போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை ரெண்டு பேருக்கும். ஒரு கவிராயன் தெலுங்கில் துளுவ ராஜ்யகுமாரி என்று அப்பக்காவை விளித்து நாட்டியமாடத் தோதாகப் பாட்டு எழுதிக்கொண்டு வந்து பாடியும், அடவு கற்பித்து நாலைந்து கன்யகையரைக் கொண்டு ஆடச் செய்தும் அப்பக்காவுக்கு பாட்டும் ஆட்டமும் காட்சி வைத்தான்.
அப்பக்கா மகாராணியே நீ உலகாளுகிறாய். உன் கேசம் மணம் வாய்ந்தது, மேகம் போல் இருண்டிருப்பது. உன் கண்கள் கரியவை. பெரியவை. உன் தனங்கள் மாம்பழங்கள் மிருதுவானவை. பெரியவை. உருண்டு திரண்டவை. கனமானவை. இடுப்பு இல்லாதது. குறி தேர் போல் பரந்துபட்டது. பிருஷ்டம் மலைகள் போன்றது. நீவாழ்க துளுவ ராஜ்யரஜினியே நீடூழி வாழ்க என்று எழுதிப் பாடி ஆடி அப்பக்காவிடமிருந்து ஐந்து வராகன் பெற்றுப் போனான்,
அந்தப் பாட்டை உற்சாகமாகத் தன் ஆருயிர்த் தோழி சென்னபைரதேவியிடம் அவள் பாடிக் காட்ட, என்ன ஆச்சரியம், பட்கல் கவிஞனா அது? போன வாரம் தான் இந்த வருணனைகள் எல்லாம் இட்டு, நடுநடுவே மிளகு என்று வருமாறு வைத்து சாளுவ ராஜ்யரஜினி என்று விளிக்கும் பாட்டை இளம் பெண்களைக் கொண்டு பாடி ஆடி நூறு வராகன் வாங்கிப் போனான் அதே கவிராயன் என்றாள் சென்னா ஆச்சர்யத்தோடு.
”அடியே சாளுவச்சி, ’உன் பிருஷ்டம் இமயமலை, உன் அது தேர்ன்னு என்னைச் சொன்ன பொய்யை அஞ்சே வராகன் கொடுத்து வாங்கிட்டேன். உன் மாம்பழத்துக்கும், இமயமலைக்கும், தேருக்கும் ரொம்ப அதிகமாக கொடுத்திட்டியேடி என்றாள் அப்பக்கா சென்னாவின் முகத்தைக் கையில் ஏந்தி. ’என்ன இருந்தாலும் இந்தத் துளுவச்சி சாமர்த்தியம் சாளுவச்சிக்கு வருமோ’ என்று பாட்டாகப் பாடி ஆடவும் செய்தாள். கூடவே சென்னாவையும் ஆடவைத்தாள். அந்த மகிழ்ச்சிகரமான பொழுதுகள் இப்போதும் வருமோ என்று ஏங்கி இருந்தாள் அப்பக்கா.
pic Ullal Bridge
ack wikipedia.org