மிளகு நாவல் – அம்பலப்புழை பால் பாயசத்துக்கு மராட்டியரின் ஆண்டு தோறுமான யாத்திரை

கஜானன் விநாயக் மோதக் வருடா வருடம் இல்லாவிட்டாலும் முகம் மறந்து போகாமல் வைத்திருக்கத் தக்க விதமாக, அவ்வப்போது அம்பலப்புழைக்கு வந்துவிடுவார்.

அம்பலப்புழை கிருஷ்ணன் கோவிலில் பிரசாதமாக அளிக்கப்படும் பால் பாயசத்துக்கு மிகப் பெரிய ரசிகரும் கூட, மோதக்.

நாற்பத்தைந்து வருடமாக ஒரு மராட்டிக்காரருக்கும் ஒரு மலையாள பூமித் தமிழருக்கும் இடையே நிலவும் நல்ல நட்பும் இணக்கமும் இவர்களில் ஒருத்தர் மறைவது வரை கண்டிப்பாக இதே நிலையில் தொடரும்.

மும்பாய் பம்பாயாக இருந்த 1960-களில் தொடங்கிய பரிச்சயம் அது. அப்போது மதறாஸிகளை வெளியேற்ற நடைபெற்ற போராட்டத்தின் போது மோதக் புத்திளைஞன். பத்து நிமிஷம் முன் வந்த கல்யாண் – தாதர் லோக்கல் ரயிலில் இடம் கிடைக்காமல் அடுத்த ஐந்தாவது நிமிடம் அடுத்த லோக்கலில் போகவேண்டி வந்தால் கூட, இது மதறாஸி சதி என்று எதிர்த்துப் போராடக் கிளம்பி வந்த மராட்டிய வீரன் மோதக்.

திலீப் ராவ்ஜி? அவர் அப்போது வேலைதேடிக் கொண்டிருந்தவர். கிடைக்காமல் மராட்டிய இளைஞரானவர். திலீப் அம்மா வழியில் மராட்டியும் அப்பா வழியில் மதறாஸியும் ஆனபடியால் இது சாத்தியமானது.

உடுப்பி ஓட்டலில் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மதறாஸி பிராமணனை முதுகில் ஒரு போடு சும்மா வலிக்காமல் போட்டு அனுப்பிவிட்டு, கல்லா பணத்தில் ஐந்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வர மோதக்கால் முடியும். அந்த ஐந்து ரூபாயும் வெளியே போகும்போது ஜாக்கிரதையாக திருப்பி எறியப்படும். அது ஒரு காலம்.

மோதக் மும்பையிலிருந்து ஆலப்புழை வந்துகொண்டிருக்கிறார்.

தன்பாத் ஆலப்புழை எக்ஸ்பிரஸ்
நன்றி விக்கிபீடியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன