நேமிநாதன் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னான். போன வாரம் ஆவிகளோடு பேச வந்த இரண்டு போர்த்துகீசியர்களும் வணக்கம் என்று இருகை கூப்பி நின்றிருந்தார்கள்.
இவர் ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வர்த்தகர். நேமிநாதன் ஜோஸ் கார்லோஸை ஒரு கீற்றுப் புன்னகையால் வரவேற்றான்.
இவர் தோமஸ் அகஸ்டின்ஹோ. குடும்பத் தொழிலைக் கவனிக்கிறார் என்றாள் ரோகிணி. கொஞ்சம் அலட்சியத்தோடு தலையாட்டுகிறான் நேமி.
நேமிநாதன் ரோகிணியை மங்கிய அறை வெளிச்சத்தில் பார்க்கிறான். போர்ச்சுகீசிய, இங்க்லீஷ், பிரஞ்ச், கிரேக்க அழகுத் தேவதை போல் இருக்கிறாள் அவள். வனப்பின் ஐரோப்பியத் தன்மை மேலெழுந்து சூழ்ந்திருக்க ஒப்பனை புனைந்திருக்கிறாள் அவள். உடுப்பும் ஐரோப்பிய பாவாடையும், நெஞ்சைக் கவ்விப் பிடிக்கும் மேல்சட்டையுமாக.
நேமிநாதன் இரண்டு துரைகளையும் உற்று நோக்குகிறான். பளபளப்பான கால்சராயும், அதே பளபளப்பில் பொத்தான் வைத்த மேல் குப்பாயமுமாக மெல்லிய உதடுகளும் சொத்தைப் பல்லுமாக இரண்டு துரைகள். துரைகள் என்பதால் நேமிநாதன் மதிக்கிறான். ரதவீதி கடைக்காரர்கள் போல் லிஸ்பன் சிறு வியாபாரிகள். அவ்வளவுதான் அசல் மதிப்பு.
சக்கரத்தில் கழுத்தை நுழைத்த மாதிரி கழுத்தில் பாதி வளைந்த கழுத்துப் பட்டி அணிந்திருக்கிறார்கள் இருவரும். நேமிநாதன் வயது தான் இருப்பார்கள். எல்லா நாட்டுக்காரர்களும் செய்வது போல் ரோகிணியையும். கஸாண்ட்ரோவையும் பார்த்து கண்ணில் ஜாக்கிரதையாக மறைக்கப்பட்ட காமத்தோடு நெருங்கி இழைந்து அபத்தமான பேச்சுக்கெல்லாம் சிரித்து, வாய்ப்பு கிடைக்குமா என்று முயங்கக் காத்திருக்கிறார்கள்.
அவ்வளவு சீக்கிரம் நேமிநாதன் ரோகிணியை விட்டுக் கொடுத்து விடுவானா? பெத்ரோ தான் கஸாண்ட்ராவை கைநழுவி, தற்சமயத்துக்கு மட்டும் என்றாலும் கொடுத்து விடுவாரா? என்றாலும் வர்த்தகம் பேசப்பட வேண்டும். பேச அமர்ந்திருக்கிறார்கள்.
pic Portuguese ships on a mercantile journey
ack en.wikipedia.org