பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை)

பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை)
————————–
கறுப்பு நிறப் படைவீரன் ஒருத்தனை
சதுரங்கப் பலகையின் குறுக்கே
அழைத்துப் போய்
வெள்ளை முதல் வரிசையில்
கொண்டு நிறுத்தினேன்.

”நீ யாராக ஆக ஆசைப்படுகிறாய்
சொல் உன்னை மாற்றுவேன்”-
வரம் வழங்கும் கடவுளாக
கருணையோடு அவனைப் பார்த்தேன்.

என்னை யானை ஆக்கினால்
நேரே நடப்பேன் பக்கவாட்டில்
கோணல் இல்லாது ஊர்வேன்
வேண்டாம் அந்த சொகுசு அசைவு
நடக்கவே மறந்து போகும்.

என்னைக் குதிரையாக்கினால்
புத்திசாலியாக அவ்வப்போது L போல
குறுக்கும் நெடுக்கும் சட்டென்று
நகரத் தீர்மானிக்கணும்
அடிப்படை அறிவு போதாது அதற்கு.

என்னை மதகுரு ஆக்கினால்
குறுக்கே மட்டும் போய்வந்து
தூண்ட வேண்டியது
போரா அமைதியா தெரியலை.

”உன்னை மகாராணி ஆக்குவேன்” –
எல்லாம் வல்ல ஈசனாக மொழிந்தேன்
”எங்கும் எப்போதும் சஞ்சரிக்க
உனக்கே எல்லா சக்தியும் தருவேன்”

“கருப்பழகி மகாராணி ஏற்கனவே உண்டே”
வீரன் கேட்டான் “இருக்கட்டுமே
இன்னொரு ராணியாய் நீயும் இரு”.
நான் மொழிந்தபோது கருப்பு ராஜா
நரைத்த மீசை தடவிச் சிரித்தார்
வெள்ளை ராஜாவும்
பூடகமாகப் புன்னகைத்தார்.

”ராணியாக மாட்டேன் பால்மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொண்டு
சோம்பேறி அரசனுக்கு சுகம் தர
வைப்பாடியாகணுமோ முடியாது
நான் நானாகவே,
வீரனாகவே இருக்கிறேன்” என்றான்

அது முடியாது மாறித்தான் ஆகணுமென்றேன்
”நான் இன்னொரு கறுப்புப் படைவீரனாவேன்”
விடாது கெஞ்சினான் முடியாது என்றேன்.

கோபத்தோடு சதுரங்கப் பலகையிலிருந்து
இறங்கிப் போன கறுப்புப் படைவீரனை
கண்டவர் சொல்லுங்கள் காத்திருக்கிறேன்
அவன் வராமல் சதுரங்கம் இல்லை.

இரா.முருகன் ஜூன் 4, 2021
(சதுரங்கத்தில் ஒரு கறுப்புப் படைவீரன் வெள்ளை முதல் வரிசைக்குப் போய்ச் சேர்ந்தாலோ, வெள்ளை வீரன் கறுப்பு முதல் வரிசையை அடைந்தாலோ அந்த வீரன் இன்னொரு பாத்திரமாகலாம்
pawn promotion)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன