நண்பர் ஜெயமோகன் தன் இணையத் தளத்தில் இன்னொரு நண்பர் கடலூர் சீனு எழுதிய ‘ராமோஜியம் நாவல் நூல் அறிமுகம் – மதிப்புரை’க்கான சுட்டியைப் பதிப்பித்திருக்கிறார்.
நன்றி ஜெயன், நன்றி சீனு
ஜெ.மோ இணையத் தளத்தில் கடலூர் சீனு கட்டுரை
—————————————————————————————————-
இரா முருகன் எழுதிய ராமோஜியம் ஒரு சமகாலவரலாற்று நாவல். 620 பக்க இந்த நாவலின் ஒன் லைனை சொல்லிவிட முடியும். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் பணியில் இருக்கும் ராமோஜிக்கும் அவன் மனைவி ரத்னாவுக்கும் இடையே வருகிறாள் சினிமா நடிகை புவனா. பிறகு என்ன நடந்தது? ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய இந்தக் கதையைத்தான் ஜென்ம ஜென்மமாக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து மீண்டும் மீண்டும் ராமோஜி வாழும் வகைமையை இடையறாத மெல்லிய நகைச்சுயை பூசி முன்வைக்கும் நாவல்.
இந்த நாவலை எழுதும் பத்மநாப ராவின் மகனான இன்றைய மராட்டிய ராமோஜி 1937 இல் சர்க்கார் உத்யோகத்தில் சேர்ந்து, விட்டோபாவை நண்பனாக பெற்று, ரத்னாவை திருமணம் செய்து, சுதந்திராவைப் பெற்று, காமப் பிறழ்வில் புவனாவை சேர்ந்து, ஏமர்ஜன்சி காலத்தில் ஓய்வு பெற்று 1997 இல் லண்டனில் இயற்கை எய்துகிறார். இவர் எழுதும் இந்த ராமோஜியம் நாவலில் போன தலைமுறை பத்மநாப ராவ் மகன் ராமோஜி புதுவை துப்ளெக்ஸ் துறைக்கு, அனந்தரங்கம்பிள்ளைக்கு உதவியாக அரசு வேலையில் இருக்கிறான். அவன் வாழ்வில் குறுக்கிடும் விட்டோபா, ரத்னா புவனா இந்த ஜென்மத்தில் என்னவாக இருக்கிறார்கள், ராமோஜியை என்ன விதம் பாதிக்கிறார்கள் என்பது இவர்களுக்கும் முந்தைய தலைமுறை ராமோஜியில் இருந்து தொடர்வது.அந்த ராமோஜி சிவாஜியின் இரண்டாவது மகன் ஆளும் மகாராஷ்டிராவில், கடல்படை தளபதி கனோஜி ஆங்கிரே யின் முதன்மை தளபதி, அவன் வாழ்வில் குறுக்கே வரும் விட்டோபாவும் ரத்னாவும், புவனாவும் என்னவாக இருக்கிரார்கள் அவனை என்ன விதத்தில் பாதிக்கிறார்கள் என ராமோஜிக்களின் வாழ்க்கைகள் என விரியும் நாவல்.
மூன்று வெவ்வேறுகாலமும் அவை சித்தரிக்கும் நிலத்தையும், பேசும் மொழியையும் மிக குறைவான சித்தரிப்புகள் வழியே வாசகன் அந்த காலத்தில் வாழும் கற்பிதத்தை சுலபமாக உருவாக்கி விடுகிறார் இரா முருகன். குறிப்பாக பாண்டிச்சேரி ராமோஜி காலம்.
சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே அந்த சூழலை விஸ்தாரமாக விவரிப்பதன் வழியே வசீகர காலப் பயணம் ஒன்றை நோக்கி வாசகனை தள்ளி விடுகிறார் நாவலாசிரியர். உதாரணமாக உலகப்போரில் சென்னையில் குண்டு விழப்போகும் பயத்தில், சர்க்கார் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, அதை பொது ஜனம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை, ராமோஜி பார்க்கும் a.r.p வார்டன் பணிக்கு வாசகனையும் உடன் அழைத்து செல்வது வழியே காட்டுகிறார்.
போர்க்கால ரேஷன்கள், அரசு செய்யும் அபத்தங்களை, மெல்லிய நகைச்சுவை இழைய சொல்லி செல்லும் நாவல், உண்மையாகவே ஜப்பான் குண்டு வந்து விழும் இரவில் வேறு உணர்வு நிலைகளை தொடுகிறது. யுத்த பயத்தில் சென்னை மொத்தத்தையும் சர்க்கார் காலி செய்து ஜாகை மாற்றும் அவதிகளை சொல்லிய படியே செல்லும் ஆசிரியர் போகிற போக்கில் அந்த சூழலில் ஒரு வெள்ளைக்காரன் ரிப்பன் பில்டிங் பின்னால் இருக்கும் மிருக காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் யானை புலி சிங்கம் அத்தனையையும் சுட்டே கொல்வதையும், சுட்டு தின்ன முடிந்த உயிர்களை சுட்டு தின்றதையும் சொல்லிச் செல்கிறார்.
அன்றைய சென்னையின் ட்ராம் பயணம், அன்றைய டில்லி என வித விதமான நிலங்களுக்கு பாயும் கதை மெல்லிய தீற்றல் சித்தரிப்புகள் வழியே அந்த காலத்தையும் இடத்தையும் கொண்டு வந்து விடுகிறது.
பக்கங்கள் தோறும் மெல்லிய வினோதத்துடன் கதாபாத்திரங்கள் அறிமுகமாகி அவ்வாறே நீடித்து வளர்ந்து மறைகிறார்கள். உதாரணமாக சினிமா ஆர்ட் டைரக்டர் சாஜுகாந்த் கனிட்கர் வீட்டுக்கு ராமோஜி முதல் முதலாக வரும் சித்திரம். கதவை திறந்தும் முதலில் முட்டி வெளியேறி ஓடுகிறது ஒரு கழுதைக் குட்டி, பின்னாலேயே அந்தரிடிச்சான் சாகிப் என பல்டி அடித்தபடியே வெளியேறுகிறான் கனிட்கரின் சின்ன வயது மகன். கனிட்கர் மனைவியை அறிமுகம் செய்கிறார். அவள் பெயர் குண்டி. (மராத்தியில் பூஜாடி என்று பொருள்). ராமோஜி முதலிரவில் தாபத்துடன் மனைவியை தழுவுகிறான். முக்கிய தருணத்தில் ‘கொஞ்சம் பொறுங்க’ என்றுவிட்டு ரத்னா தலையணைக்கு கீழே எதையோ தேடுகிறாள். கண்டெடுக்கிறாள். மூக்குப்பொடி டப்பி. கற்ற்ற்றர்…என்று ஒரு சிமிட்டா இழுத்து இரண்டு தும்மல் தும்மிவிட்டு ஆங் இப்போ தொடருங்கள் என்கிறாள். இப்படிப்பட்ட தருணங்கள் வழியாக மட்டுமே நகரும் நாவலில், முதன் முதலாக சர்க்கார் தேநீர் தமிழ் நாட்டுக்குள் நிலைபெற முயன்றது, அன்றைய சினிமா சூழல், உலக இந்திய அரசியல் சூழல், என விரிந்து ஒரு முழுமையான உலகத்தில் வாசகனை இறுத்துகிறது. ராமோஜி பார்வை நோக்கில் மட்டுமே நிகழும் ( ரத்னா இடையே புகுந்து இந்த அத்தியாயத்தை நான் எழுதுகிறேன் என்ற ஒரு அத்தியாயத்தை தவிர்த்தால்) இந்த நாவலின் ஓட்டத்தில் நக்சலைட் ஆக மாற குடும்பத்தை விட்டு போகும் கல்பனா, குடும்பத்தை விட்டு வெளியேற வழியே இன்றி முதிர் கன்னியாக வாழ்ந்து சாகும் கங்கா போன்ற துணை கதாபாத்திரங்களும் உண்டு.அனைத்துக்கும் மேலாக இந்த நாவலை தனித்துவம் கொண்டதாக செய்வது இந்த நாவல் நெடுகிலும் அநேகமாக பக்கத்துக்கு ஒன்று வீதம் விவரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள். சூழ்திரு சிறுகதைக்கு இணையான சந்துஷ்டி அளிக்கும் சாப்பாட்டு வர்ணனை. கூறியது கூறல் இன்றி இத்தனை உண் பண்டங்கள் அடுக்க முடியும் என்பதே ஆச்சரியம்தான்.
இவற்றுக்கு வெளியே இந்த நாவலை எனக்கு அணுக்கமாக்கிய விஷயம் இதிலுள்ள சுகஜீவனம் எனும் அம்சம். தலைமுறைகள் தொடர்ந்தாலும் சரி, புவனா குறுக்கே போனாலும் சரி, தலைக்கு மேலே ஜப்பான் குண்டு போட்டாலும் சரி, இந்த வாழ்க்கை என்பது சுக ஜீவணம்தான் என்பதை இரா முருகன் இந்த நாவல் வழியே அடிக்கோடிடுகிறார். இந்த நாவலை போன வருட நோய்த் துயர் சூழலில் இரா முருகன் அவர்கள் எழுதியதாக தெரிகிறது. இதன் பொருட்டும் இந்த நாவல் முக்கியத்துவம் கொள்கிறது.
கடலூர் சீனு