நவாப் பழக்கம் – ஜிலேபியும் ஜாங்கிரியும் (நாவல் மிளகு)

நாவல் மிளகு-வில் இருந்து ஒரு ஜாங்கிரி

எழுந்ததும் அப்பக்கா கடைப்பிடிக்கும் ஒரு சுல்தான் – நவாப் பழக்கம் உண்டு. ஒரு பெரிய கோப்பை நிறையக் காய்ச்சிய சூடான பால். அதில் சர்க்கரை மறந்துகூடப் போடக்கூடாது. தட்டின் நடுவில் அந்த உயரக் கோப்பை. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஜிலேபிகள். ஜாங்கிரி இல்லை ஜிலேபி என்பதில் அப்பக்கா உறுதியாக இருக்கிறாள்.

ஜாங்கிரி தென்னிந்திய இனிப்பு என்பாள் அப்பக்கா. நெய் மணக்க, கோதுமைச் சாறு காய்ச்சித் திரண்ட பூங்கொத்து போன்றது அது. எல்லா சிங்காரமும் செய்யப்பட்டு தங்க நகை மாதிரி உருவாகித் தட்டை அடைத்துக் கொண்டு காணவும், முகரவும், உண்ணவும், நினைக்கவும் மகிழ்ச்சி தரும் ஜாங்கிரி. வளைந்து நெளிந்து எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்று விடை காண முடியாத குங்குமப்பூ நிற இனிப்புப் பூ. அமைப்பு ஒழுங்கு குலையச் சீர்கேடு வந்தாலும் கவலைப்படாமல் ஒரு விள்ளல் கிள்ளி உண்டாலோ மெத்துமெத்தென்று நாவில் கரைவதாக ஜாங்கிரி இனிப்பு இனிப்பு இனிப்பு. முழுசும் உண்ணும் வரை இனிப்புத் தின்னும் ஆசை கள்ளத்தனமாக அடங்கியிருக்கும். உண்டதும் ஆசை திரும்ப நினைவுக் குமிழிட்டு வரும். இன்னொரு முறை இனிப்பான சந்தோஷம் தேடிக் கிடைக்காமல் அது தீராது.

ஜிலேபி அப்படி இல்லை. வெறும் ஒற்றைக் கம்பி தம்பூரா. நெய் கலந்த எண்ணெயில் பொறித்தெடுக்கும்போதே சுற்றின் மேல் சுற்றாகத் தேங்குழல் போல, எளிதில் ஆதியும் அந்தமும் புலப்பட சர்க்கரைப் பாகு புரட்டி வரும் ஜிலேபி. விண்டால் இனிப்பு தட்டுப்படாது முதலில். புளிப்பு. புளிக்கும். புளிப்பு தணிந்து மிதமான இனிப்பு அடுத்துத் தட்டுப்படும் நாவில்.

அப்பக்கா ஒரு விள்ளல் ஜிலேபியை உண்டு ஒரு மடக்கு சூடான பாலை உறிஞ்சினாள். அடுத்த விள்ளலைக் கண்கள் மூடிக் கடிக்க தட்டில் விரல் ஊர்ந்தபோது தட்டு வெறுந்தட்டாக இருந்தது. சிரித்தபடி அந்த மீதி ஜிலேபியை சென்னபைரதேவி கபளீகரம் செய்துவிட்டுச் சிரித்தபடி அருகில் அமர்ந்திருந்தாள்.

செய்குன்றமும் அருவியும் ஓடையும் அவளுக்கும் பிடித்த காட்சிகள் தான். சலசலத்துத் தண்ணீர் ஓடுவதும் ஓ என்ற இரைச்சலோடு தண்ணீர் விழுவதும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்க மனதில் சாந்தியும் அலாதி ஆனந்தமும் கிடைப்பதை இரண்டு சிநேகிதிகளும் உணர்ந்து வார்த்தை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு தட்டில் ஜிலேபியும் பாலும் பின்னாலேயே வைத்தியனும் வர சென்னா சிரித்துவிட்டாள். அடுத்த சிரிப்பு அப்பக்கா சௌதா மகாராணியுடையது. வைத்தியன் சிரிக்கக் கூடாது என்று தீர்மானித்தது போல் மேல் துண்டை வாயைச் சுற்றி இட்டு வேகமாக நடந்து போனது தான் இரண்டு மகாராணியரையும் மேலும் சிரிக்கவைத்தது.

படங்கள் ஜாங்கிரியும், ஜிலேபியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன