வளரும் நாவல் ‘மிளகு’ :1596 இரவு – சில காட்சிகள்
——————————————————————
நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன. அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு பார்த்து ஏற்படுத்திய சிறு கோவிலுக்கு அடுத்துப் போகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகம் வர பிரார்த்தித்து அவர்களைச் சுற்றி சிறு மணிகள் முழங்க, தூபம் கமழ தீபாராதனை காட்டப்படுகிறது.
நாற்பத்தைந்து நாழிகை. மாலை ஆறு மணி. ஜெரஸோப்பா கடைவீதியிலும், ஹொன்னாவர் ரதவீதியிலும் துணி விற்கும் கடைகளும், பாத்திரம் விற்கும் கடைகளும் வளையலும் நகப்பூச்சும் உடம்பில் அள்ளிப்பூசி மணக்க வைக்கும் வாசனைத் தைலங்களும், அத்தரும், ஜவ்வாதும் விற்கும் கடைகளும் பரபரப்பாகின்றன. கடைத்தெருவில் பொருள் வாங்க வந்தவர்கள் தெருக் கோடியில் குதிரை சாரட் வாகனங்களை நிறுத்தி தெருவோடு நடந்து கடைகடையாக நின்று போகிறார்கள்.
கோவில்களில் சங்கீத வினிகை வழங்க (கச்சேரி செய்ய) வந்திருக்கும் கலைஞர்கள் இசைக்கருவிகளை மீண்டும் மீண்டும் மீட்டி சுநாதம் தர வழிவகை செய்கிறார்கள். பாடும் இசைஞர்கள் சற்றுக் குரல் எடுத்துப் பாடி தொண்டையை சரி செய்ய சீரகமும், சுக்குப்பொடியும் இட்ட சுடுநீர் பருகுகிறார்கள்.
ஐம்பது நாழிகை. இரவு எட்டு மணி. ஹொன்னாவர் மதுசாலையில் கூட்டம் பெருகி வழிகிறது. போர்ச்சுகீசிய ராணுவ வீரர்களும், அரபியர்களும், நகர தனவந்தர் வீட்டுப் பிள்ளைகளும், கணிகையரோடு கூடும் முன் நல்ல மது ருசித்துப் போக வந்தவர்களுமாக கலகலப்பாக இருக்கும் மதுசாலை.
ஐம்பத்தைந்து நாழிகை. இரவு பத்து மணி. மதுசாலையின் மறுபக்கம் கள் விற்பனை சுறுசுறுப்பாக நடக்கிறது. மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது. புளித்த திராட்சை கொண்டு உண்டாக்கிய மதுவும் கள்ளும் பருகி லகரி தலைக்கேறியவர்கள் தரையில் உருண்டும், பாடி ஆடி விழுந்தும் அடுத்த கோப்பைக்கு அரை வராகன் காசு தனியாக மடியில் முடிந்ததை எடுத்துக் கடைக்காரர்களிடம் நீட்டுகிறார்கள். இன்னிக்கு இதுதான் கடைசி கோப்பை.
அறுபது நாழிகை. இரவு பனிரெண்டு மணி. காவல் வீரர்கள் சிலர் குதிரையேறியும், பெரும்பாலும் கையில் நாட்டுத் துப்பாக்கிகளைச் சுமந்து ஆளரவமில்லா தெருக்களில் வரிசையாக நடந்தும், கடைவீதியில் பூட்டி அடைக்கப்பட்ட கடைகளின் வாசல், பின்பகுதி, பக்கவாட்டில் அங்கும் இங்குமாகப் பிரப்பங்கழிகளால் தட்டிச் சோதித்தும், குழந்தைகள் உறங்க அடம் பிடித்தால் அஞ்ச வைக்கும் விதத்தில் ஓ என்று கூச்சலிட்டும், பாதுகைகள் ஓங்கிச் சப்திக்க நடை பயின்று போகின்றார்கள். வண்டிப் பேட்டையில் வண்டிகளிலிருந்து குதிரைகள் விடுவிக்கப்பட்டு வண்டிகள் தலை தாழ்த்தி வைக்கப்பட்டிருக்க, குதிரைகள் நின்று கொண்டே உறங்குகின்றன.