நாவல் ‘மிளகு’ சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இனி

மிளகு – கஜானன் கண்பத் மோதக் என்ற மராட்டியர் மலையாளி ஆனபோது
—————————————————————————
எர்ணாகுளம் ஜங்க்ஷன் வரும்போதே மோதக் மலையாளி ஆகிவிடுவார். பைஜாமாவையும் குர்த்தாவையும் களைந்து மடித்து வைத்துவிட்டு எட்டு முழ வேட்டியும் கருப்பு நிறத்தில் டீ ஷர்ட்டுமாக வேஷம் மாறிவிடும். மலையாளி போல நெற்றியில் சந்தனம் அணிந்து கொள்ள அவருக்கு ஆசைதான். ஆனாலும் நகரும் ரயில் கம்பார்ட்மெண்டில் சந்தனத்துக்கு எங்கே போக?

கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும்.

இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.

அம்பலப்புழைக்கு டவுண் பஸ் பிடிக்கவேண்டும். ஆட்டோ, டாக்சி எல்லாம் கூட உண்டு. தேவையில்லாத வெட்டிச் செலவு என்பார் மோதக். அவருடைய நண்பர் திலீப் ராவ்ஜி சொல்வது இது – மோதக்கே, வரப் போறேன்னு ஒரு போஸ்ட் கார்ட் போடக் கை வராதா உனக்கு? எந்த தேதி, எந்த ரயில்னு மட்டும் போட்டிருந்தா கரெக்டா ரயில்வே ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பியிருப்பேனே. அவருக்கு கார் அனுப்பும் அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை.

மோதக் எப்போது அம்பலப்புழை பயணம் புறப்பட்டாலும் இரண்டு கான்வாஸ் பையில் பாதிக்குத் துணி அடைத்து எடுத்துக் கொள்வார். அப்புறம் வாய் சிறியதாகவும், அடிப்படைப் பரப்பு அகலமும் ஆழமுமானதாகவும் இரண்டு பாத்திரங்களையும் மறக்காமல் எடுத்துக் கொள்வார்.

திலீப்-பாவுக்கு மிட்டாய் செஞ்சு தரேன் என்று மோதக்கின் மனைவி நிச்சலா மோதக் ஓவ்வொரு பயணத்தின்போதும் உரிமையோடு பர்ஃபி செய்து அந்தப் பாத்திரங்களில் ஒன்றில் பாதி வரை நிறைத்துக் கொடுப்பாள். மோதக் போய்ச் சேர்ந்ததும், ‘ஏண்டா மோதக்கே, தங்கச்சி செய்து கொடுத்த பர்பியோடு வர்றியே. அவளை ஒரு தடவை கூட்டி வரணும்னு தோணாதா உனக்கு என்று பர்ஃபி சுவையில் ஆழ்ந்து கண்மூடியபடி திலீப் ராவ்ஜி கேட்பது மோதக்குக்குப் பிடித்த ஒரு காட்சி.

அவருக்கு தன் மனைவியை வெளியே கூட்டிப் போகப் பிடிக்கும். ஆனால் நிச்சலாவுக்குத்தான் சிறு பிரச்சனை. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றாலோ நடந்தாலோ கால் துவள ஆரம்பித்து விடும். டாக்டர் பார்த்துவிட்டு இதற்கு உடம்பில் வலு இல்லாதது காரணம். வைடமின் டானிக் எடுத்துப் பாருங்கள் என்று காரணமும் தீர்வும் சொல்லி விட்டு அடுத்த பேஷண்டைக் கவனிக்க ஆரம்பித்தார். தினம்தினம் சிரமப்படுவது மோதக்கும் நிச்சலாவும் தான். மோதக் ரொம்ப யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு முக்காலியை தச்சரைக் கொண்டு செய்வித்தார். அதை முதுகில் ஆசனம் பொருந்துமாறு வார்கள் கொண்டு பிணைக்கச் சொன்னார். மூன்று கால்களும் பின்னால் நீட்டிக்கொண்டிருக்காமல் மடிந்து ஆசனத்துக்கு மேல் பிணைத்திருக்கும். கௌபாய் பசுமேய்க்கி ஹாலிவுட் இங்க்லீஷ் சினிமாக்களில் குதிரையேறி துப்பாக்கியோடு வரும் கதாநாயகன் மாதிரி பின்னால் முக்காலியோடு அவர் புறப்படும்போது நிச்சலா மோதக் கூடவே நடப்பாள். ஒவ்வொரு பத்து நிமிடமும் சட்டைப் பையில் அலாரம் அடிக்க மோதக் முக்காலியை தரைக்கு இறக்கி மனையாள் கால் வலித்ததா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு உட்காரச் செய்வார்.

ஒரு வாரம் இப்படி செயல்பட்டு பத்து நிமிட இடைவெளி அரைமணி நேர இடைவெளியானது. ஆனாலும் ஒரு பிரச்சனை. அலாரம் அடித்ததும் மனைவி உட்கார வேண்டிய இடம் நடுத்தெருவாகவோ, கழிவறை அதுவும் ஆண்கள் கழிப்பறை வாசலாகவோ இருக்கக் கூடும்.

முக்காலி இறங்காவிட்டால் நிச்சலா நிச்சயமாக பலகீனப்பட்டுப் போவாள். இதையெல்லாம் யோசித்து ஐந்து நிமிடத்துக்கு மேல் பயணம் தவிர்க்கவும், எப்போதாவது முக்காலி சேவையை அமுல் படுத்துவதை ஒத்திகை பார்க்கவுமாக மோதக் அல்லல் படுகிறார். சமையல் செய்யும்போது இன்னொரு முக்காலி ஸ்திரமாக சமையல்கட்டில் இருப்பதோடு, உட்கார்ந்து சமைக்கும் உயரத்தில் சமையலறை பளிங்குப் பாளம் அமைத்ததும் மோதக்கின் யோசனை.

சந்தேகமே இல்லாமல் இந்த முப்பது வருடத்தில் உபயோகமான புத்திசாலித்தனத்துக்கு அரசாங்க விருது ஏதாவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், தொடர்ந்து அவர் விருது பெற்றிருப்பார்.

திலீப் ராவ்ஜி நிச்சலாவை எரணாகுளத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் நவரக்கிழி, பிழிச்சல், இன்னும் விநோதப் பெயர் உள்ள ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு உட்படுத்தினால் நிற்பதென்ன, நடப்பதென்ன, ஓடவே செய்வாள் என்று உறுதி தெரிவித்தார். மோதக் நன்றி சொல்லி, அடுத்த முறை கூட்டி வரேன் அண்ணா. உங்களை அதிகம் கஷ்டப்படுத்த வேணாம்னுதான். அண்ணி இல்லாம நீங்க படற துன்பம் தெரியாமலா இருக்கேன் என்பார். திலீப் மௌனமாக நகர்ந்து விடும் பொழுது அது.

கால்வலிக் காலத்துக்கு முன் மோதக் தன் மனைவி நிச்சலாவை ஒரே ஒரு தடவை, செம்மீன் சினிமா வந்த வருஷம் அது, அம்பலப்புழை கூட்டி வந்திருந்தார். செம்மீன் சினிமா பார்க்க எல்லோரும் போனார்கள். முண்டு ப்ளவுஸில் பெண்களைப் பார்க்க எல்லோரும் போனார்கள்.

பார்த்து நிச்சலா அகல்யாவிடம் அஸ்லி ஹை க்யா ஏ தோனோ பஹுத் படா லக்தா-அசல்தானா – என்று கேட்டது அடுத்த வரிசையில் கேட்டு சிரிப்பு எழுந்தது.

இந்தியில் விசாரித்தால் யாருக்கும் புரியாது என்று நிச்சலா நினைத்திருந்தது தப்பாகப் போகுமென்று யாருக்குத் தெரியும்? திலீப்புக்கு அப்புறமாக அகல்யா சொல்லிச் சிரித்த நிகழ்ச்சி அது. அசல்தான்.

பழைய ஞாபகம் எல்லாம் ஒழுங்கு வரிசை இல்லாமல் அலையடித்து மனதில் நிரம்ப, மோதக் டவுண் பஸ்ஸுக்காக நிற்க, சொல்லி வைத்தாற்போல் ஒன்று கூட வரவில்லை. வெற்றிலை பாக்கு விற்கும் கடையில் தன் மலையாளத்தில் விசாரிக்க, அவர் ப்யூஜியாமா எரிமலை எர்ணாகுளத்தின் எல்லையில் இருப்பதாகவும், அது விழித்து நெருப்புக் குழம்பை லாவா லாவா என்று சிதறடிப்பதாகவும் கருதிக்கொண்டோ என்னமோ, பஸ்ஸு பஸ்ஸு பஸ்ஸு வராது வராது வராது என்பது மட்டும் மோதக்குக்கு புரிய கடமுடவென உருட்டினார். அப்புறம் அறுபது ரூபாய்க்கு ஒரு டாக்சி ஏற்பாடு செய்து அம்பலப்புழை கிளம்பினார் மோதக்.

பாதி தூரத்தில் டாக்சியில் மீட்டர் இருப்பதையும் அது இயங்காமல் இருப்பதையும் கவனித்த மோதக் டாக்சி ட்ரைவரோடு கருத்து வேறுபாடு காட்ட, டிரைவர் முணுமுணுத்தபடி மீட்டரை இயக்கினார்.அம்பலப்புழையில் திலீப் ராவ்ஜி வீட்டுக்குப் போகும் பாதையில் டாக்சி மீட்டரைப் பார்த்த மோதக் அது காட்டிய கட்டணத்தைப் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறைதான்.

மோதக்கின் கான்வாஸ் பைகளைக் கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு திலீப் லிப்ஃட்டை நோக்கி நடக்க, அண்ணா அண்ணா என்று சுமையை வாங்க பின்னாலேயே மோதக் ஓடினார். லிஃப்ட் நிற்க திலீப் ராவ்ஜியின் இரண்டாம் மாடி ஃப்ளாட்.

எடோ மோதக்கே, கான்வாஸ் பேக்கில் கட்டெறும்பு வாடை அடிக்கறதே, என்ன கொண்டு வந்தே என்று திலீப் கேட்க, மோதக் அவசரமாக கான்வாஸ் பையை வாங்கித் திறந்து கவிழ்த்தார். ஹால் முழுக்கக் கட்டெறும்பு ஊர்ந்தது. நிச்சலா உட்கார்ந்தபடிக்கே செய்து கொடுத்திருந்த தேங்காய் பர்ஃபி கரைந்திருக்க மிச்சம் இருந்த துண்டு துணுக்குகளையும் பம்பாயிலிருந்து முப்பத்தாறு மணி நேரம் ரயிலேறி வந்த எறும்புகள் தொடர்ந்து உண்டபடி இருந்தன.

மோதக்கே பையில் வேறே என்ன இருக்கு? திலீப் ராவ்ஜி கேட்டார். இன்னொரு பாத்திரம் அண்ணா. அதுக்குள்ளே ஒண்ணுக்குள்ளே ஒண்ணா ரெண்டு பாத்திரம். ரெண்டு ஸ்பூன். ஒரு தட்டு. ஒரு சின்ன கிண்டி. அவர் அடுக்கிக்கொண்டே போக திலீப் ராவ்ஜி சின்னக் கிண்டியை எடுத்து வைத்துக்கொண்டு இது இங்கே என்ன செய்கிறது என்கிறதுபோல் குழம்பினார்.

இது காணிக்கை விட்டுட்டு வரச் சொன்னா நிச்சலா. மெதுவாகச் சொன்னார் மோதக். ஒரு நிமிடம் கனத்த மௌனம். இந்த வயதில் மோதக்குக்கும் நிச்சலாவுக்கும் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்?
திலீப் ராவ்ஜி நினைப்பதற்கு முன் மோதக்கே சொல்லி விட்டார். அண்ணா நீங்க போன தடவை வந்தபோது சொன்னீங்களே, கிருஷ்ணன் விளையாடற வீட்டில் வேறே குழந்தைகள் எதுக்கு? இது அந்தக் குழந்தைக்கு ப்ரசெண்ட் பண்றா என் பொண்டாட்டி.

திலீப் ராவ்ஜிக்கும் கண் கலங்கியது.

படம் : அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவில்
நன்றி விக்கிமீடியா காமன்ஸ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன