வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து: ஹொன்னாவர் நகர் ரதவீதியில் ஒரு மாலை நேரம்

ஹொன்னாவர் நகரத்தின் பிரதானமான ரதவீதியில் கொடிக்கம்ப மேடைக்கு அடுத்து உயர்ந்து நிற்பது போர்த்துகீசு அரசப் பிரதிநிதி திருவாளார் இம்மானுவல் பெத்ரோவின் மாளிகை.

அதற்குக் கிழக்கே இரண்டு சிறு தோட்டங்கள் கடந்து வீரப்பா ஷெட்டியாரின் மூன்றடுக்கு மாளிகை. அவர் மொத்தமாகக் கொள்முதல் செய்து அரிசி இதர தானியங்கள் விற்பனை செய்கிறவர்.

மேற்கிலோ சமண சத்சங்கம் என்ற சகலரும் வந்திருந்து இறைவன் புகழும் தீர்த்தங்கரர்களின் உன்னதமும் பாடிப் பரவி நற்கதி தேடும் புனிதமான கூடம். வீரப்பா ஷெட்டியாரின் மாளிகைக்கும் கிழக்கே புதிதாகத் தொடங்கியுள்ள மிட்டாய் அங்காடி. ரோகிணி ஜெர்ஸோப்பாவில் நடத்தும் பிரபலமான மிட்டாய் அங்காடி ஹொன்னாவரில் கிளை பரப்பிய இடம் என்று தினசரி வாங்கிப் போகிறவர்கள் சொல்கிறார்கள்.

இனிப்பு வகைகள் ஜெர்ஸோப்பாவில் இருந்து தினம் நீளமான வேகன் வண்டிகளில் கொண்டு வரப்பட்டு சிறப்பு அடுப்புகளில் சற்று சூடாக்கப்பட்டு புத்தம்புதிதாக விற்கப்படுவதை அங்கே வாங்கிப் போகிறவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

மிட்டாய் அங்காடிக்கு இன்னும் கிழக்கே அடுத்த கட்டிடம் அரசப் பிரதானி நஞ்சுண்டய்யாவின் இரண்டு அடுக்கு மாளிகை. எப்போதும் யாராவது சிவபெருமானின் பெருமைகளை கைத்தாளம் வாசித்துப் பாடிக் கொண்டே இருக்கும் அந்த இல்லத்தில் அதிகாலை, பகல், மாலை நேரங்களில் யாசகர்களுக்கு அவர்கள் குரல் விட்டு யாசிக்காமலேயே சோறும் குழம்பும் கறி அல்லது அப்பளமும் தானம் செய்யப்படுவதால் அந்த வீட்டுக்கு வெளியிலும் மாலை மறையும் வரை கூட்டம் நிறைந்திருப்பதைக் காணலாம். அப்புறம் உண்ணக்கூடாது. உணவைத் தானம் செய்யவும் கூடாது.

மேற்கில் சமணப் பள்ளிக்கு அடுத்து பழைய சிதிலமான சமணவசதிக் கட்டிடங்கள் இரண்டு நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அதற்கும் மேற்கில் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பும், நடுவில் பெரிய துரவுக் கிணறும், தொடர்ந்து வேப்ப மரங்களும், மலை வேம்பு, அசோகம், வாதுமை, ஒதியன் ஆகியவை செழித்து வளர்ந்த தோட்டமும் தெருக்கோடி வரை நீளுகின்றன.

மாலை நேரத்தில் ரதவீதி முழுக்க தண்ணீரை வெட்டிவேர் ஊற வைத்துச் சேர்த்து தூசி அடங்க பணியாளர்கள் விசிறி அடித்துப் போய்க் கொண்டிருந்த போது நேமிநாதனின் இரட்டைக் குதிரை வண்டி ரதவீதியில் நுழைந்தது.

சிதிலமான சமணக் கட்டிடத்தின் முன் நின்ற சாரட்டிலிருந்து யாரும் இறங்கவில்லை. அடுத்த கட்டிடமான சமண சத்சங்கம் வாசலில் நின்ற நாலைந்து பேர் இளவரசர்,இளவரசர் என்று பரபரப்பாகச் சத்தம்போட்டபடி தெருவில் போகிறவர்களின் கவனத்தை ஈர்க்க முனைந்தது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

அந்த வீதியில் அழகான பெண்கள் நடந்து போனால் மட்டுமே தலைகள் உயரும். பேரழகியர் பல்லக்கில் போனால் ஒரு நிமிடம் செயல் மறந்து மெய் மறந்து எல்லோரும் பார்ப்பார்கள். அதி சிறப்பான தெய்வீக ஆரணங்குகள் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சூரிய பகவான் போல் கிழக்கிலிருந்து மேற்கே போனால் சாரட்டுக்குப் பின்னே சகல வயதினரும் உன்மத்தம் கொண்டு ஊர்ந்திருக்கலாம்.

ஹொன்னாவர் தெரு – படம் நன்றி en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன