியா?” அவள் கேட்டாள். ”அடடா, மறந்து விட்டேனே” என்று சொன்னபோது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
வேளாவேளைக்கு ஆகாரம் கிடைக்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.
நாளைக்கு வரும்போது நிச்சயம் எடுத்து வரேன் என்றான். நாளைக் கதை நாளைக்கு என்று அவள் சிரித்தாள்.
“நாளைக்கு கோலாட்ட ஜோத்திரை. ஊருணிக்கரையிலே இருந்து பசுவையும், கன்றையும் தண்ணியிலே கரைக்கணும்”, என்று தீர்க்கமாக ஆலோசித்தபடி சொன்னான் சீத்து. தெரியும் என்றாள் சுருக்கமாக யட்சி.
“அது ஏன் என் கிட்டே மட்டும் பேசறே?” அவன் கேட்டான்.
“நீ மட்டும் தானே பசுவன். இந்த ரெண்டு நாளைக்கு”.
“இப்போ மட்டும் பேசுவியா? அப்புறம்?”
”அப்புறம் என்னன்னு அப்புறம் பார்க்கலாம்”.
“இத்தனை நாள் எங்கே இருந்தே?”
“இங்கே தான் இருந்தேன். ஏன் உனக்கு என்ன சந்தேகம்?”
ஒண்ணுமில்லே என்று விரலைப் பார்த்தபடி சத்தமில்லாமல் இருந்தான் சீத்து.
”விரல்லே என்ன?”
“பாத்திரம் குத்திடுத்து. சொம்பு”.
“சொம்பு எப்படி குத்தும்?”
“விழுந்து நசுங்கினதுலே விளிம்பு தூக்கலா இருந்ததா, கையை கீறி விட்டுடுத்து”.
“மருந்து சாப்பிட்டியா?”
“இல்லே”.
”ஊசி குத்திண்டியா?”
“ஐயோ பயமா இருக்கு”. அவன் கண்களை மூடிக்கொண்டான்.
“இந்தக் கோவில்லே எல்லாம் எப்போ பூஜை வரும்?” சீத்து கேட்டபோது அவள் சிரித்தாள்.
“இந்தக் கோவில் எல்லாம் உன் ஊர்லே இல்லே. உன் காலத்திலேயும் இல்லே.”
“அப்படீன்னா?”
“உனக்கும் எனக்கும்
நூறு வருஷம் வயசு வித்தியாசம்” என்றாள் யட்சி அவன் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு. அவள் சீத்துவின் முகவாய்க்கட்டையை உள்ளங்கையில் ஏந்திப் பிடித்து இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள். அது இது சாப்பாடு எல்லாம் கிடக்கட்டும். இந்த மாதிரி கொஞ்சினால் யட்சி தவிர பசுவனுக்கு வேறேதும் வேண்டாம்.
“உனக்கு யாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க?” யட்சி கேட்டாள்.
“கமலி ரேழியிலே கதவுக்குப் பின்னாலே வச்சு போன மாசம் முத்தினா”
“அப்புறம்?”
“எங்கப்பா நான் காணாமல் போய் திரும்பி வந்ததும் பளார்னு ஒரு அறை, அப்புறம் ஒரு முத்தம் கொடுத்தார்”.
யட்சி கலகலவென்று சிரித்தாள்.
“எப்படி காணாமல் போனே?”
”பாம்புப் பிடாரன் கூட, அவன் மகுடி வாசிச்சதைக் கேட்டபடி பின்னாலேயே முத்துப்பட்டி வரை போயிட்டேன். தூக்கத்திலே நடக்கிற மாதிரி இருந்தது. அப்புறம் அவன் எழுப்பி வீட்டுக்குப் போன்னு சொன்னான். வந்துட்டேன்”.
சீத்து விரலைச் சுழற்றிப் பார்த்தான். வீங்கியிருந்தது. வலித்தது.
”விரலுக்குத் தகுந்த வீக்கம். நாளைக்கு வடிஞ்சிடும்”, என்றபடி சீத்துவைத் தன் மடியில் இழுத்து இருத்திக் கொண்டாள் யட்சி. அவனுக்கு அதுவும் வேண்டியிருந்தது.
”நான் போறேன். கோலாட்டம் போட எல்லாரும் வந்து காத்திண்டிருப்பா”.
அவன் எழுந்திருக்க முயற்சி செய்தபோது கை தன்னிச்சையாக யட்சியின் கழுத்தில் உயர்ந்து மாலையாக விழுந்தது. உள்ளே இருந்து யாரோ சொன்ன மாதிரி அவளைப் பிடித்து இழுத்து உதட்டில் முத்தமிட்டான். போ என்று இன்னொரு மனசு சொல்ல எழுந்து உட்கார்ந்தான்.
“யட்சிக்கு கோபம் வந்தால் கழுத்திலே பல் பதிச்சு ரத்தம் குடிச்சுடுவான்னு சொன்னானே சிவராமன். உனக்கு என் மேலே கோபம் வரல்லியா?”
அவள் சிரித்தாள். சீத்து தன் கழுத்தைத் தடவிக் கொண்டான். ஒன்றும் இல்லை. கழுத்தில் கடிப்பதை விட விரலைக் கடித்தால் சுகமாக இருக்கும்; வீக்கம் வற்றிவிடும் என்று சீத்துவுக்குத் தோன்றியது.
”பஜ்ஜி வேணுமா?”
“வேணாம் பசிக்கலே அது பஜ்ஜி தானா?”
“வேறே என்னவா இருக்கும்னு எதிர்பார்க்கறே?”
அவன் முகத்தைத் தன் வியர்வை நனைத்த மார்பில் தேய்த்துக் கொண்டு அப்படியே சேர்த்துப் பிடித்தபடி கண்ணை மூடிக் கொண்டாள் யட்சி.
“பூச்சியை எல்லாம் வறுத்து தின்னுட்டு ரத்தம் குடிப்பா யட்சின்னு தீட்சிதர் தாத்தா சிவராமன் கிட்டே சொன்னாரே”.
“அவருக்குத் தான் வெட்டுக்கிளி வறுத்துப் போட்டுத் திங்கத் தரணும்”.
“ஐயே சாப்பிட மாட்டார்” என்று சிரித்தான் சீத்து. இப்படி பார்த்துண்டு ஊட்டி விட்டா, தேவேந்திரனே இன்னும் கொஞ்சம் தான்னு கெஞ்சிண்டு நிப்பான். அவள் தலைமுடி நெற்றியில் புரண்டு முகத்தில் இறங்க, துடிக்கும் உதடுகளால் சீத்துவின் உதட்டில் இன்னொரு முத்தமிட்டாள். கமலியின் ஈர உதடுகள் நினைவு வந்தன. அவளும் கோலாட்ட ஜோத்திரைக்கு வந்திருப்பாள்.
“இருடா. நாளைக்கு போய் அங்கே கோலாட்டம் போடலாம். இன்னிக்கு இங்கே. நான் சொல்லித் தரேன்”.
சொல்லி விட்டு அட்டகாசமாகச் சிரித்தாள் யட்சி.
”நாளைக்கு வர்ற போது”.
அவள் முடிப்பதற்குள் ”தத்தம்மா சரிதம் கோலாட்ட புஸ்தகம் தானே” என்று கேட்டான்.
”ஆமா, அப்புறம், நாளைக்கு டிராயர் போட்டுண்டு வராதே”.
”சினிமாக்காரி மாதிரி இருக்கேனா?” சீத்து அப்பாவியாகக் கேட்டான்.
“நீ என்ன பொம்பளையா சினிமாக்காரி மாதிரி இருக்கேன்னு சொல்ல. ஆம்பளை. ராஜா ராணி சினிமா ஹீரோ மாதிரி இருக்கணும்”.
”அவனும் சின்ன சைஸ் பாவாடை தானே கட்டிண்டிருக்கான்?” சீத்து கேட்டான்.
”அது வேறே, இது வேறே”, யட்சி சிரித்தாள்.
அவனை மறுபடி மடியில் வாரிப் போட்டுக் கொண்டாள். ஒரு நிமிடத்தில் குருதி வாடை அங்கே சூழ்ந்தது. சரி போய்ட்டு வா என்று எழுந்தாள்.
“தூரமாயிட்டியா? எங்கக்காவை வேணும்னா சமைச்சு வச்சுட்டுப் போக அனுப்பட்டுமா? எட்டணா கொடுத்தா போதும்”.
யட்சி அவனைக் கூர்ந்து பார்த்தாள். ”உங்கக்கா ரெண்டு பேரும் பாவம்” என்றாள்.
”பெரியக்கா ராயர் பஜ்ஜி கடையிலேயும் அங்கங்கே கூப்பிடற வீடுகளிலும் தோசைக்கு அரிசி, உளுந்து அரைச்சும், தவலவடைக்குக் கடலைப்பருப்பும், துவரம்பருப்பும், பாசிப்பருப்பும் ஊற வைத்தது அரைச்சும் கால் ரூபாயும் அரை ரூபாயும் வாங்குவா. சின்னவ வீட்டுலே இருந்தே அம்மாவுக்கு உதவியா அப்பளம் இடறது, முறுக்கு பிழிய சுத்துக் காரியம் இப்படி காசு சம்பாதிப்பா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அப்பா ஊருணித் தண்ணி மொண்டு வந்து ஊத்தி பத்து பைசாவா வாங்கிச் சேர்த்து வச்சு அவா ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து கல்யாணம் பண்ணி வைப்பாராம். ரெண்டு கல்யாணத்துலேயும் பெரிய சைஸ் குஞ்சாலாடு, பருப்பு வடை, போளி எல்லாம் உண்டு. நீ வரியா?” சீத்து ஆவலோடு கேட்டான்.
யட்சி அவசியம் வருவதாகச் சொன்னாள். சீத்து அப்படியும் இப்படியுமாக அசைந்து ஓரமாக கல் சுவர் பக்கம் ஓடினான்.
“ஒண்ணுக்கு போகலாமா இங்கே?”
“போக ஆரம்பிச்சுட்டே. இதிலே என்ன கேள்வி..” யட்சி சிரித்தாள். ஒரு குடம் மூத்திரம் போக வேண்டியிருந்ததால் யட்சியின் பார்வையிலிருந்து விலக முடியவில்லை.
“பித்தானை போட்டுண்டு போடா”.
அவள் குரல் பின்னால் துரத்த சீத்து கருப்பன் சந்நதிக்குள் இருந்து வெகு சாவகாசமாக நடந்து வந்தான். நல்ல வேளை யாரும் அங்கே இல்லை.
தேரின் பக்கம் ஒரு வினாடி நின்றான். சீத்து மாதிரி ஒரு சின்னப் பையனும் யட்சி போல வனப்பான மூத்த பெண் ஒருத்தியும் சேர்ந்து கெட்ட காரியங்கள் செய்யும் மர சிற்பங்கள் செதுக்கப் பட்டிருந்த தேரின் ஓரமாக யட்சியோடு சந்தோஷமாக இருக்க வேணும் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. சீத்து பஜனை மடத்தை நோக்கி ஓடினான்.
”குசேலோபாக்கியானம் கோலாட்டக் கதை இன்னிக்கு நாலு பாட்டு அடிக்கலாம்” என்று ஜோசியர் வீட்டு மாமி ஒரு பழைய பவுண்ட் நோட் புத்தகத்தைத் திறந்தபடி சொன்னபோது சீத்து அங்கே இருந்தான்.
”போடா குழந்தே மூஞ்சி கை கால் அலம்பிண்டு வீபுதி இட்டுண்டு வா. இப்படி நடுவிலே வந்து உக்காரு. உனக்கு பாட வந்தா நீயும் பாடலாம். வராட்டாலும் அங்கங்கே கிருஷ்ணா கிருஷ்ணான்னு இவா சொல்றபோது நீயும் கூடவே சொல்லலாம்”.
அந்த மாமி சொல்லிக்கொண்டே போக ”அப்புறம் இவனையும் கண்டாகண்டான்னு கோலாட்டம் போடச் சொல்வீங்க போல இருக்கே” என்று யாரோ சொல்லிச் சிரித்தார்கள்.
“உஷா, வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது”. இன்னும் சிரிப்பு. கோலாட்டம் ஆரம்பமாயிற்று.
துவாரகைக்கு சுதாமனை அவன் பெண்டாட்டி சுசீலை தோளில் அவல் மூட்டையோடு அனுப்ப, இருபத்தேழு குழந்தைகளும் ஜெயம் ஜெயம் என்று வழியனுப்பிக் கோலாட்டம் போடுவதாக பாட்டு. ”எங்கம்மா எழுதி சிட்டைப் படுத்தினா” என்று ஜோசியர் மாமி பெருமை பேசியபடி அந்தப் பாட்டை உரக்க சொல்லிக் கொடுத்தாள். காதில் பாட்டு வரிகளை வாங்கியபடி ”கோலேனா கோலே கோலேனா கோலே” என்று அசைந்து ஆடிப் பாடி கோலாட்டம் முன்னே போனது. சீத்து பார்த்துக் கொண்டே இருக்க, மஞ்சளும் பச்சையும் நீலமும் காவியும் பூசிய மெல்லிய கோல்கள் அவன் முகத்தை நெருங்கி விலகி சட்டென்று ஒன்றோடு ஒன்று மோதிச் சத்தமிட்டு நகர, பாட்டுச் சத்தம் மெல்லிய தாரையாக இழைந்து வந்தது. ராத்திரி எட்டு மணிக்கு நிறுத்தி அவரவர்கள் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு வந்தார்கள். சீத்து போனால் சாப்பிட்டுத் தூங்கி விடுவான் என்ற பயமோ என்னமோ இட்லியும், தோசையும், அரிசி உப்புமாவுமாக சின்ன எவர்சில்வர் சம்புடங்களில் கொண்டு வந்து அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.
அதில் பாதிக்கு மேல் வீட்டுக்கு எடுத்துப் போகக் கட்டி வைத்து விட்டான் சீத்து. சாப்பிட்டு விட்டு தூங்காமல் கோலடிக்க, பஜனை மண்டபத்துக்கு உள்ளேயே லஞ்ச் ஹோம் வீட்டிலிருந்து சின்ன அண்டாவில் காப்பி சுடச்சுடக் கொண்டு வந்து வைத்திருந்ததை ஒன்பது மணி சுமாருக்கு எல்லோருக்கும் டம்ளர் டம்ளராக விளம்பிக் கொடுத்தார்கள். காப்பியை மூட்டை கட்டிப் போக சாத்தியமிருந்தால் அதையும் சுருட்டி எடுத்துக் கட்டி வைத்திருப்பான் சீத்து.
தலைமுடியை இறுக்கிப் பின்னி, தாழம்பூத் தொடுத்து வந்த நான்கு பெண்களின் தலையிலிருந்து கனமான தாழம்பூ மணம் அலையலையாக எழுந்தது. தேரடிக் கருப்பன் முன்மண்டபத்தின் உள்ளே இருட்டில் கோவில்களும், அதி உன்னதமான மரங்களுமாக விரியும் பாதையை நினைவு படுத்தும் வாசனை அது. ஒன்பது மணிக்கு கரண்ட் போக இருட்டில் பூ வாசனை தாறுமாறாக அதிகரித்தது.
சீத்து பஜனை மண்டபத்துக்கு வெளியே மூத்திரம் போக நகர, அவன் இடுப்புக்குக் கீழே அவசரமாக யாரோ பிடித்தபோது அவன் கண்ணை மூடிக்கொண்டு பரவசத்தோடு யட்சி என்றான். அங்கே மட்டும் மல்லிகைப்பூ மணம் தீர்க்கமாக அடித்து விலகியது. கரண்ட் வந்தபோது ஒவ்வொரு பெண்ணாகப் பார்த்தான். யாரும் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு வந்திருக்கவில்லை. யட்சி எங்கே?
பத்து மணி வரை கிருஷ்ணன் தூது கோலாட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. அண்டாவில் இருந்த காப்பியை வழிச்சு வாரி பசுவனுக்குக் கொடுத்தார்கள். மிஞ்சியதை ஆளுக்கு ஒரு வாய் குடித்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று பாடியபடி நகர்ந்தார்கள். மிச்சம் நாளைக்கு என்று வீட்டுக்குப் போனார்கள்.
ராத்திரி பத்து மணிக்கு வீடே சுற்றி உட்கார்ந்து சீத்து கொண்டு வந்த ஆகாரத்தை ஒரு கை பார்த்தபடி அதுவும் இதுவும் பேசிக் கொண்டிருக்க அரைக் கனவில் படுத்திருந்த சீத்துவின் விரலை யட்சி தாழம்பூ வாசனையோடு மெல்லத் தன் விரல்களால் நீவினாள். வலி குறையக் குறைய, அவளுடைய கை கீழே இறங்கி வந்தது. அவன் புரண்டு படுத்தான்.
”ஓடப்பாட்டு கொண்டு வர்றியா? ஜோசியர் பெண்டாட்டி கிட்டே கேளு”.
“சரி கேக்கறேன். அங்கே எல்லாம் கையை வைக்காதே அடி யட்சி”.
“நான் வைக்கலே. நீயா நினைச்சுக்கறே”.
சீத்துவைத் தன் உதடுகளால் ஒத்தியபடி இருக்க அவன் உறங்கிப் போனான்.
(அடுத்த இலக்கத்தில் நிறைவுறும்)