ஹொன்னாவர் பெருச்சாளிகளும், லிஸ்பன் மாநகரப் பெருச்சாளிகளும்

மிளகு நாவலில் இருந்து

சிருங்காரக் கனவில் மனம் லயிக்க இடுப்புக்குக் கீழ் அவசரமாக ஊர்ந்து படுக்கையில் இருந்து குதித்துக் கீக்கீக்கென்று சத்தமிட்டுப் போனது பெருச்சாளி. சந்தன மணமும் ஒதிகோலன் வாசனையுமில்லை. புழுத்த கழிவு தேங்கிய சாக்கடை ஓரம் குமட்டும் மேல்தோல் நனைய நகரும் பெருச்சாளி வாடை.

அதன் சிறு கண்கள் அகஸ்டின்ஹோவின் கண்ணை நேரே பார்த்த பார்வை காமாந்தகாரா என்று இகழ்ந்தது. வாயைத் திறந்து வெளிப்பட்ட பற்கள் கடித்துக் கொல்லக் கூடியவையாகத் தெரிந்தன. நாலு பெருச்சாளிகள் சேர்ந்து ஒரு ராத்திரியில் அகஸ்டின்ஹோ உடம்பை முழுக்கத் தின்றுவிடும்.

முதுகுத் தண்டில் பனிக்கத்தியைச் செருகின மாதிரி சிலிர்க்க கைகால் ஒரு நிமிடம் மரத்துப் போய் வியர்வை ஆறாகப் பெருக கட்டிலில் அமர்ந்திருந்தார் அகஸ்டின்ஹோ. முதுகில் பெருச்சாளி அப்பியிருப்பதாக பிரமை. பின்னால் சுவரில் பிடித்து பெருச்சாளி ஏறிப் போவதாக பயம். எதுவும் நிஜமில்லை

வீட்டை விட்டு வெளியே வந்து கதவடைத்து பிச்சைக்காரன் போல் வாசல் படிகளில் படுத்து உருண்டு உறங்கலாமா என்று ஒரு நிமிட யோசனை. வேண்டாம் என்று ஒதுக்கினார். அவர் நாலு தலைமுறையாகக் கப்பல் கட்டும் பரம்பரை பணக்காரர். பெருச்சாளிக்காகப் பயந்து வீட்டை விட்டு ஓடுகிறவரில்லை.

அதற்கப்புறம் ஒரு அரை மணி நேரம் சத்தமே இல்லை. காற்று பெரிதாக அடித்து ஜன்னல்கள் படார் படாரென்று மூடிக்கொண்டன. அந்த ஜன்னல்கள் வழியாக பெருச்சாளி வந்து போயிருக்கலாம் என்று பட்டது அகஸ்டின்ஹோவுக்கு.

எழுந்து போய் நான்கு ஜன்னல்களையும் சார்த்தி, அழுத்தமாகக் கொக்கித் தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டுப் படுக்கைக்கு வந்தார் அவர். படுக்கையில் இருந்து சாடி எழுந்து கட்டிலுக்குக் கீழ் பார்த்து எதுவும் இல்லையென்று நிச்சயப்படுத்திக் கொண்டார்.

உறக்கம் மெல்ல வருவதாகப் போக்குக் காட்ட அதன் அணைப்புக்குத் தன்னைக் கொடுத்தபடி அவருடைய நினைவுகள் ஊர்வலம் போகத் தொடங்கின.

கார்டெலில் காசு கொடுத்து பங்கு எடுத்ததென்னமோ சரிதான். நாலு புது தேசம், கடல் கடந்த நிலப்பரப்பு, விதம்விதமான மனுஷர்கள், மனுஷிகளைப் பார்ப்போம் பழகுவோம் போய் வந்ததைப் பற்றி எழுதி எல்லோருக்கும் தெரியச் செய்து பிரபலமாவோம் என்று நினைத்தது தான் சரியாக வரவில்லை.

கார்டலில் சேர்ந்த, அகஸ்டின்ஹோ கூடப் பயணம் வைக்காமல் லிஸ்பனில் மரச்சாமனை உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருக்கும் அவனவன் தானே எஜமானன் மாதிரி, அவர்களுக்காக உயிரை திரணமாக மதித்து பயணம் வந்த அகஸ்டின்ஹோவை வேலைக்காரன் மாதிரி கருதி, ’ஓய் அது என்னாச்சு இது என்னாச்சு’ என்று வெகுவான அதிகாரம் தட்டுப்பட விசாரிக்கிறான்.

இந்த பன்றியைக் கலக்கும் பயல்களுக்கு கார்டல் சார்பில் ரகசியக் கடிதம் அனுப்பி பெற்று நடத்த ஒரு பிரத்தியேக சேவை இருந்தால் நன்றாக இருக்கும்.

இங்கே குப்பச்சிகள் எழுதுகிற ஏதோ கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் பெயர்த்து எழுதி லிஸ்பன் கவிதை மன்றத்துக்கோ எழவெடுத்த எங்கேயோ அவை பத்திரமாக அனுப்பப் படுகிறதாக நேமிநாதன் சொன்னானே, அந்த ஏற்பாட்டை பயன்படுத்தினால் என்ன?

தூக்கம் கண்ணைக் கவிந்து கொண்டு வந்தது. அகஸ்டின்ஹோ கவிதைகள் பற்றி யோசித்தார். கவிதைகளோடு கவிதையாக வணிகக் கவிதைகள் என்று தலைப்பிட்டு முக்கியமான வர்த்தகத் தகவலை எழுத்தெழுத்தாகத் தகுந்த முறையில் மாற்றி எழுதி அனுப்பிப் பூடகமாக்கிப் பெற்றால் என்ன?

வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம்.

யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை?

ரோகிணி ரோகிணி ரோகிணி.

தடார் என்று குசினியில் சத்தம். தூக்கமும் விழிப்புமான ரெண்டுங்கெட்டான் நிலைமை விலகி அகஸ்டின்ஹோ எழுந்து நின்றார். பெருச்சாளிதான். ஆனால் குசினியில் போய்ப் பார்க்க, ஒரு பூனை பால் பாத்திரத்தைச் சாய்த்து தரையில் இருந்து பாலை நக்கிக் கொண்டிருந்தது.

பெருச்சாளி இல்லை என்பதே அகஸ்டின்ஹோவுக்கு நிம்மதி. அவர் பேருக்கு பூனையை விரட்டுவதாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு படுக்கைக்குத் திரும்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன