“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்ஷ தேவன் அருளுண்டாகட்டும்”
போஜன சாலை என்ற விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. தலைவாழை இலைகள், கூட்டிப் பெருக்கி பன்னீர் கொண்டு மெழுகிய பளிங்குத் தரையில் வரிசையாகப் பாய் விரித்து இடப்பட்டன. முதலில் எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த ஊறுகாயும் உப்பும் பரிமாறப்பட்டது. அவரைக்காயும் உருளைக் கிழங்கும் கலந்த பொரியல் அடுத்துப் பரிமாறப்பட்டது. குழைய வேகவைத்த பருப்பும் தொடர்ந்தது.
தொடர்ந்து வெல்லப் பாயசமும் மலையாளப் பிரதேசத்து பாலாடை பிரதமனும் இனிக்க இனிக்க இலையில் வந்து சேர்ந்தன.
வெள்ளரிக்காய்ப் பச்சடியும் கோசுமரியும் அடுத்து இலையேறின. தேங்காய் அரைத்து விட்டுப் பரங்கிக் காய், முருங்கைக்காய்த் துண்டங்கள் சேர்ந்த அவியல் பின்னர் வந்தது. தேங்காய் கலந்து உதிர்த்த புட்டும். வாழைக்காயை அவித்து உதிர்த்த கறியும், சித்ரான்னமாக எலுமிச்சைச் சாதமும் தேங்காய்ச் சாதமும், புளியஞ்சாதமும் பரிமாறப்பட்டன.அடுத்து இரண்டிரண்டு பருப்பு வடைகள் இலைதோறும் இடப்பட்டன.
பலா மூஸும் கத்தரிக்காய்த் துண்டங்களும் சேர்த்துக் கொதிக்க வைத்த புளிக்குழம்பு வருவதற்கு ஒரு நிமிடம் முன் பொலபொலவென்று அவித்த அரிசிச் சோறு சுடச்சுட இலை தோறும் வட்டிக்கப்பட்டது. புத்துருக்கு நெய் அந்த சோற்றின் மேல் தாராளமாகப் பெய்யப்பட்டது. ஹரி என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்க அங்கே ஹரி என்று பல குரல்கள் உயர்ந்து எழுந்தன. சமபந்தி போஜனம் தொடங்கியது.
பிராமண அதிதிகள் பரசேஷணம் சடங்கை நிறைவேற்ற உணவை வழிபட மந்திரம் சொல்லி, சாதம், பருப்பு, நெய் கலந்து எடுத்த கவளம் சோற்றை எச்சில் படாமல் உயர்த்தி வாயில் போட்டுக் கொண்டனர்.
எல்லோரும் சோற்றில் புளிக்காய்ச்சலைப் பிசைந்து உண்ண ஆரம்பித்தபோது இலை தோறும் தேங்காய் எண்ணெயில் பொறித்த இரண்டு கை அகலமுள்ள உளுந்து அப்பளங்கள் அவை வைத்திருந்த கூடைகள் தரையில் இழுக்கப்பட்டு விரசாக நகர ஓடி ஓடிப் பரிமாறப்பட்டன.
அடுத்து மறுபடி சோறு பரிமாறி மிளகுச் சாறு என்ற கமகமவென்று மிளகு பொடித்துப் போட்டுச் செய்த பருப்பு ரசம் பரிமாறப்பட்டது. ஏதோ ஒரு வரிசையில் இருந்த இளைஞர்கள் மிளகுச் சாற்றைக் கண்டதும், மிளகு மகாராணி ஜெய விஜயீ பவ என்று முழங்க, அடுத்த அலைகளாக மற்ற வரிசைகளிலிருந்தும் உற்சாகமான குரல்கள் உயர்ந்தன.
மிளகுச் சாற்றில் பிணைந்த சோறு உண்டபின், அடுத்து இனிப்பு வந்தது. இலைக்கு ஒரு பெரிய ஜாங்கிரி இடது பக்க இலைக் கீழ் ஓரமாக வைத்துப் போகப்பட்டது. மூன்றாவது இனிப்புப் பாயசமாக சர்க்கரை கலந்து சுண்டக் காய்ச்சிச் செய்த பால் பாயசம் கரண்டி கரண்டியாக நிறைக்கப்பட்டு எல்லோருக்கும் இலையோரமாகத் தொன்னைகளில் பரிமாறப்பட்டது.
விரும்பி இன்னும் கொஞ்சம் இடச்சொல்லிக் கேட்டவர்களுக்கு இன்னொரு முறை அப்பளமும் அவியலும் பொரியலும் ஊறுகாயும். பாயசமும் பரிமாறப்பட்டன. அடுத்து விருந்தின் இறுதிப் பகுதியாக குளிர்ந்த அரிசிச் சாதத்தில் கெட்டித் தயிர் கலந்து, திராட்சை, கொடிமுந்திரி, இஞ்சித் துண்டுச் சீவல், பேரிச்சம்பழ விள்ளல்கள் கலந்து பிசைந்த தயிர்சாதம் பரிமாறப்பட்டு, மறுபடி ஊறுகாயாக புளிக்காடியில் ஊறிய மிளகும் இஞ்சியும் தொட்டுக் கொள்ள வந்து சேர்ந்தது. விருந்து நிறைவடைந்ததை இலையில் மெல்ல வந்து அமர்ந்த மலை வாழைப்பழம் கூறியது.
உண்டு திருப்தியாகி கைகழுவி வந்தவர்கள் சத்தமாக ஏப்பமிட்டுக்கொண்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு பெற்று இதுபோல் விருந்து பூலோகத்திலேயே கிடையாது என்று சிலாகித்து அரசியை மறுபடி வாழ்த்தி மண்டபச் சுவர்களை ஒட்டிய கல்படிகளில் அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள்.
ஹொன்னாவர் குகை ரயில் பாதை படம் நன்றி கர்னாடகா.காம்