தின்னுங்கள் இன்னொரு ஜயவிஜயீபவ – எழுதப்படும் ‘மிளகு’ நாவலில் இருந்து

நான் எழுதி வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து ஒரு சிறு பகுதி

அற்பமாக ஒரு இனிப்புப் பதார்த்தத்துக்கு இத்தனை பேர் உயிரை விடுகிறார்கள். நாலு நாளாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரத்தி செங்கல் மாதிரி பெரிய வில்லைகளாக நீளக் கத்தியால் வெட்டி, வாழைமட்டை பொதிகளாக அடுக்க, கையே தனியாகக் கழன்று விழப் போவதுபோல வலி.

விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இது என்ன வருடம் என்று கத்தோலிக்க மதகுரு ஒருவர் இனிப்பு வாங்க அங்காடிக்கு வந்தபோது அவரைக் கேட்டார் பரமன். பதினாறாம் நூற்றாண்டு இன்னும் இரண்டு வருடத்தில் முடிந்து பதினேழாம் நூற்றாண்டு தொடங்கப் போகிறது என்று சொல்லியபடி ஒரு பாதுஷாவைக் கடித்துத் தின்றார் குரு. எச்சில் பண்ணிச் சாப்பிடும் குரு சொன்னாலும் பரமன் நம்ப வேண்டியிருக்கிறது. நம்பாவிட்டால் அவருக்கென்ன போச்சு! ஆக, இது கிறிஸ்து சகாப்தத்தில் ஆயிரத்து அறுநூறாம் வருடம்.

”பரமாவரே”.

மிட்டாய்க்கடையின் உரிமைக்காரி அவரை சகல மரியாதையும் பிரியமுமாக அழைக்கிறாள். நாண் பூட்டிய வில் போல் விண்ணென்ற உடல். கவர்ச்சி விட்டுப்போகாத முப்பத்தேழு வயதுப் பெண். பெயர் ரோகிணி.

”சொல்லு ரோகிணி, என்ன புதுசாக சிருஷ்டிக்கலாம்?”

பரமன் அவளை புன்சிரிப்போடு கேட்கிறார். இதை அவர் மனம் இங்கிலீஷ் பாஷையில் கேட்கச் சொல்கிறது. காதில், உட்காதில் விழும் வார்த்தைகள்.

ரோகிணி நாணுகிறாள். வேறு அர்த்தம் எடுத்துக்கொண்டிருக்கிறாள். பரமனுக்கு எழுபதில் காதல் வந்து நிற்கிறது. நானூறு வருடம் மூத்த இளம் பெண்ணோடு அது வந்து படிகிறது. காதலில்லை. வயது நோக்காத காமம்.

“இந்த புது இனிப்பு எப்படி இருக்கும், சொல்லு” அவர் யோசித்தபடி சொல்கிறார்.

பசு நெய்யும் சர்க்கரை இனிப்புமாகப் பொன் நிறத்தில் பொரித்த நீள்சதுரப் பேழையாகக் கடலைமாவுக் கூடு. ரோஜாவின் வாசனை மிகுந்த ஜீராவில் முழுக்க ஊறிய கூட்டின் அடியில் பொதிந்த பாதி கிராம்பு. கூட்டின் உள்ளே முதல் தளத்தில் பாதாம், அடுத்ததில் தேங்காய், மூன்றாவதில் முந்திரி என்று அடைத்த, வேகவைத்த பூரணம். குடுவையை மூடி மேலே சிறு கீற்றாக மிளகுப் பொடிக்கோடு.

கிராம்புக் காரம் ஒரு நொடி. உடனே ஜீராவும் நெய்யும் ரோஜாவும் கலந்த சுவை. அடுத்த வினாடி விதவிதமான இனிப்புப் பூரணச் சுவை என்று நாவில் கரைந்து, இறுதியில் மிளகுத் தீற்றல் சுவை. பரமன் சொன்ன, இனித்தும் உரைத்தும் மாய ருசி காட்டும் புது இனிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது.

நேற்று முழுக்க காலையில் இருந்து அந்தப் பெயர் குறிப்பிடப்படாத இனிப்பை மறுபடி மறுபடி செய்து பூரணத்துவம் அடைய வைத்துக் கொண்டிருந்தார் பரமன்.

கூடு சரியாக வந்தால், ஜீராவில் ஊறியதும் கொழகொழவென்று உருவம் சிதைந்து போகிறது. ஜீராவில் சரியாக ஊறினால் பிசின் மாதிரி வாய்க்கும் விரலுக்கும் பாலம் போடுகிறது. எல்லாம் சரியாக இருந்தால் மேலே மிளகுக் கீற்றுக்கோடு வரமாட்டேன் என்கிறது. வந்தால் சொதசொதவென்று கோடு கலைந்து மேலே எல்லாம் மிளகுப் பொடி நனைக்கிறது. அது சரியாக வந்தால் குடுவையின் தலையில் கத்தி செருகியதுபோல் கிராம்பு உட்கார மாட்டேன் என்று விழுந்து விடுகிறது. உட்கார்ந்தால், துளை பெரியதாக விழுந்து மொத்த வடிவமுமே பழுதுபட்டுப் போகிறது.

சேர்மானங்களின் அளவை, பதத்தை மாற்றி மாற்றி சோதனை செய்து, ஒரு வழியாக எல்லாம் சரியாக வர, ரோகிணி சீனாவில் இருந்து அறிமுகமான விலையுயர்ந்த காகிதத்தில் சாயம் தோய்த்த குச்சி தொட்டு, எப்படி இந்தப் புது இனிப்பு செய்வது என்று எழுதிப் பத்திரமாக வைத்தாள்.

இந்த சமையல் குறிப்பு இனி ரோகிணியின் குடும்பத்துக்கும் பரமனின் குடும்பத்துக்கும் மட்டும் தெரிந்தது. அதை யாருக்காவது சொல்லித் தரவேண்டும் என்றால், இரண்டு பேரும் சம்மதிக்க வேண்டும். ரோகிணி இந்த உரிமை பற்றிய குறிப்புகளை எழுதும்போது கிட்டத்தட்ட சமையலறையே காலியாக இருந்தது. மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

படம் : ஜயவிஜயீபவ இனிப்பு இப்படி இருந்திருக்குமோ1

நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன