வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ : நாற்பதாண்டுகளை ஒரு ராத்திரியில் பரிச்சயப்படுத்தி

(வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து)
—————————————–
தலையை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிடம் இருந்துவிட்டு தாங்குகோல்களை சத்தம் எழுப்பாமல் தரையில் கிடத்தி, “நீ எப்படி இருக்கே? உன் ஆத்துக்காரி எப்படி இருக்கா? எத்தனை பசங்க? என்ன பண்றாங்க? உலகத்திலேயே அப்பா பிள்ளை இப்படி அந்நியர்கள் மாதிரி ஷேமலாபம் விசாரிக்கறது வேறெங்கேயும் நடந்ததா தெரியலே. நடக்கவும் போறதில்லே” என்றார் வந்தவர்.

“என் பொண்டாட்டி அகல்யா அஞ்சு வருஷம் முன்னாடி சகல சௌபாக்கியத்தோடயும் போய்ச் சேர்ந்துட்டா. செர்வைகல் கேன்சர். கர்ப்பப்பை வியாதி. அவ திவசச் சாப்பாட்டைத்தான் நீங்க மதியம் விஷ்ணு இலையிலே இருந்து சாப்பிட்டேள்” என்றார் திலீப் ராவ்ஜி சலனமில்லாமல்.

”அடடா அடடா” என்று தாங்குகோல்கள் துணை இன்றி எழுந்து திலீப் ராவ்ஜியை நோக்கி தத்தித் தத்தி வர முயற்சி செய்ய ரத்னக் கம்பளம் விரித்த சோபாக்களுக்கு இடையே இருந்த இடத்தில் விழுந்தார். கம்பளம் இருந்ததால் அடி படவில்லை என்றாலும் நிலை குலைந்து கிடந்தார் அவர். திலீப் ராவ்ஜி விரைவாக எழுந்து அவரைக் கைத்தாங்கலாகத் தன் சோபாவிலேயே அருகே அமர்த்திக் கொண்டார். அப்பா என்று தயங்கித் தயங்கி அழைத்தார். வந்தவர் அவரை இறுக அணைத்தபடி தலையில் முத்தமிட்டார். எழுபது வயது முதியவரை நூற்றுப் பத்து வயது கிட்டத்தட்ட ஆன வன்கிழவர் குழந்தை போல ஏக்கத்தோடு பெயர் விளிக்க திலீப் ராவ்ஜியும் கண் கலங்கினார்.

“நீங்க இங்கேயே இப்போதைக்கு இருந்துக்கலாம். அனந்தன் கிட்டே சொல்லிடணும். என் பிள்ளை”

“என் பேரன் என்ன பண்றான்? நீ என்ன பண்றே?” வயோதிகர் குரலில் எதிர்பாராத சந்தோஷம் ஏறி ஒலிக்கக் கேட்டார்.

”அவன் உங்களை மாதிரி இடதுசாரி. Yet a practical person. பெரிய துணிக்கடை வச்சிருக்கான். மலையாள டிவியிலும் ஒரு சேனல் இன்னும் நாலு பேரோடு சேர்ந்து நடத்தறான். என் மகள் கல்பா. உங்கம்மா, கற்பகம் பாட்டி நினைவாக கற்பகம்னு பெயர் வச்சு கல்பான்னு கூப்பிடறோம். ஸ்காட்லாந்திலே வரலாற்று பேராசிரியராக வேலையில் சேர்ந்திருக்கா”.

“நீ என்ன பண்றே? பெரியம்மாவுக்கு டைப் அடிச்சுக் கொண்டு போய்க் கொடுப்பியே? அதெல்லாம் இல்லேதானே. எல்லாரும் போயிருப்பா, என்னை மாதிரி ஆமை கணக்கா ஜீவிக்கிறேன்னு பூமிக்கு பாரமா விழுந்து கிடக்க மாட்டா. பாம்பே எலக்ட்ரிக் ரயில்லே கால் போனபோதே நான் போயிருக்கணும். பரமன் எஜ்மான் நான் இருக்கேன் உனக்கு நான் இருக்கேன் உனக்குன்னு கிறுக்கச்சி, உங்கம்மா அந்த லாவணிக்காரி போக விடமாட்டேனுட்டா. அப்ஸரா ஆளின்னு அவ ஆடினா அப்சரஸ்ஸே வந்த மாதிரி இருக்கும்.. கிறுக்குப் பிடிச்சுடுத்து பாவம்.. சாரிடா திலீப் உன்னைப் பத்தி கேட்டுட்டு நானே புலம்பிண்டு இருக்கேன்” திலீப் ராவ்ஜியின் தலையைக் குழந்தையை வருடுவது போல் தடவிக் கொடுத்தார் வந்தவர்.

மும்பை சாலில் ஆரம்பித்து சற்று முன் போய் வந்த மிளகு உற்பத்தியாளர் சங்கக் கூட்டத்தில் பங்கெடுத்து விட்டு வந்தது வரை திலீப் ராவ்ஜி அப்பாவிடம் எல்லாம் சொன்னார். அரசியல், இலக்கியம், சங்கீதம் என்று இந்த நாற்பது வருடத்தில் ஏற்பட்ட மாற்றம், புதுமை எல்லாம் நடு ராத்திரி கடந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பாவும் மகனும்.

நேரு மறைவுக்கு அப்புறம் லால்பகதூர் சாஸ்திரி அரசாங்கம், அடுத்து காங்கிரஸ் பிளந்தது, இந்திரா காந்தி பிரதமரானது, கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தாலும் வலுப்பெற்று கேரளத்திலும் வங்காளத்திலும் ஆட்சி செய்ய வந்தது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டது, சைனாவில் மாசேதுங் மறைவுக்குப் பிறகு அரசாங்க சர்வாதிகாரம் கலைந்து போய் அரசாங்க முதலாளித்துவம் ஏற்பட்டது என்று வாய் ஓயாமல் திலீப் ராவ்ஜி பேட்டை, உள்ளூர், மாநில, நாட்டு, உலக அரசியல் நிகழ்ச்சிகளை பரமனிடம் விவரித்தார். இந்திராவின் வரவு, பங்களாதேசம் பிறப்பு, இந்திரா ராஜ மானியம் ஒழித்தது, பதினான்கு வங்கிகளை முதலிலும் அடுத்து ஆறு வங்கிகளையும் தேசிய மயமாக்கியது பற்றி அடுத்து விவரித்தார் திலீப்.

தமிழிலும் மலையாளத்திலும் உரைநடை இலக்கியமும் மரபுக் கவிதை தேய்ந்து புதுக் கவிதையாக உலகம் எங்கணும். முக்கியமாக தமிழில் வானம்பாடி, கசடதபற இயக்கங்கள் தமிழ்க் கவிதைப் போக்கை மடை மாற்றியது குறித்தும் அடுத்து விவரமாக எடுத்தோதினார் திலீப் ராவ்ஜி. தமிழ்ச் சிறுகதை, நாவல், குறுநாவல் பற்றிப் பேசவும் சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த படைப்புகள் என்று பட்டியல் தயாரிக்கவும் நிராகரித்து வேறு சில பட்டியலிடவும் நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார் திலீப் ராவ்ஜி.

நடுவில் பசி எடுக்க, ரொட்டித் துண்டுகளில் ரெப்ரிட்ஜிரேட்டரில் இருந்து எடுத்த வெண்ணையைத் தடவி டோஸ்டரில் வைத்துச் சுட்டு ஆரஞ்சு மர்மலேட் பூசிய டோஸ்டும், மைக்ரோ அவனில் தயாரித்த இன்ஸ்டண்ட் காப்பியும் ராத்திரி உணவாக இருவரும் பேச்சுக்கு இடையே உண்ணவும் பருகவும் செய்தார்கள்.

மரபு இசையை காருகுறிச்சி, அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, முசிரி, எம்.எஸ், பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம், தண்டபாணி தேசிகர் போன்ற மூத்த வித்வான்கள் வளப்படுத்தி விடை பெற்றது, சஞ்சய் சுப்பிரமணியனும், டி எம் கிருஷ்ணாவும், பாம்பே ஜெயஸ்ரீயும், நித்யஸ்ரீயும், சௌம்யாவும் அருணா சாயிராமும் புத்தலையாகத் தோன்றி வந்தது, மரபு இசையையும் விளிம்புநிலை மக்களின் இசை வெளிப்பாடுகளையும் இணைக்கும் முயற்சிகள் பற்றியும் அடுத்துப் பேச்சு தடம் மாற்றி நகர்ந்தது.

தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாறுதல், புது அம்சங்கள் பற்றி, முக்கியமாக பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்களின் ஆக்கங்கள், இளையராஜாவின் இசை வரவு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரண்டு பெரும் வெண்திரை வரவுகள், ஏசுதாஸும் மலையாள திரை இசையும், மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால் என்ற தனித்துவம் கொண்ட புதிய முகங்கள், மலையாளத் திரைப்படம் மலையாள இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது, இந்தி சினிமாவில் அமிதாப் பச்சன் என்ற மனிதரின் மகத்தான வளர்ச்சி, ஷோலய் என்ற பிரம்மாண்டமான வணிகத் திரைப்படம், சத்யஜித்ரேயின் அபு முத்திரைப்படங்களாக வெளியான செலுலாய்ட் கவிதைகள் எனப் பாராட்டப்படும் வங்காளப் படங்கள் என்று சினிமா பற்றி அடுத்துப் பேசினார் திலீப்.

ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படம் பற்றிக் குறிப்பிட்டார். காந்தியாக நடித்து ஆஸ்கார் விருது வாங்கிய பென் கிங்க்ஸ்லி மகாத்மா காந்தியை விட அசலான காந்தியாகத் திரையில் வாழ்ந்து கோடிக் கணக்கானவர்களைக் கவர்ந்தது பற்றித் தெரிவித்தார்.

ராமானுஜம், பூபேன் கக்கர், கீவ் பட்டேல், சில்பி, கோபுலு, கொண்டைய ராஜு, ஜெயராஜ், மரியோ மிராண்டா, ஆர் கே லக்‌ஷ்மண், ஈ பி உன்னி இப்படி இந்திய ஓவியம் மரபுத் தொடர்ச்சியோடு மேலை நாட்டு ஓவியப் போக்குகளோடு சேர்ந்து நடப்பது குறித்துப் பேசினார்.

நாடக மேடையில் மராத்தி சகாராம் பைண்டர் போன்ற விஜய் டெண்டுல்கர் நாடகங்கள். கன்னடத்தில் கிரிஷ் கர்னாடின் ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்கள், தமிழில் கூத்துப்பட்டறை நாடகங்கள் பற்றிச் சொன்னார். மலையாள நாடகங்களில் ஒரு தேக்கம் வந்தது என்றார் திலீப்.

பரமன் பேச எதுவும் இல்லை என்பது போல திலீப் சொல்வதை எல்லாம் ஒரு சொல் சிந்தாமல் கேட்டபடி இருந்தார். அவர் இத்தனை வருட காலம் எங்கே போயிருந்தார் என்றும் எப்படி வயதாவதைக் கட்டி நிறுத்தினார் என்றும் தெரிந்து கொள்ள திலீப் ராவ்ஜிக்கு ஆசைதான். கேட்க தயக்கமாக இருந்தது. அவர் சொல்லியிருந்தாலும் அதில் எவ்வளவு நம்பியிருக்கப் போகிறார் திலீப்.

பூடகமானதைப் பூடகமாகவே இருக்க விட்டு வாழ்க்கை முன்னால் போகட்டும் என்று முடிவு எடுத்து முன்னே போக சுலபமானதாகத் தெரிந்தது.

விடியப் போகிறது என்று ஹாலில் நான்கு மணி அடித்த சுவர்க் கடியாரம் நேரம் சொல்ல அவர்கள் உறங்கப் போனார்கள். அதற்கு முன் தான் உடுத்தாமல் வைத்திருந்த இரண்டு புது வெள்ளைப் பைஜாமாக்களையும், இரண்டு முரட்டு கதர் குர்த்தாக்களையும் பரமனுக்குத் தந்தார் திலீப். சற்றே தொளதொளவென்று இருந்த அந்தத் துணிகளை உடுத்திக் கொள்ளும் முன், அந்த அதிகாலை நேரத்தில் பல் துலக்கி கீஸரின் வென்னீர் சுட வைத்துக் குளித்து வந்தார் பரமன். அவருடைய பழைய உடைகளை பிளாஸ்டிக் உறையில் வைத்து மூடி வாசலில் துப்புரவுப் பணியாளர்கள் எடுத்துப் போக வழி செய்தார் திலீப். இருவரும் உறங்கப் போக கொச்சி நகரம் இயங்க ஆரம்பித்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன