உணவுத் தட்டுகளாகக் குழிக்கப்பட்ட கல் பாளங்கள் -விஜயநகர உணவுச்சாலை

1596-ஆம் ஆண்டில் ஒரு நாள் :வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து இன்னும் சில காட்சிகள்
——————————-
இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரபுப் பொடி தேய்த்து நீராட சென்னபைரதேவிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி. தாதிகள் செலுவியும் மங்காவும் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி நானாவித புஷ்பங்களும் ரோஜா வாடையடிக்கும் மைசூர் மட்டிப்பால் ஊதுவத்திகளும், தமிழ் பேசும் கல்வராயன் மலைப் பிரதேசத்திலிருந்து வரவழைத்த கட்டி சாம்பிராணிப் புகையுமாக பூசை மண்டபம் கைலாசம் போல் மிளிர்ந்தது. வயதான புரோகிதர்கள் நாலு பேர் பூசனை மந்திரங்களைச் சொல்கிறார்கள். பெரிய பிரம்புத் தட்டுகளில் வைத்த ரோஜாப்பூ இதழ்களையும் வில்வ இலைகளையும் மகாவீரர் பிரதிமைக்கும் அடுத்து சிவபிரானுக்கும் மெல்ல பூவிதழ் தூவி அர்ச்சனை செய்தபடி இருக்கிறார் மகாராணி. மிர்ஜான் கோட்டை சமையல் அறைகளில் சுத்தமாகப் பக்குவப்படுத்தப்பட்ட பொங்கலும் பாயசமும் நைவேத்தியமாகின்றன. ருசிபார்க்கும் உத்தியோகஸ்தன் கொஞ்சம் நைவேத்தியப் பொங்கலைத் தின்று பாயசம் ஒரு மடக்கு குடித்து சரிதான் என்று வணங்கிச் சைகை தர, அரசியாரும் தொடர்ந்து தாதிகளும் நைவேத்திய பிரசாதம் உண்கிறார்கள்.

இருபத்தைந்து நாழிகை. காலை பத்து மணி. பிரதானி நஞ்சுண்டய்யா உண்டு முடித்து தாம்பூலம் தரித்து, வேஷ்டியை பஞ்சகச்சமாக அணிகிறார். மேலே முகலாய பாணி குப்பாயத்தை அணிந்து பொத்தானைத் துளையில் திணித்து நேராக வைத்தபடி குப்பாயத்துக்குள் முப்புரிநூல் தெரியாமல் இழுத்து விட்டுக் கொள்கிறார். தலையில் குல்லாய் கவிழ்த்தால் மிர்ஜான் கோட்டையில் பிரதானிகள் அரசியோடு ஆலோசனை நடத்தப் புறப்பட்டு விடலாம். நீளக் குல்லாயோடு அத்தனை பிரதானிகளும் ஒரு பார்வைக்கு கிருஷ்ண தேவராயர் போலத் தெரிகிறார்கள். இன்னொரு பார்வைக்கு கூத்தாட வந்த கோமாளிகள் போல் தோற்றம்.

அரைக் குல்லாவை எடுத்து வா என்று மலைப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதுப் பணியாளனுக்கு உத்தரவு தருகிறார். அவன் உள்ளே போய் பளபள என்று நீலப்பட்டில் நெய்த மார்க்கச்சை எடுத்து வந்து பவ்வியமாக நீட்டுகிறான். இது எதுக்கு எனக்கு? கச்சை தலைக்கு மேலே போச்சுன்னா எல்லா அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் அதுக்குத்தான். பிரதானி சொல்ல புரியாமல் மறுபடி உள்ளே போய் சிவப்பு கச்சையை எடுத்து வந்து தருகிறான். ஒரு கச்சையே கஷ்டம் ரெண்டா ஈசுவரா. பிரதானி தானே உள்ளே போய் குல்லாவைத் தேட குல்லா தொங்கும் கம்பிக் கொடிக்குக் கீழே பிரதானியின் மனைவி இட்டலி தின்று கொண்டிருக்கிறாள். எடுத்துத் தலையில் வைக்கும்போது நேற்றைக்கு எறும்போ எதுவோ உள்ளே இருந்து கஷ்டப்படுத்தினது நினைவுவர குல்லாயைத் திரும்ப எடுத்துத் தரையில் வேகமாகத் தட்ட, எறும்பையும் காணோம் ஒண்ணையும் காணோம். வேலைக்காரன் கொண்டுவந்து காலில் இட்ட வளைந்த சீன ஜோடுகள் மெத்தென்று பொருந்தியிருக்க பிரதானி மிர்ஜான் கோட்டையில் முடிவெடுத்து உலகைப் பராமரிக்கப் புறப்பட்டுப் போகிறார்.

முப்பது நாழிகை. பகல் பனிரெண்டு மணி. ஹொன்னாவர் நகர் ரதவீதியில் மிட்டாய் அங்காடியில் நெய்யும் உளுத்தம் மாவும் கலந்து பொறித்தெடுக்கும் வாசனையான புகை எழுந்து தெரு முழுக்கக் கமழ்கிறது. பெரிய குஞ்சாலாடுகள் என்ற லட்டு உருண்டைகள் எட்டு வரிசையாக அடுக்கிய தட்டைக் கவனமாகச் சுமந்தபடி கடை நுழைவுப் பகுதிக்கு வந்த பணியாள் ஒரு வினாடி அங்கே தரை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணின் விலகிய முந்தானையில் பதிய நாலைந்து லட்டுகள் சிதறிக் கீழே விழுகின்றன. அந்தப் பெண் ஆசையோடு உதிர்ந்த லட்டு எல்லாம் எடுத்துக் கொண்டு போகிறாள். பின்னாலேயே வந்த அங்காடி உரிமையாளர் ரோகிணி அந்தப் பணியாளன் மீதி லட்டுகளைக் கவனமாக கண்ணாடி அலமாரியில் வைக்கும் வரை காத்திருந்து அவனைக் கேட்கிறாள் – ராத்திரி பொண்டாட்டி எதுவும் செய்ய விடலியா? லட்டு வேண்டியிருக்கா வேலை நேரத்துலே? அவன் நெளிகிறான். சீபோ சீக்கு பிடிச்ச காண்டாமிருகமே உனக்கு வேணும்னா இன்னிக்கு ஒரு மணி நேரம் முன்னாலே போ. ரெண்டு லட்டு எடுத்துப் போ அவளுக்கு நான் கொடுத்ததா இருக்கட்டும். ரோகிணியம்மா-அவன் கை கூப்புகிறான். வேலையைப் பாருடா. ரோகிணி சொல்லியபடி உள்ளே போகும்போது வழக்கமான கடைத்தெரு வணிகர்கள் சாப்பாட்டுத் துணையாக காரச் சுண்டல் வாங்க வந்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. சுண்டல் செய்தாச்சா என்று உள்ளே பார்த்துச் சத்தம் போட, ஆச்சு. இன்னிலே இருந்து இனிப்பு வாங்கினாத்தான் சுண்டல். அவள் கண்களைச் சிமிட்டி ஜவுளிக்கடை நாராயணப்பாவுக்குச் சொல்ல அவர் சொர்க்கத்துக்குப் போன மாதிரி மெய்மறந்து சிரிக்கிறார். ஒவ்வொருத்தரும் ஆளுக்கு நாலு லட்டுகளையும் சுண்டலோடு வாங்கிக்கொண்டு போகும்போது வீட்டில் விசேஷமா என்று ரோகிணி ஒவ்வொருத்தரையும் கேட்டு, இல்லேன்னா இனிமேல் இருக்கும் என்கிறாள் லட்டைச் சுட்டிக் காட்டி. அவளை திரும்பத் திரும்ப பார்த்துப் பார்வையால் பருகியபடி கடைத்தெரு கூட்டம் திரும்பி நடக்கிறது சிரிப்பும் கும்மாளமுமாக

முப்பத்தைந்து நாழிகை. பிற்பகல் இரண்டு மணி. ஜெரஸோப்பா வண்டிச் சத்திரம். சத்திரத்தில் கருங்கல் பாளங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் நல்ல சூடான வென்னீர் அடித்து ஊற்றப் படுகிறது. பாளங்கள் அடுக்கிலிருந்து உருவப்பட்டு வடித்து சூடாக சமையல்மனையிலிருந்து வந்து சேரும் சோற்றுக் கூடைக்கு அருகே வைக்கப்படுகின்றன. பாளங்களில் சோறு வைக்கவும், வியஞ்சனமும், புளிக்குழம்பும் வைத்து உண்ணத் தரவும் குழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நிரப்பித்தர பணியாளர்கள் நிற்கிறார்கள். இயன்றவர்கள் மூன்று காசு கொடுத்தும் இல்லாதவர்கள் விலையின்றியும் பகல் உணவு உண்டு போகலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வண்டிக் கோட்டத்து வண்டிக்காரர்கள் ஆளுக்கு மூன்று காசு கொடுத்தும், இல்லாதவர்கள் இயன்றதைக் கொடுத்தும் பகல் உணவுக்கு கல்பாளங்களோடு தரையில் அமர்கிறார்கள். வயிற்றில் பசித்தீ கனன்று எரிய, சோறும் மற்றவையும் கொண்டு அது எல்லோருக்கும் மெல்ல அணைக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன