லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே

மிளகு நாவலில் இருந்து

”சாப்பிட்டு நடக்க முடியலேடி துளுவச்சி, ஒரு பக்கமா கொண்டுபோய்த் தள்ளுது. அதான் சாரட்டு சவாரி, இல்லாட்டாலும் குதிரை ஆள் அம்பு எல்லாம் இந்த உடம்பிலே உசிர் இருக்கறவரை கூடவே வரும். மூச்சு நின்னா, நின்னா சென்னா இல்லேதான்”.

சென்னபைரதேவி சிரித்தாள்.

லொளலோட்டே எல்லா லொளலோட்டே

சென்னபைரதேவி பாட அப்பக்காவும் சேர்ந்து கொண்டாள்.

லொளலோட்டே எல்லா லொளலோட்டே
ஆன குதிர எல்லா லொளலோட்டே
சேன பண்டாரமு லொளலோட்டே

சிநேகிதிகள் கைகளை உயர்த்திச் சேர்த்துத் தட்டி நீரூற்றைச் சுற்றி பாடிக்கொண்டே ஆடினார்கள்.
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கருவூலம் எல்லாம் நிலையற்றது என்று விட்டலனை சரண்புகச் சொல்லும் புரந்தரதாசரின் தேவர்நாமா பாடல் அது.

அப்பக்கா மாளிகைத் தோட்டச் சுவருக்கு அந்தப் பக்கமாக மறைவாக நின்று கொண்டிருந்த வைத்தியர் மகாராணி சென்னாவுக்கும் அப்பக்கா ராணிக்கும் கைகுவித்து வணக்கம் சொல்லியபடி வெளியே வந்தார்.

“அட நீ இருக்கேன்னு மறந்து நான் பாட்டுக்கு ஏதோ கூவறேனே” என்று சென்னா பயந்த கோலம் காட்டினாள்.

”கிறுகிறுப்புக்கு இந்த லேகியம் நீங்க எடுத்துக்கவே இல்லை. நெல்பரலி போட்டு காய்ச்சி முந்தாநாள் தான் கொடுத்தனுப்பினேன். முதல்லே அதை சாப்பிடுங்க”

நெல்பரலி கலந்த லேகியம் எடுத்துக் கொடுத்து சென்னாவை அதை விழுங்கச் சொன்ன வைத்தியர், என்னென்ன சாப்பிட்டாள் மகராணி என்று விசாரணை செய்து கொண்டிருந்தார்.

”நாலு ஜிலேபியா, அப்போ இந்த குளிகை ரெண்டு. பால் பணியாரமா? இந்த லேகியம் ஒரு மடக்கு. நெய்ப் பொங்கலா? சீரக இஞ்சி மொரபா. மிளகு வடை நாலா சரிதான். நெல்லிக்காய் லேகியம் உடனே சாப்பிட்டாகணும் என்று வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த குழந்தைக்கு பாட ரீதியாகத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கும் வாத்தியார் மாதிரி வைத்தியர் ஒவ்வொன்றாகக் கொடுக்கப் பொறுமையோடு விழுங்கிக் கொண்டிருந்த சென்னா, ’போதும் போடா’ என்று வேகமாக உள்ளே போய்விட்டாள்.

வைத்தியருக்கும் அப்பக்காவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

idly courtesy wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன