கொய்யாப்பழம் என்ற போர்த்துகீஸ் காணிக்கையோடு: நாவல் மிளகு

நாவல் மிளகு சொல்வனம் இணைய இலக்கிய இதழில் தொடராகப் பதிப்புக் காண்கிறது. நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு துண்டு –
————————————————————————-

”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். ஆனால் எந்தச் செலவும் குறையேதும் வராதபடி திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”.

”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி, பேகம் சாய்பா ஒரேயடியாக சிரசைக் குளிர வைக்கிறீர்களே? திரும்ப ஜலதோஷம் பிடித்தால் எங்கள் வைத்தியனைத்தான் கூப்பிட வேண்டும். கசப்பு கஷாயம் திப்பிலி, சுக்கு, பனஞ்சீனி என்று தட்டிப்போட்டு காய்ச்சிக் கொடுப்பதை பிடிக்கவில்லை என்று தள்ளவும் முடியாது, பிடிக்கிறதென்று ஒரு குவளைக்கு மேல் அந்தக் கருப்பு திரவத்தைப் பருகவும் முடியாது. வைத்தியன் பயணக் கோஷ்டியில் இருக்கலாமா? அத்தியாவசியமான ஒருவர்”

சென்னபைரதேவி மகாராணி கேட்டபடி பெத்ரோவைப் பார்த்தாள். அவர் ஒரு வினாடி யோசித்தார்.

“அத்தியாவசியமாக யாரெல்லாம் வரக்கூடும் என்பதை ஊகித்துப் பார்க்கலாமே. நான் குத்துமதிப்பாகப் பார்த்தால் இளையவர் நேமிநாதன், அவர் மனைவியவர்கள், வைத்தியர்”.

பெத்ரோ அடுக்கிக் கொண்டு போக போதும் என்று கைகாட்டினாள் சென்னா.

”இந்தப் பட்டியலை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இல்லை”.

ஒருவினாடி சாந்தமான அந்த முகத்தில் சினம் தெரிய, பெத்ரோ பதறிப் போனார். ஏதோ செய்ய உட்கார்ந்து வேறெதோ வந்து முடிகிற மாதிரி ஆகி விடப் போகிறதே என்ற படபடப்பு அது.

”யார் மகாராணி கூட வந்தாலும் சந்தோஷமே. யாரும் வராவிட்டால்? அதுவும் மகிழ்ச்சிக்குரியதே. முன்கூட்டி அறிந்தால் பயணத்துக்கான திட்டமிடுதல் சிறப்பாக இருக்கக் கூடும். அந்த ஆர்வம் மிகுந்து வர என்னவோ உளறி விட்டேன். மறுபடி மன்னிக்கக் கோருகிறேன். மன்னிக்கக் கோருகிறேன். புத்தி பேதலித்துப் போகிறது. என் பகல் உணவில் மிளகு சேர்க்கவில்லை. அதுதான் காரணம்”

அவர் சொல்ல, சென்னா நகைத்தாள். “நீர் மகா புத்திசாலி” என்று பெத்ரோவிடம் கண்கள் குறுகுறுத்துச் சொல்ல பெத்ரோ முகம் மலர்ந்தது. மிளகு ராணிக்காக எதுவும் செய்வார் அவர் என்ற உறுதி தெரிந்த முகம் அது.

அவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நேரம் போல மண்டியிட்டு வணங்கி எழ, சென்னா மனசு கேட்கவில்லை.

“திரு பெத்ரோ, மன்னிக்கவும், என் சொற்கள் உங்களைக் காயப்படுத்தினால் வருந்துகிறேன். போர்த்துகீசு நாடும் அந்தப் பெரு நாட்டின் அரசருடைய பிரதிநிதியான தாங்களும் எப்போதும் எங்கள் மதிப்புக்குரியவர்கள். பயணத் திட்டத்தை விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன். தயவு செய்து அதை யாருக்கும் வெளியிட வேண்டாம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”.

”நிச்சயமாக மகாராணி”

விடை பெற்று எழுந்திருக்கப் போனாள் சென்னபைரதேவி. பெத்ரோ தன் அருகில் வைத்திருந்த துணிப் பொதியை எடுத்து திறந்து அதன் உள்ளிருந்து எடுத்தது ஒரு பழம். பழ வாசனை மண்டபம் முழுக்க அடித்தது.

”மகாராணி உங்களுக்கு விருப்பமானது என்பது தெரியும். கொய்யாப் பழம். மிக இனிப்பும் வாசனையுமாக என் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது. உங்களிடம் சொல்லி விட்டு அரண்மனை குசினியில் கொடுத்து விட்டுப் போகிறேன். உண்டு பார்த்து எப்படி என்று சொல்லத் திருவுள்ளம் நாடினேன்”.

”அடடா, வைத்தியனை அருகில் நெருங்க விடாமல் விரட்டலாம் என்று பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே. இந்த அற்புதமான கனிகளை எப்போது உண்டாலும் வைத்தியனிடம் வயிற்று வலிக்காக மருந்து வாங்க வேண்டி வருகிறதே. நீங்களும் ஒன்று மட்டும் இனி கொடுங்கள் போதும்”.

சென்னா போலியான சிடுசிடுப்போடு சொல்ல, ”என்னது மகாராணிக்கு ஒரே ஒரு கனி கொடுத்து அவமானப் படுத்தவா? நிச்சயம் மாட்டேன் அம்மா” என்று தலை வணங்கி நிமிர்ந்து குறும்புச் சிரிப்போடு சொன்னார் பெத்ரோ.

அரசிக்கு முதுகு காட்டாது வெளியே போனார் அவர். அடுத்த மழை ஆரம்பித்திருந்தது.

படம் நன்றி en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன