மிளகு நாவலில் இருந்து
கோரன் போனபோது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது என்றார் பரமேஸ்வரன்.
“பின்னே இல்லையா? ரெபல்லியஸ் லெஃப்டிஸ்ட் அப்படித்தான் கவிதைப் புத்தகத்து அட்டையிலே போட்டிருக்கார். காண்பிக்கறேன் பாருங்கோ”.
அவர் காஃபி டேபிள் கீழ் வரிசையாக வைத்திருந்த புத்தகங்களை குவியலாக அள்ளி எடுத்து உரக்கப் பெயர் குறிப்பிட்டார்.
“எதுக்கு திலீப்? நான் மலையாளம் படிக்கலே. தமிழும் இங்க்லீஷும் மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரியும். அவ்வளவுதான்”.
புத்தகத்தைத் தேடி எடுத்து தூசி தட்டி ஓரமாக ஜன்னல் கம்பிக்கு நடுவே செருகியிருந்த துணிச் சுருணையால் துடைத்தபடி பரமேஸ்வரனிடம் கொடுத்தார் திலீப். அதில் பின் அட்டையில் கிரீடம் அணிந்த கோரன் படம்.
திரும்ப வாங்கிப் புத்தகப் பக்கங்களைப் புரட்டினார் திலீப்.
“இது பாருங்கோ. எல்லும் உறும்பும்.. எலும்பும் எறும்பும்.. என்ன மாதிரி கவிதை எழுதறார்ங்கறதுக்கு சாம்பிள்.
எலும்பும் எறும்பும்
——————–
நிறைய யோசித்து எழுதினான்:
’எறும்பு எலும்பாகும் எனினும்
எலும்பு சிலவேளை தான் எறும்பாகும்
எலும்புப் புற்றில் கடியெலும்பும்
சேவக எலும்பும் உண்டு’.
’மழைக்காலத்துக்காகச் சேமிக்க
எலும்புகள் இரையை இருநூறு முன்னூறாக
இழுத்துப் போகின்றன
மழை வரும்போது
எலும்பு இருக்குமோ’.
’அதெல்லாம் எலும்பில்லை எறும்பு
அச்சுப் பிழை’
சத்தம் போட்ட இன்னொருத்தன்
வெளியேற்றப் பட்டான்
எலும்புகளின் புற்றில் சர்வாதிகாரம் பற்றி
எறும்புகள் கட்டிவைத்த உடல்களோடு
எல்லோரும் சர்ச்சையில் இருந்தார்கள்.
எலும்பில்லை எறும்பு சில நேரம்
எறும்பில்லை எலும்பு இன்னும் சில நேரம்
வலது கை அசைத்தால் எலும்பு
இடக்கை அசைத்தால் எறும்பு
எறும்பு எலும்புதான்
எலும்பு எறும்பு இல்லை”
கவிதை வாசித்து முடிந்தபிறகு அப்பாவைப் பார்த்து திலீப் கேட்டார் –
“என்ன தோண்றது கவிதையைப் பற்றி?”
“நானே குளிச்சுக்கறேன்ப்பா” அவர் தாங்குகோல்களைச் சேர்த்தெடுத்து வைத்துக்கொண்டு கள்ளச் சிரிப்போடு சொன்னார்.