ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் இல்லை.
பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின்.
மேலுடம்பில் துணி போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன.
தோள்களிலும் இறுகக் கவ்விப்பிடித்த ஆபரணங்களை ஸாமுரின் அணிந்திருக்கிறார். இடுப்பில் ஒரு குத்துவாளைச் செருகியிருக்கிறார். தலையில் பெரியதோர் ஆபரணமாக மணிமுடி தரித்திருக்கிறார். அதற்குள் இடைவெளியை அழகான மயில் அல்லது வேறு ஏதோ வண்ணமயமான பறவை இறகுகள் மறைத்துள்ளன.
தலைமுடியை முன்குடுமி கட்டியிருப்பது அவர் அரியணையில் இருக்கும்போது குனிந்து ஏதாவது தேடினால் அன்றி கண்ணில் படுவதில்லை.
காலில் செருப்புகளோடு கணுக்கால் பிடிக்கும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார் ஸாமுரின். எந்த ஆபரணமும் பொன்னாக ஒளி வீசவில்லை. வெள்ளியில் செய்தமைத்தவையாக இருக்கக்கூடும் என்று பெத்ரோவுக்குத் தோன்றியது.
அரியணை கூட சிங்கம், வளைவுகள், சிறு இலை, கொடி வேலைப்பாடுகளோடு வெள்ளியில் செய்ததாக இருக்கக் கூடும். அதன் கீழே ஒரு படி வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.
ஸாமுரின் செருப்பணிந்த ஒரு காலை படியில் ஊன்றி, மற்றதை இருக்கையில் மடித்து வைத்து அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின் நீல நிறத்தில் சாட்டின் துணித் தலையணை உறை போட்ட திண்டு ஒன்று ஸாமுரின் அரியணையில் சாய்ந்து சௌகரியமாக அமர வகை செய்கிறது.
முரட்டுச் செருப்புகளும் காதில் பெரிய வளையங்களும் அணிந்து தலைப்பாகை வைத்த வீரர்கள் நான்கு பேர் வலது கரத்தில் ஓங்கிப் பிடித்த வாளோடு அரியணைக்கு அருகே நாலு பக்கமும் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவன் தரையில் அரியணை பக்கம் ஜாக்கிரதையாக அமர்ந்திருக்கிறான்.
அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார்,
பலாப்பழ சுளைகளும், வாழைப்பழத்தைத் துண்டுபடுத்தி தேங்காய் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொறித்தெடுத்து மிளகுப்பொடியும் உப்பும் தூவிய வறுவலும், தென்னை இளநீரும் உரையாடலுக்கு இடையே பெத்ரோவுக்கும், ஸாமுரினுக்கும் வழங்கப்படுகின்றன.
கையில் பிடித்த உணவுத் தட்டுகளோடு அரசியல் பேச்சுவார்த்தை நடத்த பெத்ரோவுக்குச் சற்றே சிரமமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் பேசியபடி இருக்கிறார்.
அவரிடம் மிளகு விலை நிர்ணயம் பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று போர்த்துகல் பேரரசர் பிலிப்பு தீவிரமாக இருப்பதை பெத்ரோ சொல்லி ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மிளகு அரசி ஜெர்ஸோப்பா மகாராணி சென்னபைரதேவியோடு மொத்த மிளகுக் கொள்முதல் பற்றி உடன்படிக்கைக்கு வழி செய்தபடி, கோழிக்கோடு ஸாமரினோடு மலபார், தலைச்சேரி இன மிளகுக்குத் தனி வணிக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றிப் பேச பெத்ரோவுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.
என்ன செய்ய, மன்னர் தீவிரமாக இந்தப் பேச்சு வார்த்தைக்கு முனைந்திருக்கும்போது அவருடைய ஊழியர் பெத்ரோ என்ன செய்யமுடியும். அதை நோக்கி பேச்சை நகர்த்த ஒரு சரியான தருணத்தை எதிர்பார்த்து இளநீர் பருகிக் கொண்டிருந்தார் பெத்ரோ.
இனிப்பும் உப்புமாக இந்தத் தென்னை இளநீரும் தனிச் சுவையாக இருந்தது பெத்ரோவுக்கு.
painted by Veloso Salgado in 1898