புதிய நாவல் ‘மிளகு’ – மழை கொண்டு வா விதை கொண்டு போ

வேகமாக வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு கீற்று

விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான். ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது –

“கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”.

சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட, தெம்போடு தொடங்கினான் கோமாளி.

“சபை நாகரிகம் என்றால் மலையாள பிரதேசத்து சாக்கியார் கூத்து நினைவு வருது. மேடை ஏறி நகைச்சுவையோடு மகாபாரதக் கதை சொல்லிட்டிருக்கார் மாதவ சாக்கியார். திருவனந்தபுரம் மகாராஜா பாதிக் கதையிலே அவைக்குள்ளே வரார். சாக்கியார் கதையில் ஒரு காட்டுப் போத்து, என்றால் காட்டெருமை தெருவிலே வந்துட்டிருக்கு. சாக்கியார் சொன்னாராம் –காட்டுப் போத்து தடதடன்னு ஓடிவந்தா எப்படி இருக்கும் தெரியுமா? சாட்சாத் நம்ம ராஜா பாதிக்கதையிலே உள்ளே வந்தாரே அப்படித்தான்.

”ஆக, மகாராஜாவை பகடி செய்யக்கூட பயமில்லையாம் கேளுங்க

”நாம் அவ்வளவு உரிமை எடுத்து எல்லோரையும் கேலி பண்ண மாட்டோம். இது யார் மனதையும் புண்படுத்த இல்லை. எல்லா நடப்பிலும் நகைச்சுவையைக் கண்டு அதை எந்தச் சார்பும் இல்லாமல் கொண்டாடுவோம் வாருங்கள்”.

நான்கு கோமாளிகள், அதில் ஒருவன் பெண்ணாக வேடமிட்டவன். ஆட்டம் நிகழிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முதல் கோமாளி பாடினான் –

போர்த்துகீசியர்களால் பாதிக்கப்பட்ட ஊர் வணிகப் பிரமுகர்களில் சிலர் சிரிக்க, மற்றவர்கள் சற்றுத் தாமதித்து வாங்கிச் சிரித்தார்கள்.

”மிளகு மகாராணி தேசத்திலே இருந்து மிளகு வாங்கி வாங்கி கஜானா காலி ஆகி இவங்க ஒரு வழி கண்டுபிடிச்சாங்க”.

”என்ன ஓய் ஓய் என்ன அது சொல்லும்”

”இந்த நாட்டு மிளகு விவசாயி என்ன பண்றான்னு பின்னாலே போய் பார்த்தாங்க”.

”பார்த்தா”?

”அவன் விதை மிளகை பசுஞ்சாணத்துலே வச்சு உலர்த்தறானா”?

”பின்னே இல்லையா? அது விதைமிளகுப் பெட்டகம் ஆச்சே. சாணகத்துக்கு உள்ளே பத்திரமாக இருந்து, சரியான நேரத்திலே முளைவிட்டுடும்”.

”அதேதான். நாட்டுக்குள்ளே போகிற நிலப்பரப்பில் எல்லாம் அந்த விதைமிளகுப் பெட்டகங்களை விட்டெறிஞ்சு தூவினா என்ன ஆகுது”?

”விழுந்த இடத்திலே மிளகுக்கொடி வந்து மரம் தேடி சாய்ந்திருக்கு”

”அப்புறம்?”

”அப்புறம் கொப்புறம். கதையா சொல்றேன்?”.

“முளை விட்ட மிளகுக் கொடியை ஒரு நிலத்திலிருந்து அப்படியே இன்னொரு மண்ணுலே எடுத்து நட்டும் பயிர் பண்ணுவாங்க தானே”

“ஆமான்னேன். புதுசா ஒரு கொடி வந்தா நூறு அடுத்து வரும். அப்புறம்”.

”அப்புறம் அதிகம் மிளகு விளையுதே” என்று பெண் வேடமிட்ட கோமாளி நாணிக் கோணிச் சொல்கிறான்.

”அதேதாண்டி என் அழகுப் பொண்ணே, என்னைக் கட்டிக்கயேன்”.

”எனக்கு ஸ்பெயின்கார மாப்பிள்ளை கிடைக்கப் போகுதே”.

”போர்ச்சுகல் மாப்பிள்ளை வேணாமா”?

”அவங்க எல்லாம் மாட்டுச் சாணத்தைத் தேடி அலைந்துகிட்டிருக்காங்க. கொங்கணி விவசாயி சாணியிலே விதைப் பெட்டகம் செஞ்சு அதிகம் மிளகு விளைவிக்கறதை தப்பா புரிஞ்சுகிட்டு வெறும் சாணி உருண்டை பிடிச்சுக்கிட்டு அலையறாங்க போர்ச்சுகீசுக்காரங்க எல்லாம்”.

”சாணியிலேயா சூட்சுமம்”?

சாணியிலேயா மிளகு விளையுது?

”அய்யே சாணிப் பசங்க”

”நாளைக்கே சாணிக்குள்ளே விதை மிளகு வைக்கணும்னு புரிஞ்சுக்கிட்டாலும் வேறே ஒண்ணு இருக்கு அவங்களுக்குப் புரிய வைக்க”.

”என்ன அது என்ன அது?”

பெண் வேடமிட்ட கோமாளியை முத்தமிட மற்றவரில் ஒருவன் துரத்தத் தப்பி ஓடியபடி பாடுகிறான் அந்தப் பெண் கோமாளி.

”நம்ம பூமி
மிளகு சாகுபடி
ஒரு வாழ்க்கை.
ஓர் ஈடுபாடு.
ஒரு மூச்சுக் காற்று.”

தொடர்ந்து பேசுகிறான் – “தெற்கே கோழிக்கோட்டிலிருந்து இங்கே ஹொன்னாவர், ஜெருஸோப்பா, பட்கல் வரை அழகழகான மலையாளப் பெண்ணுங்களும், கன்னடக் கிளிகளும், கொங்கணி தேவதைகளும் பார்த்து வளர்த்து பார்த்து பறிச்சு பார்த்து பதனிட்டு பார்த்து விற்க அனுப்பற செல்வம்”

”ஆகா அந்தப் பெண்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்”

”அப்புறமும் நன்றி சொல்ல இன்னொருத்தி இருக்காளே”

”யார் அது? மிளகு ராணிகிட்டே கேட்கலாமா? ஒருக்கால் அவங்க தானா?”

”அவங்க மாதிரி வாரி வழங்கறவங்க. யார் தெரியுமா?”

”யார் அது சொல்லேன்”

”மழையம்மா”

”மிளகு பூவந்ததும் மழையம்மா சரியான தினத்துலே வந்து அதைத் தொட்டுத் தழுவி வடிஞ்சு போகிறா. அடுத்த ரெண்டு வாரம் மழையம்மா நாள் பூரா மிளகுக் கொடியை இதமா நனைத்து விலகிப் போறா”.

”சாணியை போர்ச்சுகல் எடுத்துப் போகலாம். விதை மிளகை எடுத்துப் போகலாம். இந்த இதமான மழையை எப்படி எடுத்துப் போவாங்க?”

”மிளகுராணி தேச மிளகு வேறெங்கும் விளையாது. வேறெங்கும் செழிக்காது. விதை மட்டும் போதாது. மழையும் பெய்து பெய்து நின்று பெய்து மலைநாட்டு மண்ணில் வடியணும். புரிஞ்சுதா என் சிங்காரிப் பெண்ணே”.

”பிரிஞ்சுது பிரிஞ்சுது என்னை கட்டிக்கறியாடா”? பெண் வேடக் கோமாளி சொல்கிறான்.

”கட்டிக்கலாம் தான். அப்போ என் அழகுப் பொண்டாட்டி என்னடி பண்ணுவா?”

”அவ வேணும்னா என் புருஷனை கட்டிக்கட்டும்”.

ஓவென்று உயர்ந்த குரலில் பாடி, தாளம் தட்டி கோமாளிகள் சுற்றி வந்து கரணம் போட்டு எழுந்து நிற்கிறார்கள். பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப் படுத்துகிறார்கள்.

படம் : மிளகுக் கொடி
pic ack amazon.in

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன