எழுதப்பட்டு வரும் ’மிளகு’ நாவலில் இருந்து
———————————————–
வண்டிக்காரன் சத்திரம் நிரம்பி வழிகிறது. வெளியூர் வண்டிக்காரர்களும் வந்து தங்கிப் போகிற நாள் இது.
ஜெரஸோப்பா மஹாபலேஷ்வர் சிவன் கோவிலில் சிவராத்திரி கொண்டாட்டம். கோவிலுக்கு பூஜாதிரவியங்களோடு, ராத்திரி ஆனாலும் குளித்து மடி வஸ்திரம் அணிந்து உற்சாகமாக போகிறவர்களின் பெருங்கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துத்தான் கொண்டிருக்கிறது.
ஹரஹர மகாதேவ என்று எங்கும் குரல்கள் பக்தி பூர்வம் ஓங்கி எதிரொலிக்கின்றன.
வரிசையான சிறு ஜன்னல்களாக வடிவமைத்த கோவில் சுவர்களில் தீபங்கள் திரியிட்டுப் பிரகாசமாக ஒளி விடுகின்றன. காலணிகளைக் கோவில் வாசலில் விட்டு நடப்பவர்கள் ஒரு வினாடி ஏக்கப் பார்வையில் அந்தக் காலணிகளைப் பிரிகின்றார்கள். அப்போது, ’திரும்ப வந்து எடுத்துக் கொள்கிறேன்’ என்று தேங்காயும், வாழைப் பழமும், வெற்றிலை, பாக்கும் பிரம்புத்தட்டில் வைத்து விற்கும் கடைக்காரர்களிடம் போகிற போக்கில் சம்பிரதாயத்துக்காகச் சொல்லிப் போகிறார்கள்.
யாரும் திருட மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை. அதுவும் சிவராத்திரி காலத்தில்.
கோவில் வாசலில் தீவட்டிகள் தூண்களில் உயர்த்தி வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருப்பதால் பொன் அந்தி மாலை போல் நடு இரவு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
கூட்டமாக ரகசியம் பேசுவது போல் எல்லா தீவட்டிகளும், திரி நனைய உஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டு எரிகின்றன. கொளுத்தி வைத்து வார்த்த இலுப்பை எண்ணெயின் வாடை, கோவில் வாடையாக மறு உருவெடுத்துக் காற்றில் தங்கி நிற்கிறது.
அதையும் கடந்து, கஞ்சா இலைகளிலிருந்து வடித்த மெல்லிய போதையூட்டும் பாங்க் மதுவின் வாடை எங்கும் பரவியிருக்கிறது. பரபரப்பாக பாங்க் விற்கும் மதுசாலையில் வழக்கமான குடிகாரர்களை விட நின்றபடிக்கே சிவராத்திரிக்காகக் குடிக்கிற கிருஹஸ்தர்களும், பிடவைத் தலைப்பு கொண்டு சிரம் மறைத்த குல மாதர்களும் அதிகம் தட்டுப்படுகிறார்கள்.
கையில் கொண்டு வந்த கூஜாக்களில் பாங்க் வாங்கிய குடும்பத்தினர் கோவில் வாசலில் அதை மஹாபலேஷ்வருக்குப் படைத்து உடனே சிறு குவளைகளில் ஊற்றி அருந்துகின்றனர்.
சிறு குழந்தைகளுக்கும் ஒரு மிடறு பாங்க் புகட்டப்படுகிறது.
“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.
கோவில் வாசலுக்கு அருகே பஞ்ச வண்ணமும் அடர்த்தியாகப் பூசிய பெரிய சக்கரம் விசைகளால் செங்குத்தாக நிறுத்தப்பட்டுச் சுழல்கிறது. குழந்தைகளும் பெரியவர்களும் ராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றிவர, இரண்டு மல்லர்கள், சுழலும் இருக்கைகளை வேகம் கொள்ள கையால் பிடித்து தள்ளி விடுகிறார்கள்.
ராட்டினம் சட்டென்று கரகரவென்று ஒலி எழுப்பி நிற்க இரண்டு பெரியவர்கள் ஆசனங்களில் இருந்து எக்கி விழப் போகிறார்கள். மல்லர்கள் லாகவமாக அவர்களைத் தாங்கி தரையில் நிறுத்துகிறார்கள்
“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.
படம் நன்றி en.wikipedia.org