சொல்வனம் இணைய இலக்கிய இதழில் தொடராகப் பிரசுரமாகிறது என் புது நாவல் ‘மிளகு’. புதினத்தின் சிறு பகுதி இது –
————————————-
சதுர்முக வஸதி. சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கு அல்லது கன்னட மொழியிலும் அந்தக் கட்டிடத்தின் மேல் நான்கு திசையும் பொறித்திருந்ததைக் கண்டார் பரமேஸ்வரன்.
சதுர்முகம் என்றால் நான்கு முகம் கொண்டது. பிரம்மா போலவா? இல்லை, நான்கு கதவுகளும் வழிகளும் இருப்பதால் சதுர்முகம் போல. வஸதி என்றால்?
வசதியான வசிப்பிடம் என்பது போலவா? மனம் மறுத்தது. புத்தியும் சேர்ந்து மறுத்தது. வஸதி என்றால் கோவிலாக இருக்கக் கூடும். ஹிந்து கோவில் இல்லை. சமணக் கோவில்.
கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது.
இந்தக் காட்டில் கட்டிடம் கட்டிப் புழங்க விடுகிறவர்களுக்குக்கூட நவீனமும் புராதனமும் கலந்த கட்டிடக் கலையிலும், நடு அச்சில் சுழலும் மண்டபங்களிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாகத் தோன்றியது.
கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, தாங்கு கட்டைகளைக் கையிடுக்கில் உறுதியாக ஊன்றி நின்று கதவு அடுத்துத் தான் இருக்கும் இடத்தைக் கடக்கக் காத்திருந்தார் பரமன்.
வாழ்க்கையே இப்படி விளையாட்டும் விநோதமுமாக ஆகியிருந்தால் எல்லாவற்றையும் மறந்து விட்டு சுழலும் கட்டிடத்தோடு ஓடிக் கொண்டிருக்க ஆசை. தாங்கு கட்டைகள்?
அடுத்த கதவு பக்கத்தில் வர, திறந்து உள்ளே நடக்க, ஒரு வினாடியில் தலை குப்புற விழுந்தார் பரமன். எழுந்த போது கட்டைகளைக் காணோம். மண்டபத்தையும் காணோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை அப்பியிருந்த நிலம் கண்ணைக் கொள்ளை கொண்டது.
பரமன் கவனித்தார். தாங்குகட்டைகள் இல்லாமல் அவர் கால்கள் சுபாவமாக இருப்பதுபோல் முழுமையாக இருந்தன. தோளில் மாட்டிய பை அப்படியே தான் இருந்தது. எங்கே வந்திருக்கிறார் அவர்? தில்லி பம்பாய் விமானம் எங்கே போனது?
ஹோ என்று சத்தமிட்டார் பரமன். யாரும் ஏற்று வாங்கிப் பதில் சொல்லவில்லை. தலைக்கு மேல் சத்தம். தலை தூக்கிப் பார்த்தார். பெரிய கழுகு ஒன்று தோளில் அவர் மாட்டியிருக்கும் பையைக் குறிபார்த்துச் சுற்றிச் சுற்றி வந்து நேரே இறங்குகிறதுபோல் பாவனை செய்தது.
அந்தப் பையில் அதற்கான பொருள் என்று என்ன இருக்கிறது? கருப்பு கலரில் ஒரு பேண்ட், இரண்டு அரைக்கை சட்டைகள், கடலை உருண்டை பாக்கெட் ஒன்று, பர்ஸில் நூற்று இருபத்தைந்து ரூபாய் பணம், விக்ஸ் இன்ஹேலர், ஃப்ளைட்டில் கொடுத்த நான்கு ஸ்லைஸ் ரொட்டி, ஜாம் சின்ன ஜாடியில் அவ்வளவுதான் நினைவு வருகிறது.
கடலை உருண்டையோ ரொட்டியோ கழுகு சாப்பிடுகிற உணவு இல்லை. பேண்ட் சட்டை அதற்கெதுக்கு? வாச்சி வாச்சியாகப் பல் இருக்கற பெரிய சைஸ் சீப்பு ஒன்று மாடுங்காவில் ஸ்டேஷன் பக்கத்தில் வாங்கியது கூட உள்ளே வைத்திருக்கும் நினைவு.
0 comments