சாரட் ஜன்னலில் ஒரு வண்ணத்திப் பூச்சி வந்து அமர்கிறது. டிட்லி என்கிறான் கடிபோலி மொழியில். பட்டாம் பூச்சி என்கிறான் தமிழில். சித்ர சலபம் என்கிறான் மலையாளத்தில். சிட்டே என்கிறான் கன்னடத்தில். போர்பொலேடா என்கிறான் போர்த்துகீஸில். பரமன் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மூன்று வயதில் இத்தனை மொழி கொஞ்சம் போலவாவது எப்படி கற்றுக் கொண்டான்? அவனையே கேட்கிறார். தும்பைப் பூ மாதிரி முகம் மலர்ந்து பிரகாசிக்கச் சொல்கிறான் – என் சிநேகிதங்க வேறே வேறே பாஷை பேசுவாங்க. எல்லோருக்கும் பட்டாம்பூச்சி சிநேகிதி. சரிதானே அம்மா”.
ரோகிணி அவன் தலையைத் தடவி முத்தம் தருகிறாள். ஒரு வினாடி அவள் கண்கள் பரமனின் கண்களைச் சந்திக்கின்றன.
“குழந்தை புத்திசாலின்னு நிரூபிச்சுண்டே இருக்கான், பாரும்” அவள் பரமனிடம் சொல்கிறாள். “நீர் இவனுக்கு பதிவாக கணிதமும் விக்ஞானமும் கற்றுக் கொடுக்கிறீரா?” என்று வேண்டுவது போல் பரமனிடம் கேட்கிறாள்.
பாதி மரியாதையாக நீர் என்று விளிப்பது கல்யாணம் நடந்த நாள் முதல் அவளுக்குச் சுலபமாகியுள்ளது. ”நானா? கணிதமா? அது உம்முடைய திறமை சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே. தினம் அரை மணி நேரம் கற்றுக் கொடும்” என்கிறார் பரமன். வாங்கிய அரை மரியாதையை அவரும் உடனே திருப்பித் தருகிறார். இந்தக் குழந்தை மட்டுமில்லாவிட்டால் திரும்பப் போவது பெரிய சிக்கலாக தலைக்கு மேல், மனதுக்குள் சுழன்றிருக்கும்.
மஞ்சுநாத் உறக்கம் வந்து ரோகிணி மடியில் நித்திரை போகிறான். காலை ஏழு மணிக்குப் பயணம் போக ஐந்து மணிக்கே எழுந்ததால் உறக்கச் சுவடு இன்னும் உள்வாங்கிய உடம்பு. அவனை பரமன் பக்கம் இருக்கையில் படுக்க வைக்கிறாள் ரோகிணி.
ரோகிணி ரதசாரதிக்கு பின்னால் இருக்கும் சாளரத்தை மூடி அந்தரங்கம் நடப்பாக்குகிறாள்.
பரமன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரை காமம் நனைந்த ஒரு குறுஞ்சிரிப்போடு உதட்டைக் கடித்தபடி நோக்குகிறாள் ரோகிணி. பரமனின் கரத்தை எடுத்து தன் வளமான மாரிடத்தில் வைக்கிறாள். அவள் தயாராகி விட்டதாக அழைப்பு விடுக்கும் வினாடி அது.
நேமிநாதனை நினைத்துக் கொள்கிறாள். இன்னும் எத்தனை வருடம் அவன் கேட்கும்போதெல்லாம் வரச்சொல்லி அனுமதித்து கீழ்ப்படிய வேண்டி இருக்குமோ. பரமன் வயதானவர் என்றாலும் அவரோடு எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியும். ராஜ்யமும், பணமும், சதியும், கார்டெல்லும், கப்பம் கட்டுவதும், கோட்டையும் கொத்தளமுமாக ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்து சாதிக்கப் போவதென்ன?
அவள் பரமனின் கால் மேல் கரங்களைத் தவழ விட்டு இடுப்பைச் சுற்றி அவரை வளைத்து தன் மடியில் வீழ்த்துகிறாள். கிராம்பு வாடை அவரைச் சூழ இறுக்க அணைக்கிறாள். எழுந்து உட்கார்ந்து வழக்கம் போல் ரோகிணியிடம் கேட்கிறார் – “சீன மந்திரத்தான் என்ன சொல்கிறான்?”
பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிண்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்கறது போதாதுன்னு கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”
pic Uttara Karnataka
courtesy en.wikipedia.org