எழுதி வரும் நாவல் மிளகு-வில் இருந்து : 1999 டிசம்பர் 24 காட்மாண்டு (draft to be edited)
————————————————————————————————–
சங்கரன் உள்ளாடைக்குள் மூத்திரம் போய் விட்டார். இந்த அறுபத்தைந்து வயசில் அவருக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம். ஐந்து வயதில் பள்ளிக்கூடத்தில் முதல் நாளன்று பகவதி பாட்டி கொண்டு போய் விட்டுவிட்டு வாசலுக்குப் போக, அவளை தீனமான குரலில் அழைத்துக் கொண்டிருந்தபோது தோன்றியது, அவள் இனி திரும்ப வரவே மாட்டாள், சங்கரனை வீட்டுக்குக் கூட்டிப்போக யாரும் வரப்போவதில்லை. இந்த மர பெஞ்சில் தான் இனி எப்போதும் உட்கார்ந்தும் தூங்கியும் இருக்க வேண்டும் என்று பயம் எழ, அவன் தன்னை அறியாமல் டிராயரை நனைத்து வெளியே சொட்ட மூத்திரம் பெய்தது அப்போதுதான்.
பகவதி மாமி, பகவதி மாமி. சங்கரனைப் பார்த்து விட்டு ஆமினா டீச்சர் பாட்டியை அவசரமாகக் கூப்பிட அவள் என்னமோ ஏதோ என்று அடித்துப் பிடித்துக்கொண்டு திரும்பி டீச்சரம்மா என்ன என்று ஆரம்பிப்பதற்குள் பேரனின் இருப்பு கண்டு தலையில் அடித்துக் கொண்டு, எனக்குன்னு வாய்ச்சிருக்கே என்று ஆமினாவிடம் புகார் சொல்ல டீச்சரம்மா சிரித்துவிட்டுச் சொன்னது – அதை ஏன் கேக்கறீங்க பகவதி மாமி. ஒவ்வொரு வருஷம் விஜயதசமி நேரத்திலே பசங்களை அரிஸ்ரீ எழுதி ஒண்ணாங்கிளாஸ்லே போடறபோதும் குறைஞ்சது பத்து பேராவது டிரவுசரை நனைச்சுப்பாங்க. இன்னிக்கு உங்க பேரன் ஆரம்பிச்சு வச்சிருக்கான்.
நினைப்பு எங்கேயோ போக, பிடித்து இழுத்து நேரே பார்க்க, உயர்ந்து மெலிந்த முகமூடிக்காரன் துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.
பயத்தில் உறைந்தார் ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க மூத்த காரியதிரிசி அரசூர் சங்கரன்.
அவசரமாகப் பார்வையால் இரைஞ்சினார் அவனை. இனிமேல் பகவதி பாட்டி பற்றியும் ஆமினா டீச்சர் பற்றியும் சத்தியமாக நினைக்க மாட்டார் சங்கரன். அரையில் மூத்திரம் நனைந்து அசௌகரியமாக இருக்கிறது. விமான நடைப்பாதைக்கு ஒட்டிய ஆசனத்தில் இருப்பதால் நொடிக்கொரு தடவை யாராவது ஒரு முகமூடிக்காரன் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நடைபோட்டு வர, அவனுடைய மிலிட்டரி உடுப்பு சங்கரன் மேல் உராய்கிறது. அவன் சங்கரன் பேண்டை நனைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பான். முகம் சுளித்தபடி துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்துச் சுட்டு விடுவான்.
முகமூடி அணிந்த ஐந்து பேர். அவர்களுக்குள் அரபியில் பேசியபடி விமானத்தைக் கடத்திக்கொண்டு போகிறார்கள். சங்கரன் அடங்கலாக நூற்று எழுபது பிரயாணிகள் அடுத்த நிமிஷம் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்கள். நேபாளத்தில் காட்மாண்டு நகரில் தொடங்கிய பயணம். டில்லிக்குப் போகிற விமானம். இப்போது எங்கே போகிறதோ தெரியாது.
மணி என்ன? எதோடும் சம்பந்தம் இல்லாததுபோல் சங்கரனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து இருமலோடு துளசி மணி உருட்டி ஜபித்துக் கொண்டிருந்த முதியவர் சங்கரனைக் கேட்டார். பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்கள் சங்கரனையும் அவரையும் பார்த்துவிட்டு உயிர்ப் பயம் மேலெழ நேரே பார்த்தபடி திரும்ப வெறிக்க ஆரம்பித்தார்கள்.
சங்கரன் கடியாரத்தில் தன்னிச்சையாக நேரம் பார்த்தார். சாயந்திரம் ஏழு மணிக்கு பத்து நிமிடம் பாக்கி இருக்கிறது. விமானம் சாயந்திரம் ஐந்தரைக்கு காட்மாண்டுவில் புறப்பட்டது. ராத்திரி எட்டுக்கு தில்லியில் இறங்க வேண்டியது. அதை ஒவ்வொரு தடவை நினைக்கும்போதும் பகீர் என்று அடி வயிற்றில் ஒரு பயம் ஊடூறி உடம்பை நடுங்க வைக்கிறது.
டைம் என்னன்னு கேட்டேன். பக்கத்து சீட்காரர் அவருடைய கடியாரமில்லாத உலகத்தில் இருந்து பொறுமை இழந்து கேட்கும்போது ஒரு பயங்கரவாதி சங்கரனைப் பார்த்து சத்தம் போட்டான் – கேட்டா சொல்லேன். இந்தி தெரியாதா உனக்கு?
சங்கரன் பரிதாபமாகப் பார்த்தபடி சொல்றேன் சார் என்றார். எட்டு மணி ராத்திரி. வயசானவன் யாருக்கோ சங்கரன் தகவல் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்கிறது போல் போகுது போ என்று கையை ஆட்டிப் புறக்கணித்தான். சாப்பாடு எப்போ வரும்? அடுத்த கேள்வி. சங்கரன் கடவுளைப் பார்ப்பது போல் துப்பாக்கி பிடித்த பயங்கரவாதியைப் பார்த்தான். பதிலே தேவையில்லாமல் உணவுப் பாக்கெட்கள் வைத்த சிறு வண்டிகளைத் தள்ளிக்கொண்டு இறுகிய முகங்களும், நடுங்கும் கைகளுமான விமான உபசரிணி பெண்கள் விமான நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
மூத்திர ஈரத்தை உறிஞ்ச முன் இருக்கைக்குப் பின் செருகி வைத்திருந்த காலையில் வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியின் இணைப்பை இடுப்புக்குக் கீழே இறக்கி உள்ளாடையின் ஈரத்தை உறிஞ்சும்படி வைத்துக் கொண்டார். நல்ல வேளை. அந்த தீவிரவாதிகள் யாரும் பார்க்கவில்லை.
எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார். லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ் என்று அரைகுறை இங்கிலீஷில் அவன் சொல்ல, நாங்க சொன்னதுக்கு அப்புறம் போனா போதும் என்று எரிந்து விழுந்தான் ஐந்து முரடர்களில் ஒருத்தன்.
யாருக்கும் சாப்பாடு பரிமாறக் கூடாது. கடைசி வரிசை இருக்கைகளுக்கு முன்னால் அதற்கு முந்திய இருக்கைகளின் பின் இருந்த பலகைகளை நீட்டி பூரியும், பிரியாணியும் நிறைந்த பாகெட்களை வைத்துக் கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ்கள் பயந்து போய் அப்படியே நின்றார்கள்.
ஒரு பயங்கவாதி முன்னால் வந்து உணவு எடுத்து வரும் சிறு வண்டியைக் காலால் உதைத்தான். சாப்பிட ஆரம்பித்தவர்கள் முன்னால் இருந்து சாப்பாட்டைப் பறித்து விமானத்தின் இறுதிப் பகுதியை நோக்கி வீசினானன் அவன்.
சிறு குழந்தை ஒன்றுக்கு அம்மா ஃபீடிங் பாட்டில் வைத்துப் பால் கொடுத்தபடி இருக்க பாட்டிலைப் பறித்தான். குழந்தையின் அம்மா இருகை கூப்பி குரல் நடுங்க எஜமான், பசிக்குது குழந்தைக்கு. கொஞ்சம் அது மட்டுமாவது பால் குடிக்க விடுங்க நீங்க நல்ல இருப்பீங்க என்று பிச்சைக்காரியாகக் கெஞ்சினாள். நிறைய நகை அணிந்து உயர்தரப் பட்டாடை தரித்திருந்தாள் அந்தப் பெண். ஒழிந்து போ என்கிற மாதிரி அவளை நோக்கி பாட்டிலை விட்டெறிய அது தரையில் விழுந்து ஆசனங்களுக்கு அடியில் உருண்டது. அந்தப்பெண் வேகமாகக் கீழே குழந்தையோடு சரிந்து கை துழாவி அதை எடுத்தாள். மேலே ஒட்டிய தூசியை முந்தானையில் துடைத்து சுத்தப்படுத்தத் தன் வாயிலிட்டு சுவைicsத்து குழந்தைக்கு நீட்டினாள். அழுகை நிறுத்திய குழந்தை குடிக்க ஆரம்பித்தது.
pic kathmandu ack en.wikipedia.org