துடைத்துப் போடும் ஐரோப்பிய சுத்தம்

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து -‘

வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான். ஐரோப்பியனுக்கு மிளகில் விளக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கும்போது இந்தியனுக்குச் சந்தனம் பிடிக்கக்கூடாதா என்ன?

அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம் ஊறிய நன்னீரும் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைத்து வைத்திருந்த அரச ஆசனத்தில் சென்னா தேவி அமர்ந்திருந்தார்.

போர்த்துகீஸ் தேசப் பிரதானி முழங்காலில் இருந்து தேவாலயத்தில் வணங்குவது போல் வணங்கினார். அது இந்திய வழக்கம் இல்லை. எனினும் அவர் வணங்கியது மகாராணிக்குப் பிடித்திருந்ததாக சென்னபைரதேவியின் முகக் குறிப்பு சொன்னது.

பெத்ரோ வணங்கி எழுவதற்குள் மகாராணி தன் வலது கையைபெத்ரோவின் முகத்தை நோக்கி நீட்டினாள். இது இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத அசல் ஐரோப்பிய மரியாதை செலுத்துதலின் இறுதிக் கட்டம் என்பதை சென்னபைரதேவி அறிந்திருந்ததோடு இன்றைக்கு முதல் முறையாகப் பரீட்சித்துப் பார்க்கத் திருவுள்ளம் கொண்டதாகத் தெரிய பெத்ரோவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அரசியின் கையை மெதுவாகப் பற்றி மரியாதையோடு முத்தமிட்டு தலை வணங்கவே, அவள் கையைப் பின்னால் எடுத்துக் கொள்ளும் முன் ஒரு பெண் ஊழியத்தி வெண்மையான பட்டுத் துண்டும் வெளிர் பருத்தித் துணிச்சவுக்கமும் கொண்டு கையை சுத்தப்படுத்தியது பெத்ரோவுக்கு சற்றே சினத்தை ஏற்படுத்தியது.

அவருடைய வாயும் முத்தமும் இங்கே இருக்கும் ஒருத்தரை விடாமல் அதிக சுத்தமானது என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. மரியாதை செலுத்தும் ஐரோப்பிய சடங்கை இந்திய முறையில் தீட்டு பார்த்து சுத்தப்படுத்தும் அந்தத் துணியால் துடைப்பது இன்னும் சில காலத்தில் இந்தப் பிரதேசம் எங்கும் பரவலாக வந்து சேரலாம்.

மகாராணியின் கரங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று வாதம் புரிய பத்து காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுத்தப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்று மகாராணி நிபந்தனை வைக்க நிச்சயம் ஒரே ஒரு காரணம் போதும் – பெத்ரோவும் மற்ற எல்லா ஐரோப்பியர்கள் போல் காலைக்கடன் முடித்து இலை, தழை, வைக்கோல், இப்போது எங்கும் பரவி வரும் துடைக்கும் காகிதம் இதிலெல்லாம் இஷ்டம்போல துடைத்துப் போட்டுவிட்டு வருகிறவர். நாள் கணக்காக தண்ணீர் காணாத பிருஷ்டங்கள் அவருடையவையும். மகாராணி கொலு இருக்கும்போது திருமுன்னர் இப்படியான அசுத்தங்களோடு ஒருத்தரை எவ்வளவு பெரிய மனுஷராக இருந்தாலும் அனுமதிப்பது ஆசாரஹீனம் ஆகும்.

a

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன