“உன்னைக் கூட்டிப் போறதா எங்கே சொன்னேன்? உன் பெண்டாட்டி மிங்கு என்னோடு வருவா” என்று வைத்தியரின் ஆச்சரியத்தைக் கலகலவெனச் சிரித்து ரசித்தபடி சொன்னாள்
சென்னபைரதேவி மகாராணி. வைத்தியர் மிங்கு வீட்டுக்காரனாக ஒரு நிமிஷம் மாறி அவளிடம், “ஆசிர்வாதம் வாங்கு” என்று சொல்ல, தம்பதியாக இருவரும் சென்னாவின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள்.
“பயணம் போனா, நீங்க ரெண்டு பேரும் உண்டு கட்டாயமாக” என்றாள் ராணி. ”பத்து சிமிழ் மருந்து வேணுமா?” வைத்தியரை ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.
”ஆமாம்மா, சொல்லப் போனால் பத்து சிமிழும் மூலிகைச் சாற்றை கெட்டியாக்கி வச்சது. சிமிழை எடுக்கும்போது அதைக் கரைச்சு வச்சுக்கணும். அதெல்லாம் பார்த்துக்கலாம் அம்மா. என் பொறுப்பு”
“இதை எடுத்துப் போகிறதுக்கு ஏதாவது கவனிக்கணுமா?”
“ஆமாம்மா, கடல்லே பயணம்னா, உப்புக் காற்றிலே மூலிகை வீரியம் குறைய வாய்ப்பு இருக்கு. அதை நிவர்த்தி செய்ய, ஒண்ணுக்குள்ளே ஒண்ணா மூணு பகுதியாக பெட்டி. பெட்டிக்குள் சிமிழ் சரியான வெப்பத்திலே கை படாமல் கிளறிக் கைபடாமல் அடைச்சு அரக்கு உருக்கி வாயை இறுக அடைக்கணும், அப்புறம் கல் உப்பு எடுத்து மரப்பெட்டி உள்ளே வெற்றிடத்திலே தூவி இருக்கணும்”.
சென்னா புன்சிரிப்போடு நின்றாள். இவ்வளவுதானா, ஒரு நிமிஷத்திலே முடிச்சுடலாம். அரிந்தம் வைத்தியரை கூப்பிடு என்றாள் குறும்பாக.
அம்மா, எங்கப்பா மேலே அவ்வளவு நம்பிக்கையா? அவர் இறந்து பத்து வருஷமாச்சே. ஆவியாக வந்து பேசறாரா? வேறே எல்லாரோட ஆவியும் வர்றதாமே” என்றார் வைத்தியர் தரையைப் பார்த்தபடி.
“இப்போ நான் ஒற்றனா பேசணுமா, வைத்தியனா பேசணுமா? பைத்யநாத் வைத்தியர் கேட்டார்.
“எதோ ஒண்ணு தகவல் சொன்னா சரிதான். அதுவும் ஹேஷ்யம், கூட்டி சேர்த்தது எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடிக்கு பேசறது முக்கியம். மிங்கு, நீ போகிறதுன்னா போடி. போய் இவனுக்கு சித்தரத்தை கஷாயம் போட்டு வை. லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருக்கான். சீக்கிரம் அனுப்பிடறேன். பயப்படாதே” என்றாள் சென்னபைரதேவி மகாராணி. மிங்கு குனிந்து வணங்கி வெளியேறினாள்.
picture Pestle & mortar
ack amazon.in