எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி
மற்ற கோட்டைகளுக்கு எல்லாம் இல்லாத வடிவ நேர்த்தியும், அழகான புல்வெளிகளும், நீரூற்றுகளும் மிர்ஜான் கோட்டையை வேறுபடுத்திக் காட்டுவதை சென்னு மனமெல்லாம் பெருமையோடு சுவரை அணி செய்த நீண்ட தீவட்டி வரிசையை நோக்கியபடி நினைத்தாள். அவளுடைய நுணுக்கமான திட்டப்படி தான் கோட்டை எழுந்து வந்தது. ஒவ்வொரு மலைக்கல்லாக, மரத் துண்டாக அந்தப் பெரிய கல் கட்டிடம் வெறும் வெளியில் இருப்பு உரைத்து ஓங்கி உயர்ந்து எழுந்தபோது முதலில் ஏற்பட்ட பெருமை அது.
இப்போதெல்லாம் அடிக்கடி மனம் உற்சாகம் கொள்ளும்போது மிர்ஜான் மிர்ஜான் என்று அது திரும்பத் திரும்பக் குரல் தருகிறது.
என்றாலும் மிர்ஜான் கோட்டையை உள்ளே வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு அவளுக்கு வாழ்த்து சொல்ல மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தாளிகளை அனுமதிக்கிறாள் அவள்.
பாதுகாப்பு நிறைந்த இடம். பாதுகாப்பை ரகசிய வழி, கதவுகள் திறக்க மூட உள்ளூற இயங்கும் தமிழ்ப் பிரதேசத்து பூட்டுகள் என்று விரிவாகக் கடைப்பிடிப்பதைத் தேவையில்லாதபடி யாராவது கண்டு கொண்டு போய் வெளியே தகவல் கசிய வைத்தால் இவ்வளவு முயற்சி எடுத்துக் கட்டியதெல்லாம் ஊரறிந்த ரகசியமாகி விடும். வேறு ஒன்றும் வேண்டாம், கோட்டையைச் சுற்றி ஒன்றல்ல, இரண்டு சுவர்கள் வேறு எங்கும் இல்லாத அதிசயமென்று நோக்கிப் போகிறவர்கள் சொல்லித் தேவையில்லாதவர்களுக்குத் தகவல் தந்து மிர்ஜான் கோட்டையின் முதல் பாதுகாப்பைக் காற்றில் பறக்க விடக்கூடும்.
அவர்கள் தொலைதூரத்திலிருந்து வேறு பிரதேசத்திலிருந்துதான் வந்தவர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. சென்னுவின் ராஜாங்கத் தலைநகரமான ஜெருஸோப்பாவில் இருந்து வந்தவர்களாகக்கூட இருக்கலாம். யாருக்கு எது எதற்காகத் தேவைப் படுகிறதோ அதில் ஒரு பகுதியை அவர்களுக்குச் சொன்னால் போதும் என்பதே சென்னுவின் கொள்கை. கோட்டையும் கொத்தளமும் வந்து பார்த்து ஓரமாக மூத்திரம் பெய்து அப்பமோ அதிரசமோ உண்டு புகையிலை மென்று துப்பி சரம் சரமாகத் தகவல் அவலை மென்று போவதற்கான சமாசாரங்கள் இல்லை.
அவற்றின் முக்கியத்துவம் சென்னுவுக்குத் தெரியும். நிரந்தரப் பகைவர்களான போர்த்துகீசியர்களுக்குப் புலப்படும். நுணுக்கமாக அலசி ஆராயத் தெரியாமலா கடல் கடந்து இத்தனை தூரம் மிளகு வாங்கவும், அசந்தால் தொடையில் கயிறு திரித்து நாடு பிடிக்கவும் வந்து போக அசாத்திய சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு. பகைவனின் திறமையையும் போற்றுவாள் சென்னு. சென்னு போர்த்துகீஸ் மகாராணியாக இருந்து, போர்த்துகீஸ் கவர்னர் பெரேரா சாளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கூட அவனைக் கொண்டாடி இருப்பாள் கவுன் அணிந்த போர்த்துகீஸ் சென்னு.
கவுன் அணிந்த தன் உடம்பைக் கற்பனை செய்ய அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதுவும் அறுபது வயதில். உடம்பு வழங்கினால் அறுபதிலும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளலாம். சென்னுவுக்கு மணாளனாக யார் வருவார்கள்? தன்னை அறியாமல் பலமாகச் சிரித்து உடனே நிறுத்திக் கொண்டாள். அறுபது வயதில் வேறென்ன வருமோ, தறிகெட்டோடும் நினைவுகளை இழுத்துப் பிடித்து நிறுத்த நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.
இந்தத் திருப்பத்தில் இரண்டு பிரம்மாண்டமான வெளிச்சுவர்களும் ஒன்றை ஒன்று பிரியாமல் வளைந்து திரும்பி நீண்டு போக பளிங்கு போன்ற தண்ணீர் நிரம்பிய கோட்டையின் தடாகம் நடுவே அழகு மிகுந்து தென்படும். தினம் தண்ணீரை வடித்து விட்டு ஷராவதி நதியின் நீரை நிரப்ப ஒரு பத்து பேராவது குழுவாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தண்ணீர் எப்போதும் பூவும் வெட்டிவேரும் மணக்க, இனித்திருக்க, நாவல் மரத்தின் உலர்ந்த கிளைகள் நீரில் ஊறிக் கிடக்கின்றன. ஏலக்காய்ப் பொடி கூட கலந்து நல்ல வாடை இன்னும் அதிகமாக அடிக்கச் செய்ய சென்னு தயார்தான். ஆனால் கோவில் தீர்த்தம் போல் சாமி வாசனை வந்தால் தடாகத்தில் யாரும் இறங்க மாட்டார்கள். கன்னத்தில் படபடவென்று பக்தியோடு போட்டுக்கொண்டு விலகி ஓடி விடுவார்கள்.
வெய்யிலோ மழையோ மிர்ஜான் கோட்டைக்குள் தான் சென்னு எப்போதும் இருக்கிறாள். வயதாக வயதாக, மிர்ஜான் கோட்டையை விட்டு எங்கே வெளியே போனாலும், ராத்தூங்க வீடு திரும்ப வேண்டும் என்று பசுவைப் பிரிந்த கன்று போல் மனம் பதைபதைக்க ஆரம்பித்து விடுகிறது.
சென்னுவுக்குப் பாதுகாப்பு தீர்த்தங்கரர்கள் ஆசிர்வதித்த மிர்ஜான் கோட்டைதான். இன்னும் எத்தனை நாள், வருடம் சுவாசித்து நடமாட வேண்டும் என்று விதித்திருந்தாலும், அத்தனையும் இந்த இடத்தை விட்டு வேறெங்கும் இல்லை. இல்லாமல் போன பின்னும் அவள் இங்கே தான் சுற்றிச் சுற்றி வரப் போகிறாள்.
— — — — — — — –
சென்னபைரதேவி கோட்டைக் காரியாலயத்தில் நுழைந்தபோது அதிவீர் தளவாயும், பத்ரபாஹு பிரதானி மற்றும் உப பிரதானிகள் எட்டு பேரும், இரண்டு சுபேதார்களும் அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்தார்கள். எண்பது கல் தொலைவிலிருக்கும் ஜெருஸப்பா நகரின் ஊர்ப் பிரமுகர்களும் ஹொன்னவர் மற்றும் மிர்ஜான் நகரப் பிரதிநிதிகளும் ஒருவர் விடாமல் வந்து பின் வரிசை ஆசனங்களில் பெரும்பாலும் அமர்ந்து சென்னபைரதேவி வருவதற்குக் காத்திருந்தார்கள்.
அரண்மனை முற்றம் கடந்து நீண்ட ஒழுங்கைக்குத் திறக்கும் கதவின் மணி ஒலிக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
”ஜய விஜயீ பவ”.
ஜய விஜயீ பவ
விடா லோங்க அ ரயின்ஹ தா பிமெந்தா
விடா லோங்க அ ரயின்ஹ தா பிமெந்தா
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க”
மிளகுப் பேரரசி நீடு வாழ்க.
பிரதானி உரக்கச் சொல்ல, அவை முழுக்க எழுந்து நின்று ஒரே குரலில் மீண்டும் ஒலி எழுப்பியது.
முன் மண்டபத்தில் இருந்து இரண்டு வரிசையாக மகளிர் ரோஜா இதழ்களைப் பொழிந்தபடி வர, அவர்களுக்கு முன்னால் மங்கல வாத்தியம் வாசித்தும் தோளில் கட்டித் தொங்கவிட்ட முரசுகளை அறைந்தபடி நகர்கிறவர்களும், சங்கு முழங்கும் கலைஞரும், நாட்டியமாடி வரும் நடனப் பெண்டிருமாக அலை அலையாக வந்து அரசியின் காலடியில் வணங்கி மரியாதை செய்து பதில் மரியாதையாக இளவரசர் நேமிநாதரும் ரஞ்சனாதேவியும் வெள்ளிப் பாத்திரங்களில் வைத்து வழங்கிய காசும், பூவும், சிலருக்குக் அவற்றோடு கூட பொன்னுமாக பெற்று அவைக்கு முதுகு காட்டாமல் நடந்து போனார்கள்.
நேமிநாதனுக்கும் ரஞ்சனாவுக்கும் வழங்கி வழங்கிக் கை ஓயவில்லை.
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க”
பரிசுப் பொதிகளோடு ஒவ்வொருவராக எதிரில் வந்து குனிந்து வணங்கி வாழ்த்துச் சொல்லிப் போக நேரம் ஊர்ந்தது.
விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார்.
”ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. ராயர்களின் துணையும் வழிகாட்டுதலும் என்றும் உண்டு”.
வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது
வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.
“நேமி, இதுவே இன்றைக்கு முழுக்கப் போகும் போல் இருக்கே. மற்ற ராஜாங்கக் காரியத்தை எல்லாம் எப்போது கவனிக்க நேரம் கிடைக்கும் இன்றைக்கு?”
நேமிநாதனை அருகே அழைத்து ரகசியமாகக் கேட்டாள் சென்னபைரதேவி.
“அம்மா, அந்தக் கவலையே வேண்டாம். உங்கள் அறுபதாவது பிறந்தநாளன்று அதைக் கொண்டாடுவது தவிர வேறே எந்தச் செய்கையும் இல்லாமல் திட்டமிட்டுள்ளது. ராஜாங்கக் காரியங்கள் இன்று ஒரு நாள் தாமதமானால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இன்று மட்டும் அனுமதி தாருங்கள்” அவன் அன்பும் மரியாதையுமாகச் சொன்னான்.
”இதென்ன, நீயாக ஏதாவது ஏற்பாடு பண்ணுவது. செய்து முடித்து அனுமதி கேட்பது. புது வழக்கமாக இருக்கிறதே” சிரித்தபடி கேட்டாள்.
படம் : சதுர்முகபஸதி, கர்கலா (சென்னபைரதேவி கட்டியது)
நன்றி commons.wikimedia.org