(மிளகு நாவலில் இருந்து)
தோமஸ் அகஸ்டின்ஹோ ரொம்பப் பரிதாபமான நிலையில் காணப்பட்டார். லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த அவருக்கும், அவர் கூட வந்த ஜோஸ் கார்லோஸுக்கும் ஹொன்னாவர் கருமார் தெருவில் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தான் பிரச்சனை.
படுத்தால் உறக்கம் வரவில்லை. மெழுகுவர்த்திகளை அமர்த்தினார். திரைகளை முழுக்க இழுத்து மூடினார். அதையும் இதையும் நினைத்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் அகஸ்டின்ஹோ.
வேறொண்ணுமில்லை. ஒரு பெருச்சாளி, ராத்திரி படுக்க விடாமல் அவர் படுக்கையைச் சுற்றிக் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தது. அவர் போதை வஸ்துவைக் கவனிப்பாரா, பெருச்சாளியைக் கவனிப்பாரா? அதுவும் கொங்கணி பாஷை பேசுகிற பிரதேசத்து பெருச்சாளி இவர் போர்த்துகீஸ் மொழியில் விரட்டியதை புரிந்து கொண்டிருக்கப் போவதில்லை. வேலைக்காரர் யாரும் இல்லாத ராத்திரி நேரம் அது.
இன்னும் நாலு நாள். அப்புறம் லிஸ்பனை நோக்கிப் பயணம். நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும். கடல் பயணத்துக்கான அசம்பாவிதங்களான கடலில் எழும் சூறாவளி, பொங்கி நாலு ஆள் உயரத்துக்கு அலை எழுப்பும் கடல், கப்பலைத் துரத்தும் சுரா, கூட்டமாக கப்பலைச் சூழ்ந்து திமிங்கில தாக்குதல், எப்போதாவது வந்து சேரும் கடல் கொள்ளைக்காரர்கள், கப்பல் பாய்மரமோ சுங்கானோ, மேல்தட்டோ பழுது சேர்ந்து போவது இது எல்லாம் அசம்பாவிதங்களில் சேர்த்தியானவை. , காற்று இல்லாமல் கப்பலைச் சுற்றி எடுத்துப் போய் அடுத்த காற்றுக்காகக் காத்திருத்தல், கொண்டு வந்த உணவும் குடிதண்ணீரும் குறைவாகப் போவது, சாப்பிடத் தகுதி இல்லாமல் போவது, கப்பல் செலுத்துகிறவர்கள், மற்றவர்கள் உடல்நலம் கெடுதல் இவை சந்திக்க வேண்டிய பேரிடராக இருக்கக் கூடும்.
எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கே கிளம்பினோம், அங்கே போய்ச் சேர்ந்தோம் என்று நாலு வாரத்தில் பயணம் முடித்தால் நன்றாக இருக்கும்.
படம் கோவாவில் போர்த்துகீஸ் பாணி வீடு
நன்றி அவுட்லுக் இந்தியா