“மிளகு சாகுபடி செய்யறதுக்குப் பதிலா பத்து நெருப்புக்கோழி வாங்கி மேய்க்கலாம். கூட்டிக் கழிச்சு பார்த்தால், கையில் தங்கறது ஒத்தை ரூபா”
உன்னித்தன் கொஞ்சம் அதிகமாகவே பிரச்சனையை ஊதிப் பெருக்கித் தொடங்கி வைத்தார். பின்னே என்ன, மிளகு ராணி இருந்த உத்தர கன்னடத்திலே பத்து டன் மிளகு விளைஞ்சா அபூர்வம். பூச்சி அரிச்சு அதிலே பெரும்பாலும் பங்கு உதிர்ந்து போகுது. நம்ம கேரள பெப்பர், தலைச்சேரி வகையும் மலபார் வகையும் முக்கியமா நல்லா போகணும்னு போன வருஷம் நினைச்சது என்ன ஆச்சு? எல்லா கொடியும் ஆறு வருஷம் பூத்து காய்ச்சு கனியாகி ஆயிரம் டன் விளைச்சல் எதிர்பார்த்தால், மழை இல்லாமல் போய் அதுலே பாதி கூட வரல்லே என்றார் பீமாராவ்.
தட்சிணா சார் மேடையேறினார்.
நூறு ஏக்கர் மிளகும் ஏலமும் கிராம்பும் ஒரே நிலத்திலே சாகுபடி செய்யற பெரிய விவசாயப் பிரமுகர்.
“மிளகுக் கொடி எல்லாம் வயசாகி நிக்குது கோழிக்கோடு தொடங்கி மலபார் வரை பதிமூன்று வயசான கொடி அவை எல்லாம். பூக்க தயாராக ஆறு வருஷம், பூத்தது அடுத்த ஆறு வருஷம்னு பந்த்ரெண்டு வருஷம் போயாச்சு. இன்னும் ஒரு வருஷம் மிளகு சாகுபடி ஆகும். அப்புறம் புதுக்கொடிகளை பதியன் பண்ணி வச்சிருக்காங்களான்னு கேட்டால், கார்பரேட் தோட்டங்கள்ளே மட்டும் செஞ்சிருக்காங்க அதுவும் ரொம்ப பந்தோபஸ்தோடு கூட. இனி குறைஞ்சது அடுத்த ஏழு வருஷம் மிளகு வித்துக் காசு பார்க்கறதை மறந்துடலாம்”.
வேட்டியை கிட்டத்தட்ட அவிழ்த்துக் கட்டியபடியே தட்சிணா மேடையை விட்டு இறங்கினார்.
”மிளகுலே காசு இல்லேன்னு நீங்க சொல்றது முழுக்க உண்மைன்னே வச்சுக்கலாம். அடுத்த ஆறு வருஷம் கொடியே இல்லாம போக விட்டுடுவாங்களா? இது நம்ம கையாலே நம்ம கண்ணைக் குத்திக்கறது மாதிரி இல்லையா?”
பீமாராவ் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
திலீப் ராவ்ஜி பேச வேண்டிய முறை வந்தபோது
சொல்ல ஆரம்பித்தார்.
”இப்போ மிளகு வர்த்தகத்திலே இந்தியா முதல்லே இல்லே. கிட்டத்தட்ட ஆறு வருஷமா இந்தோனேஷியா தான் அந்த இடத்தைப் பிடிச்சிருக்கு. இத்தனைக்கும் அவங்க விளைவிக்கிற மிளகு நம்மோடதை விட தரம் கம்மியானது தான். ஆனா கவர்ச்சிகரமான சந்தைப் படுத்தறதாலே அவங்க நமக்கு ரொம்ப முன்னாடி இருக்காங்க. அதுவும் டாலர் மதிப்பு ஏறப்போறதைக் கணக்கு போட்டு டாலர் வாங்கி மிளகு கொடுத்தாங்க. நல்ல லாபம். கூடவே, மிளகு வாங்கினா, பாதி விலைக்கு ஏலக்காய்னு சலுகை விலை, மிளகு தொடர்ந்து வருஷம் பூரா கிடைக்க ஏற்பாடு இப்படி முன்னாலே இருக்காங்க. சீனாவிலே குளிர்காலம் இந்த வருஷம் சீக்கிரம் வந்ததாலே அங்கே செலவு பண்ண இருநூறு டன் மிளகு உடனே தேவைப்பட்டது. இந்தியா கிட்டே தான் முதல்லே வாங்கறதுக்கு வந்தாங்க. இல்லைன்னு நாம கையை விரிக்க, அழகாக மிளகு அதிக விளைச்சல் கண்டு பத்திரமாக சேமித்து வைத்திருந்த இந்தோனேஷியா உடனே டெலிவரி கொடுத்து பணத்தை அள்ளினது. ஐநூறு கோடி ரூபா அதுவும் அமெரிக்க டாலர் வாங்கி மிளகு கொடுத்த சாமர்த்தியம். எங்கேயோ இருக்காங்க அவங்க. நாம் இன்னும் அரசாங்க கிராண்ட் எதிர்பார்த்துக்கிட்டு எதுவும் பெரிசா செய்யறது இல்லேன்னு படுறது. தப்பா சொல்றேன்னா மன்னிக்கவும்”.
ஒன்றிரண்டு பேர் இதுக்குக் கைதட்டக்கூட செய்தார்கள்.
“மெய்டன் ஸ்பீச் திலீப் ராவ்ஜி சாரோடது. எல்லாவரும் கையடிக்கணும்” என்று கூட்டத் தலைவர் சொல்லும்போது திலீப் ராவுக்கு சிரிப்பு அடக்க முடியாமல் போகத் தலையைக் குனிந்து கொண்டார். என்ன ஆச்சு என்று பக்கத்தில் இருந்த உன்னித்தன் கேட்க, திலீப் சுருக்கமாக “தமிழ்-மலையாளம்” என்றார்.
படம் மிளகு சாகுபாடி
நன்றி wikifamer.com