மிளகு நாவலில் இருந்து – மாஸ்கோவில் இருந்து வந்த நடாஷா

”நடாஷா, உன் குடும்பம்?”

திலீப் தயங்கித் தயங்கிக் கேட்டான் அவளை.

“நானா? சில இனிப்புப் பழம், சில புளிப்புப் பழம், சில அழுகிய பழம், இன்னும் சில பழுக்காமலேயே உலர்ந்து உதிர்ந்தது. என் பழக்கூடையிலே எல்லாம் உண்டு”.
நடாஷா சிரித்தாள்.

”நான் இங்கே இருந்து மாஸ்கோ போனபோது எங்கப்பாவுக்கு சித்தபிரமை பிடிச்சிருந்தது. அதோடு கூட சென்ட்ரல் கமிட்டியில் சிறப்பாக வேலை பார்த்திருந்தார். அவரை குருஷேவ் எதிர்ப்பாளர்னு சைபீரியா அனுப்பிட்டாங்க. பிரஷ்னேவ் ஆதரவுக்காரர் அவர்னு அப்புறம் கண்டுபிடிச்சாங்க. பிரஷ்னேவுக்கே தனக்கும் ஆதரவாளர்கள் இருக்காங்கன்னு அவ்வளவு தாமதமாகத்தான் தெரியுமாம். அப்பாவை சைபீரியாவில் இருந்து வெளியே அனுப்ப அனுமதி வந்தபோது வெளியே போக மாட்டேனுட்டார் அவர். நான் அதுக்குள்ளே மாஸ்கோ யூனிவர்சிட்டியிலே இந்திய அச்சுத் தொழிலின் பாரம்பரியம் பற்றி இங்கே குறிப்பெடுத்துப் போனதை எல்லாம் வச்சு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். நல்லவேளை என் டாக்டரேட்டை அவங்க தடுக்க முடியலே. இப்போவும் பீட்டர்ஸ்பெர்க், மாஸ்கோவிலே அவ்வப்போது கௌரவ பேராசிரியராக வகுப்பெடுக்கறேன். பொழுது போகாட்ட, பழைய பாணியிலே அப்படியே வச்சிருக்கற வீடு, மளிகைக்கடையிலே போய் நேரத்தை சந்தோஷமா செலவிடறேன். சோவியத் சந்தோஷம் இல்லே இது. ரஷ்ய சந்தோஷம்”.

அவள் சிரிக்க திலீப் ராவ்ஜியும் கூடச் சேர்ந்து சிரித்தார்.

”எல்லாம் சொன்னே, உன் கல்யாணம், காதல், குழந்தை குட்டி, இதெல்லாம் சொல்லேன் நடாஷா. நாங்க இந்தியர்கள். சினிமாவோ, நாடகமோ, நாவலோ சாங்கோபாங்கமாக இதெல்லாம் தெரிஞ்சாகணும். இல்லேன்னா நாங்களே கற்பனை செய்து கூடச் சேர்த்துப்போம்”.

படம் :ரஷ்ய ஆர்ட் காலரி russianpainting.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன