லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த வான்கோழிகள் :மிளகு நாவலில் இருந்து

”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”.
முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா.

”நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும் கொடுத்து வாங்கிப் போய் சமைத்து உண்பார்களே”.

வழக்கமாகத் தரும் யோசனைதான். புதிதாகச் சொல்லும் உற்சாகத்தோடு பெத்ரோ சொல்ல, கும்பிட்டு நன்றி சொன்னான் கிருஷ்ணப்பா.

”அந்தப் பறவையை வளர்ப்பது பற்றி ஒன்றும் இல்லை பிரபோ. வாய்க்குக் கீழே சவ்வு தொங்கிக் கொண்டு அலைகிற அவற்றைப் பார்க்கத்தான் குமட்டலாக இருக்கிறது. அந்த முட்டைகளின் வாடை வேறே ஒரு மாதிரி”.

அவன் வழக்கமான பதில் சொன்னான்.

”அதெல்லாம் பணத்தின் வாடை. பிடிக்காமல் எப்படி காசு சேரும்?” என்றார் பெத்ரோ.

கிருஷ்ணப்பா வெகுளியாகச் சிரித்தான்.

”நான் அடுத்த முறை லிஸ்பனில் இருந்து திரும்பும்போது உனக்காக ஒரு பத்து வான்கோழிகளைக் கொண்டு வருகிறேன். பத்து வான்கோழி ஏற்றினால், இங்கே வந்து சேரும்போது அதில் இரண்டு மிஞ்சினால் அதிசயம் தான். அந்தக் கோழிகள் நீ சொன்னபடி வசீகரமாக, மயில் போல இருப்பதோடு, நறுமணம் வீசும் முட்டை பொறிக்கும். நல்ல நிறமாகவும் இருக்கும். மயில் போல் இறகு விரித்து ஆடும். சரிதானா?” பெத்ரோ நடந்தார்.

”பிரபோ, ஆடாத இருபது கோழி கொண்டு வர முடியுமா?”

கிருஷ்ணப்பாவின் உற்சாகமான குரல் அவருக்குப் பின் கேட்டதை ரசித்தபடி போனார் அவர்.

படம் – போர்த்துகல் தலைநகர் லிஸ்பன்
நன்றி wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன