அவருக்கு தன் மனைவியை வெளியே கூட்டிப் போகப் பிடிக்கும். ஆனால் நிச்சலாவுக்குத்தான் சிறு பிரச்சனை. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றாலோ நடந்தாலோ கால் துவள ஆரம்பித்து விடும். டாக்டர் பார்த்துவிட்டு இதற்கு உடம்பில் வலு இல்லாதது காரணம். வைடமின் டானிக் எடுத்துப் பாருங்கள் என்று காரணமும் தீர்வும் சொல்லி விட்டு அடுத்த பேஷண்டைக் கவனிக்க ஆரம்பித்தார்.
தினம்தினம் சிரமப்படுவது மோதக்கும் நிச்சலாவும் தான். மோதக் ரொம்ப யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு முக்காலியை தச்சரைக் கொண்டு செய்வித்தார். அதை முதுகில் ஆசனம் பொருந்துமாறு வார்கள் கொண்டு பிணைக்கச் சொன்னார். மூன்று கால்களும் பின்னால் நீட்டிக்கொண்டிருக்காமல் மடிந்து ஆசனத்துக்கு மேல் பிணைத்திருக்கும். கௌபாய் பசுமேய்க்கி ஹாலிவுட் இங்க்லீஷ் சினிமாக்களில் குதிரையேறி துப்பாக்கியோடு வரும் கதாநாயகன் மாதிரி பின்னால் முக்காலியோடு அவர் புறப்படும்போது நிச்சலா மோதக் கூடவே நடப்பாள்.
ஒவ்வொரு பத்து நிமிடமும் சட்டைப் பையில் அலாரம் அடிக்க மோதக் முக்காலியை தரைக்கு இறக்கி மனையாள் கால் வலித்ததா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு உட்காரச் செய்வார்.
ஒரு வாரம் இப்படி செயல்பட்டு பத்து நிமிட இடைவெளி அரைமணி நேர இடைவெளியானது. ஆனாலும் ஒரு பிரச்சனை. அலாரம் அடித்ததும் மனைவி உட்கார வேண்டிய இடம் நடுத்தெருவாகவோ, கழிவறை அதுவும் ஆண்கள் கழிப்பறை வாசலாகவோ இருக்கக் கூடும்.
முக்காலி இறங்காவிட்டால் நிச்சலா நிச்சயமாக பலகீனப்பட்டுப் போவாள். இதையெல்லாம் யோசித்து ஐந்து நிமிடத்துக்கு மேல் பயணம் தவிர்க்கவும், எப்போதாவது முக்காலி சேவையை அமுல் படுத்துவதை ஒத்திகை பார்க்கவுமாக மோதக் அல்லல் படுகிறார்.
சமையல் செய்யும்போது இன்னொரு முக்காலி ஸ்திரமாக சமையல்கட்டில் இருப்பதோடு, உட்கார்ந்து சமைக்கும் உயரத்தில் சமையலறை பளிங்குப் பாளம் அமைத்ததும் மோதக்கின் யோசனை. சந்தேகமே இல்லாமல் இந்த முப்பது வருடத்தில் உபயோகமான புத்திசாலித்தனத்துக்கு அரசாங்க விருது ஏதாவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், தொடர்ந்து அவர் விருது பெற்றிருப்பார்.