1596 ஹொன்னாவரில் இருந்து மிர்ஜான் கோட்டைக்கு – மிளகு நாவலில் இருந்து

நான் எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து

மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார்.

“சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?” தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர்.

“பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் இங்கிலீஷ் பவுண்ட் மதிப்புக்கு மிளகும், ஏலமும், லவங்கமும், ஜாதிக்காயும், ஏன் பாக்கு கூட பெருமதிப்புக்குக் கைமாறப் போகிறது. நாம் பழைய அவமரியாதையை இன்னும் பெரிதாக எடுத்துக் கொண்டு இதெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கப் போகிறோமா?”

பெத்ரோ பொறுமையாகச் சொன்னார். காலைச் சூரியன் அவருடைய முகத்தில் படிந்திருந்த சுருக்கங்களைக் கோடு பரத்திக் காட்டியது. நெற்றியில் துளிர்த்த வியர்வையை கோட் பாக்கெட்டில் இருந்து எடுத்த லேஞ்சியால் துடைத்தபடி பெத்ரோ அவசரமாகப் பேசினார். இதை முடித்து அடுத்த வேலைக்குப் போக வேண்டிய அவசரம் அது.

ராஜதரிசனம். கௌண்டின்ஹோவுக்கு அது வேண்டாம் என்றால் போகட்டும். பெத்ரோவுக்கு வேண்டி இருக்கிறது. இந்தப் பருவத்தில் விலை மலிவாக எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு கொள்முதல் செய்து லிஸ்பனில் போய்ச் சேர்ந்து அரசரிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் அவர்.

அடுத்த கவர்னராக அவரையே அரசர் அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மிளகில் இருக்கிறது. ஜாதிக்காயும் பாக்கும் வேண்டுமென்று போர்த்துகீசு அரசியார் ஆர்வம் மிகுந்து கேட்டிருந்தார். பிரதேசம் முழுமைக்குமான கவர்னர் ஆக வாசனைத் திரவியம் போதும்.

பெத்ரோவுக்கு அந்த அளவில் ஏமாற்றமில்லாமல் நிறையக் கிடைக்கும் பூமி அது. மாஜி கவர்னருக்கும்தான்.

”நான் மரியாதையோடு பரிசளித்த பெல்ஜியம் கண்ணாடியை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவள் இல்லையா உங்கள் சிநேகிதி மிளகு அரசி?”

மாஜி கவர்னர் சாக்கடை ஓரம் நின்றபடி கேட்டார். உங்கள் என்ன உங்கள்? சாக்கடையில் தூக்கிப் போட்டு மிதிக்கத் தோன்றியது பெத்ரோவுக்கு. வேண்டாம். உடுப்பு அழுக்காகிப் போகும். பாதரட்சையில் சேறு படியும். போய்த் தொலை சகதி பன்றியே. போ.

“பிரபு மன்னிக்க வேண்டும். நீங்கள் இந்தப் பிரதேசத்துக்கு போர்த்துகீசிய அரசின் சற்று முந்திய பிரதிநிதி. நான் போர்த்துகீசு அரசரின் தனிப் பிரதிநிதி. இரண்டு பேரும் ஒத்துழைத்தால் இங்கே அடுத்த பத்தாண்டுகளுக்கு போர்த்துகல் அரசின் செல்வாக்கை அசைக்க முடியாது. அற்பமான பெல்ஜியம் கண்ணாடி குறுக்கிட்டு நொறுக்காத ஒத்துழைப்பாக இருக்கட்டும் அது”.

வேலியில் போகிற ஓணான் இந்த கௌண்டின்ஹோ என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. எனவே துரையவர்களே பின்பாரமாக வந்தது.

பெத்ரோ பேசியபடி இருக்க கவுண்டிஹோ துரையின் வண்டி நகர்ந்திருந்தது.

“கால விரயம், வார்த்தை விரயம். இவன் சொல்கிறானே என்று இவனுக்குக் கொட்டை தாங்கிக் கொண்டிருந்தால், வருடக் கடைசியில் லிஸ்பன் போனதும் அரசருக்கு என்ன பதில் சொல்வது? புரிந்து கொள்ளாத மனுஷர்”.

இன்றைக்கு இவர் முகத்தில் விழித்திருக்க வேண்டுமா?

முக்கியமான வேலை என்று கிளம்பும்போது குறுக்கே வந்து நிற்கிறான் கழுத்தறுப்பான். அந்தக் கண்ணாடியை தனியறைச் சுவரில் மாட்டி மகாராணி உபயோகிக்கிறாள் என்று வளர்ப்பு மகன் நேமிநாதன் சொன்னானே. இவனிடம் அதைச் சொல்லியிருக்கலாமோ. போகட்டும், அதை வைத்து கவுண்டின்ஹோ என்ன பண்ண? போய்ப் பார்க்கவா போகிறான் அந்தத் தனியறைக்கு?

கஸாண்ட்ரா கோழி வாங்கி வந்து சமைத்து வைக்கட்டும். நல்ல பிராந்தியும் வீட்டில் உண்டு. அரசியை சந்தித்து வந்து பிராந்தியும் கோழியும் கஸாண்ட்ராவுமாகப் பொழுது போகட்டும்.

சாரட் ஹொன்னாவர் நகரின் வெளியே வந்து பெருவழியில் சீரான வேகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது. சாரட் ஓட்டியின் பார்வையில் இருந்து அகல நடுவே இருக்கும் துணித் திரையை இழுத்து மூடினார் பெத்ரோ. இன்னும் அரை மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருட்டில் வண்டி தாலாட்டு பாட அவர் நித்திரை போவார். விருத்திகெட்ட மாஜி கவர்னர் எதிர்ப்பட்டிருக்காமல் இருந்திருந்தால் கஸாண்ட்ராவும் பக்கத்திலேயே இருந்திருக்கக் கூடும். சாரட்டில் அவளோடு சரசம் செய்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும். கள்ளிக்கோட்டையில் இருந்து பெத்ரோவின் மனைவி கண்ணை உருட்டி மிரட்ட அந்த எண்ணத்தைக் கைவிட்டார் தற்காலிகமாக. அதையும் இதையும் யோசித்தபடி உறங்கிப் போனார் பெத்ரோ துரை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன