நடுராத்திரிக்கு ஓ என்று சத்தம் போட்டுக்கொண்டு சின்னச் சங்கரன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தார். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. குளிர்காலம் வந்து கொண்டிருக்கும் நவம்பர் மாதம் என்றாலும் வியர்வை உடலிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது.
மாதம் ஒரு தடவையாவது திரும்ப வரும் கனவில் வெளி எல்லாம் மிளகு வாசம் அடிக்கும். அத்துவானக் காட்டிலிருந்து ஒரு குழந்தைக் குரல் நிறுத்தாமல் கூப்பிடும் – அப்பா அப்பா அப்பா. பின் அழும். ’சுப் ஷைத்தான் மத் ரோ கோலி தேங்கே’ என்று கனமான குரல் ஒன்று கேட்க சூழல் நாற்றமடிக்கும் விமானமாகும். ஐந்து துப்பாக்கிகள் சங்கரனை நோக்கி உயரும்.. ஓவென்று கத்தி அழுது கொண்டு சங்கரன் எழுந்து உட்கார்வார். ’அப்பா அப்பா’ குரல் மங்கி ஒலிக்க, படுக்கை அறையில் மிளகு வாடை.
அதே கனவு தான் இப்போதும். குரல்கள் அதே தொனிகளில் அதே உணர்ச்சிபூர்வமாக அல்லது அதிகாரத்துடன் ஒலிக்கின்றன. அப்பா என்று விதிர்விதிர்த்துக் கெஞ்சும் குழந்தைக் குரலும், சைத்தானே, அழாதே, சுட்டுக் கொன்னுடுவேன் என்று பயங்கரவாதக் குரலும் சங்கரனை விடாமல் தொடர்கின்றன. பாதிக் கனவில் துப்பாக்கி உயர சங்கரன் பைஜாமாவை நனைத்துக் கொண்டு எழுந்து உட்கார்கிறார். வசந்தி அவருக்கு அடல்ட்ஸ் டயபர் போட்டு விட்டிருக்கிறாள். தனியாகப் படுத்துக் கொள்கிறாள்.
சங்கரன் துர்ஸ்வப்பனம் கண்டு எழும்போது அவரைக் குழந்தை போல மடியில் போட்டுக் கொண்டு இரண்டு நிமிடம் ஆசுவாசப்படுத்துகிறாள். மூத்திரம் நனைந்த பைஜாமாவைக் கழற்றி வேறு போட்டு விடுகிறாள். சங்கரனைக் கட்டிக்கொண்டு ஜோஜோஜோஜோவென்று காதில் ஓதி உறங்க வைக்கிறாள்.