மிளகு நாவலில் இருந்து
தெருவில் அந்த நேரத்திலும் கூட்டம்.
“எந்தினாணு அவிடெ திரக்கு?” என்று விசாரிக்க ”சாரதாம்ம வீட்டுலே ஏதோ மேஜிக்காம்” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விழுந்தடித்து ஓடினான் கேட்கப்பட்டவன்.
வீடு முழுக்க நல்ல மிளகு வாசனை. வாசலில் க்ரோட்டன்ஸ் வைத்திருக்கும் சிறு தோட்டத்தில் முழுக்க கொடிவிட்டுப் படர்ந்திருந்த மிளகும் அதே போல் நல்ல வாசனை பரத்திக் கொண்டிருந்தது.வாசலில் பிஷாரடி நின்றிருந்தார்.
”சாவக்காட்டு வயசன் புளிச்ச காடியை அமிர்தம்னு குடிச்சுட்டு துப்பின இடம் இது. அந்த மண்ணுக்கு திடீர் திடீர்னு அபூர்வ குணம் காணும். இப்போ வீட்டையே பிடிச்சு இறுக்கறதா மிளகு வள்ளி pepper creeper ஷணத்துக்கு ஷணம் கூடிண்டே போறது” என்றார் அவர் திலீபை பார்த்து.
“பீஜம் கண்டு பிடிச்சு வெட்டினா போதும்” என்றபடி வாசல் படிக்குக் கீழே பார்க்கச் சொல்லி யாருக்கோ கட்டளை இட்டுக் கொண்டிருந்தார். சாரதா தெரிசா அந்தக் கட்டளையை ஏற்று வாங்கி வேறு ஒரு கூட்டத்திடம் தெரிவிக்க பச்சையும் ஈரமும் கருத்த உள்வேருமாக பீஜம் தட்டுப்பட்டது. அப்புறம் மிளகுக் கொடிகள் பற்றுவிட்டு விழத் தொடங்கின.
பிஷாரடி பிறகு பார்க்கலாம் என்று திலீப் ராவ்ஜியிடம் சைகை செய்து விட்டு இறங்கிப் போனார்.
தெரிசாவின் வேலைக்காரப் பெண், சுகிர்தா என்று பெயர் அவளுக்கு, கிரீச்சிடும் குரல் வாய்த்தவள், கீச்சிட்டாள்- ”போங்க போங்க இங்கே என்ன ஆடிக்கிட்டா இருக்காங்க”.
அவுத்துப் போட்டுட்டு ஆட்டம் என்று யாரோ கூட்டிச் சேர்த்தார்கள். உடனடி சிரிப்பு உருண்டு அலையாக எழுந்து வந்தது. சுகிர்தா பற்று விலகி வீழும் மிளகுக் கொடியில் பறித்தெடுத்த ஒரு மிளகை வாயிலிட்டு மென்றாள். உடனே பசுமாடு பேசுவது போன்ற குரலில் அவள் எல்லோரையும் கலைந்து போகச் சொன்னாள். அது இங்க்லீஷில் இருந்தது.