மடையன் என்றொரு தொழில் – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து – a small extract

இவ்வளவு கிராமப் புறமாக, பெரிய கோவில்கள், மாளிகைகள் ஒரு பக்கம் இருக்க, மின்சாரத்தின் சுவடுகூட இல்லாமல், உடுப்பும் வேதகாலம் போல் பஞ்சகச்சமும் மூலக்கச்சமும் அணிந்து ஒரு பெரிய நகரமே மேடையில்லாத நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்ப மனதில் வந்தது.

வாசலுக்கு வந்த அந்தப் பெண் ஓய் வாரும் எப்படி இருக்கீர் என்றாள். பிரமாதம் என்று அவர் சொன்னது புரியாமல் மயங்கி அடுத்து உடனே வசீகரமாகச் சிரித்தாள் அவள்.

“ஜெரஸோப்பா வண்டியடி சத்திரத்தில் குடியேறி விட்டீராமே. உத்தியோகம் பார்க்கிற தோதில் மனசு போகமாட்டேன் என்கிறதா?”

தெலுங்கும் தமிழுமாக அவள் கேட்க பரமன் ஆழ்ந்து பார்த்தபடி, ”எஜமானி, எனக்கு இந்த மாதிரி சொகுசு எல்லாம் ஏதும் வேண்டாம். பம்பாய் போகிற விமானம் எங்கே ஏற வேண்டும் என்று சொன்னால் போதும்” என்றார்.

“ஆரம்பிச்சுட்டீங்களா யாருக்கும் புரியாத விஷயம் பேச? நீர் சொன்ன விமானம், பம்பாய் எல்லாம் யாருக்கும் தெரியாத சமாசாரங்கள். ஜெரஸோப்பாவில் மட்டுமில்லை, பழைய தலைநகரம் ஹம்பியிலே, இப்போதைய தலைநகரம் பெனுகொண்டாவிலே கூட இதுதான் நிலைமை. ஆக, இங்கே கொஞ்ச நாள் இருந்து பாரும். நிச்சயம் பிடித்துப் போகும். அப்புறம் பம்பாய், விமானம், நாக்பூர் எல்லாம் மறந்துடுவீங்க”

பெரியதாகப் பேசி நிறுத்தினாள்.

“சரி, ஜீவனத்துக்கு என்ன பண்ணப் போறீர்? மூன்று வேளையும் சமணக் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் பிரசாதம் போதுமா? வேறு தேவைக்கு காசு வேணாமா?”

“காசுக்கா பஞ்சம் இதோ” என்றபடி கையில் பிடித்திருந்த சஞ்சியில் இருந்து சில காசுகளை பரமன் எடுத்துக் காட்ட ஏகமான சுவாரசியத்தோடு அவள் அந்த காசுகளைக் கையில் வாங்கிப் பார்த்தாள்.

“ஓய் இந்தக் காசெல்லாம் உம் ஊரில் அது எங்கே இருக்கோ அங்கே செல்லும். இங்கே இதுக்கெல்லாம் ஒரு மதிப்புமில்லை”. என்றாள் அவர் கையைப் பற்றியபடி,

“சரி, இப்போதைக்கு உத்தியோகம் ஏதும் கிடைத்தால் சேர்வேன்” என்றார் பரமன். ”கணக்கு எழுதுவீரா?” என்று முதலில் கேட்டாள் அந்தப் பெண்.

“உங்க பெயர் என்ன மிளகு ராணியா?”

“நான் எதுக்கு மிளகு ராணியாக இருக்கணும்? நான் ரோகிணி. ஜெர்ஸோப்பாவில் பிரசித்தமான மிட்டாய் அங்காடி நடத்தறேன். நீர் கணக்கு எழுத மாட்டீரா? போகுது. மிட்டாய்க்கடை பொருள் சர்க்கரை, நெய், வெண்ணெய், பாதாம் பருப்பு இப்படி எல்லாத்தையும் உக்கிராணத்துலே வச்சு அப்பப்போ கேட்கும் போது எடுத்துத் தந்து மேற்பார்வை செய்வீரா?”

”மாட்டேன் ஆனால் நான் ரவாலாடும், தில்லி ஜிலேபியும், கல்கத்தா ரஸகுல்லாவும், இனிப்பு தயிரும் செய்வேன். எங்க அம்மா இதையெல்லாம் ஒரு ஐம்பது வருஷம் முந்தி செய்தபோது பார்த்து பார்த்து கத்துக்கிட்டேன்”.

“சரி நீர் ஒரு சுத்துகாரியம் பார்க்கற மடையரா வேலைக்கு சேரும்”.

“என்ன?:

“மடையன்…. சமையல்தொழில் செய்யறவன்”

அன்றைக்கு இரண்டு நாள் சென்று இனிப்புத் தயிர் குடிக்க கடைவாசலில் பெரிய கூட்டம் கூடியது. ஊரில் தயிர்ப் பஞ்சம், பால் பஞ்சம். எல்லாம் ரோகிணி மிட்டாய் அங்காடிக்குள் தஞ்சம் புகுந்து இனிப்புப் பலகாரமானது.

தென்னிந்திய சமையல்காரர் படம் நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன