”மிளகு’ நாவலில் இருந்து =
காலை ஐந்து மணிக்கு கோவிலில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள் தெரிசா. நாலரை மணிக்குக் குளித்து விட்டு கோவில் போகும்போது பாதுகாப்பாக சங்கரனைக் கூட்டிப் போவதுபோல் அவர் நடுவில் நடக்க இரண்டு பக்கமும் இரண்டு துணைவியரும் கூட வந்தார்கள்.
திலீப் ராவ்ஜியும் விடிகாலை கோவிலில் தொழும் இனிய அனுபவத்துக்காக சங்கரன், வசந்தியோடு சேர்ந்து கொண்டார். வீட்டிலிருந்து பதினைந்து நிமிடம் நடை தூரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்பதால் வாகனம் இன்றி நடந்து போய் அந்த அதிகாலையில் தரிசிக்க எல்லோருக்கும் மனதுக்கு இதமாக இருந்தது.
“இதைவிட அமைதியான ஆத்ம அனுபவம் வேணும்னா, கோவில் திறந்ததும் அதிஅதிகாலை மூணு மணிக்கு வரணும்” என்றார் திலீப் ராவ்ஜி.
சாரதா சொன்னாள் – “மூணு மணிக்கு கிருஷ்ணன் தரிசனம் தர தயாராக இருப்பார், பக்தஜனம் தான் உறங்கிட்டிருக்கும்”.
நாம இந்த கோவில்லே என்ன கதைன்னு தெரியாமல் கதகளி பார்த்தோமே நினைவு இருக்கா என்று சங்கரனிடம் கேட்டாள் வசந்தி. சங்கரன் விஸ்தரித்துச் சொல்ல அலுப்பு காரணமோ என்னமோ ஆமாமா என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். என்ன அனுபவம் அதுன்னு தான் சொல்லுங்களேன் வசந்தி என்று தெரிசா கேட்க வசந்தி சொன்னது இது –
பெரிய குத்துவிளக்கு முன்னால் வைத்து இருக்க, கண்ணை உருட்டிக்கொண்டு ஆட்டக்காரர் ஒருத்தர் நடுவிலே நின்றார். பக்கத்தில் பெண் சாயலில் வேஷம் போட்ட இன்னொருத்தர் எதையோ அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர்களின் வளமான பின்பாகம் தட்டக்கூடிய நெருக்கத்தில் கெச்சலான ஒரு தாடிக்காரர் பாடிக் கொண்டிருந்தார். மேளமும் கைத்தாளமும் கொட்டிக் கொண்டு இன்னும் இரண்டு பேரும் அங்கே உண்டு.
”ராமாயணம் மாதிரி இருக்கு. ஹனுமான்கிட்டே சீதா சூடாமணி கொடுக்கறது”.
சங்கரன் வசந்தியிடம் தணிந்த குரலில் சொல்ல,, முன்னால் இருந்து யாரோ ரோஷமாக பின்னால் பார்த்து, ”இது கல்யாண சௌகந்திகம்” என்றார்கள்.
”பீமன் திரௌபதைக்கு புஷ்பம் கொடுக்கற கதை”.
அவர் பின்னால் சாய்ந்து சொல்லி நிமிர்ந்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ, திரும்பப் பின்னால் சாய்ந்து ”மகாபாரதம்” என்றார்.
அங்கே சிரிக்க ஆரம்பித்ததை ஓட்டம் ஓட்டமாக தங்கியிருந்த லாட்ஜுக்கு ஓடி வந்து தான் நிறுத்தினோம்.
படம் அடையாறு கலாக்ஷேத்ரா கதகளி கல்யாண சௌகந்திகம்
நன்றி The Hindu