விடுமுறை தரும் வாவுநாள் – மிளகு நாவலில் இருந்து

சிறுவன் மஞ்சுநாத் அப்பாவோடு விளையாட இரு வாரத்துக்கு ஒரு நாள் கிடைக்கிறது என்று பேர். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அவை. அந்த வாவு தினங்களில் ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் எல்லா வர்த்தக நிறுவனங்களும் கடை அடைத்து வியாபாரத்தை அடுத்த நாளுக்குத் தள்ளிப்போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜயநகர விதிமுறைகளைப் பின்பற்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடமாகி விட்டது.

வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம். அழகான அதிகாலை.

பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பாவில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி ரேணுகாம்பாள் மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்ய முயற்சிகளில் இருப்பார். வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர் திரும்பணும், உற்றவர்களோடு பம்பாயில் சேர்ந்து குடும்பம் நடத்தணும் என்று மனம் சதா நச்சரித்துக் கொண்டிருக்கும். ஹொன்னாவருக்குப் போவது தன்னிடமிருந்து தானே தப்பித்து ஓடுவது என்று பரமன் தனக்குள் சொல்லிக் கொள்வார். வாவு நாள் விடிகாலையில் அங்கே போகும்போது குழந்தை மஞ்சுநாத் உறங்கிக் கொண்டிருப்பான். ராத்திரி திரும்பும்போது அவன் நித்திரை போயிருப்பான்.

நீங்க ஹொன்னாவர் போகிறபோது அவனையும் கூட்டிப் போங்களேன். போகிற வழியில் வேடிக்கை எல்லாம் காட்டினால் பார்க்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறான் என்று ரோகிணி பரமனிடம் வாதாடுவாள்.

அவன் பார்த்திடுவான் தான். ஆனால் நான் சாரட்டில் உட்கார்ந்ததும் உறங்கி விடுகிறேனே. என்னத்தை வழியில் மரமும் செடியும் தடாகமும் காட்டுவது என்று பரமன் தலையைக் குலுக்கி நடக்காத காரியம் என்பார்.

சரி உங்களோடு சாரட் உள்ளே உட்கார வேணாம். ரதசாரதி அருகன் கூட உட்கார்ந்து வரட்டுமே என்பாள் விடாமல் ரோகிணி. தேர்த்தட்டில் குழந்தை சௌகரியமாக உட்கார் முடியாது என்று மறுப்பார் பரமன். இந்த பௌர்ணமி வாவுநாள் அவன் அருகனோடு உட்கார்ந்து வரட்டும். எப்படி இருக்கு என்று பார்க்கலாம் என்பாள் ரோகிணி. அவளும் ஹொன்னாவர் போகத் திட்டமிடும் வாவு நாளாயிருக்கும் அது.

அவன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருப்பான் என்றாள் ரோகிணி, மிட்டாய்க்கடையில் அதுவும் பௌர்ணமி வாவுநாள் அன்றைக்கு அவனோடு விளையாட யார் உண்டு? பரமன் கேட்டார், அவனே விளையாடட்டும். லட்டு உருண்டையை எடுத்து சுவரில் அடிக்கட்டும். அல்வாவை நாற்காலியில் பசையாக ஒட்டி வைக்கட்டும். ஜெயவிஜயிபவ இனிப்பை வாசலில் வரவேற்கும் தலையாட்டி பொம்மையின் தலைப்பாகைக்கு உள்ளே வைக்கட்டும். விளையாடினான். தனியாகக் களிக்க சீக்கிரமே அலுத்துப் போனது. அடுத்த வாரம் கடை ஊழியர்கள் ரெண்டு பேருக்கு பவுர்ணமி வாவுநாளுக்கு முந்திய நாள் அல்லது அமாவாசை வாவுதினத்துக்கு முந்திய நாள் விடுப்பு கொடுத்து, வாவு நாளன்றைக்கு வேலைக்கு வரணும் அவர்கள். அலமாரிகளில் பழைய இனிப்புகளைக் களைந்துவிட்டுப் புதியதாக உண்டாக்கிய இனிப்புகளை சீராக அடுக்கி வைப்பது பாதி நாள் வேலை. மஞ்சுநாத்தோடு விளையாடுவது இன்னொரு பாதிநாள் வேலை. அதை நிறைவேற்றத்தான் இப்போது பரமன் மஞ்சுநாத் கூட ஹொன்னாவருக்குப் போய்க் கொண்டிருக்கிறார். கூடவே ரோகிணியும் உண்டு.

0சாரட் வண்டி கல் பாளம் மேவிய தரையில் சப்தமிட்டுப் போகும் ஒலியையும் குதிரைகளின் தாளம் தவறாத குளம்படி ஓசையையும் காது கொடுத்துக் கேட்கிறார். பக்கத்தில் இருக்கும் மஞ்சுநாத்திடம் அந்தத் தாளம் தப்பாமல் தகிட தக திமி தகிட தக திமி என்று சொல்கட்டை உதிர்க்கிற உற்சாகம் அவர் குரலில் பொங்கி வழிகிறது. தகிட தக ஜுணு தகிட தக ஜுணு. ரோகிணி குதிரைக் குளம்பொலியோடு இசைந்து வர இன்னொரு சொல்கட்டை உதிர்க்கிறாள். மஞ்சுநாத் கைகொட்டி சந்தோஷமாகச் சிரித்தபடி அதை அலகு தவறாமல் அப்படியே சொல்கிறான். தகிட தக ஜுணு.
இரண்டு சொல்லையும் கலந்து சொல்கிறான் மழலை மாறாத குரலில் –
தகிட தக திமி தகிட தக ஜுணு
தகிட தக ஜுணு தகிட தக திமி

வாஹ் ஜனாப். ரோகிணி குனிந்து நெற்றியில் புறங்கை வைத்து மஞ்சுநாத்தின் திறமைக்கு மரியாதை செய்கிறாள்.

மிட்டாய்க்கடை படம் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன