நாழிகைக் கணக்கும் நெல்பரலியும் – எழுதப்பட்டு வரும் மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவல் – நாழிகைக் கணக்கு

(ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை)

நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி வழுவழுத்த கனமான கால்களால் வைத்தியரை மடக்கி அவர் முகத்தைத் தன் வயிற்றோடு சிறைப் பிடித்து தலையைத் தடவி ”ஓய் வைத்தியரே உமக்கு என்ன கிறுக்கா பத்து நாழிகைக்கு எழுந்து என்ன பண்ணப் போகிறீர்? சும்மா என் உடம்பு வாடை பிடித்துக்கொண்டு ஒண்டியுறங்கும்” என்று தூக்கக் கலக்கமும் கிராம்பு மணக்கும் வாயுமாக உபதேசம் செய்து உறங்கினாள்.

வைத்தியர் இனி ஆத்மா உறங்கவா, விழிக்கவா, உறங்குவது போல் விழிக்கவா, விழிப்பது போல் உறங்கவா, எல்லாம் சேர்த்து நிகழவா, எதுவுமே செய்யாமல் சும்மா கிடக்கவா என்ற தத்துவ விசாரத்தில் ஒரு நிமிடம் மூழ்கினார்.

ஆத்மா கிடக்கட்டும், அற்ப சங்கைக்குப் போய்க் குத்த வைக்க வேண்டும் என்று நிமிடத்துக்கு நிமிடம் அவசம் கூடிக்கொண்டு போக, கட்டிலை விட்டு இறங்கினார்.

“போங்க ஓய் போங்க. அப்புறம் தேடிக்கொண்டு வருவீர்தானே, ஒன்றும் இவிடம்
காட்டித்தரப்பட மாட்டாது”. அவள் சொல்லி விட்டு நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

கழிவறைக்குப் போன காரியம் முடித்து தோட்டத்தில் காற்று வாங்க உட்காரும் கல் பாளம் பதித்த மேடையின் குளிர்ச்சியை அனுபவித்தபடி சற்றே அமர்ந்து கண் மூடிக் கொண்டார். நெல்பரலி. அதைத் தான் இன்று வஸ்திரகாயம் பண்ண வேண்டும். நேற்று சூரிய உதயத்துக்கு முன் கண்டெடுத்தது. கண்டெடுக்காமல் இருந்தால் பிரதானி நஞ்சுண்டையாவின் அம்மா உயிர் விடை பெற்றுப் போயிருக்கலாம். இனி ஆத்மாவும் உடம்பும் ஒன்றாக இருக்க பைத்தியநாத் மட்டும் சிகிச்சையும் சிஷ்ருசையும் செய்யக் கூடிய நாற்பது வயது மருத்துவர்.

இதற்கு முன்பு இன்னொருத்தரும் இருந்தார். அவர் பைத்தியநாத்தின் தந்தையார் அரிந்தம் வைத்தியர். போய்ச் சேர்ந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.

பைத்தியநாதைவிட அரிந்தம் வைத்தியர் ஆழ்ந்த அறிவும், நிலைமை அவதானமும், தக்க சமாளிப்பும் கொண்டவர்.

நெல்பரலி மூலிகையை ஒரு வாரம் முன்பே தேடிக் கண்டு பிடித்திருப்பார். அல்லது தேடிக் கண்டதுதான் நெல்பரலி என்று சாதித்திருப்பார்.

படம் மூலிகை மருத்துவம்
நன்று timesofindia.indiatimes.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன