”ஜனவரியில் புறப்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா? அல்லது மாட்ரிட் முதலில் வருவீர்களா?”
ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார்.
“இருங்கள் சின்ஹோர் இமானுவல் பெத்ரோ. இந்தப் பயணம் உடனே முடிவெடுத்து அடுத்த நாள் நாலு துணிமணியை மடித்து சஞ்சியில் வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிற சமாசாரம் இல்லையே. நான் இல்லாதபோது இங்கே காரியங்கள் நான் இல்லாதது குறையாகத் தெரியாமல் நடந்தேறத் திட்டமிட வேண்டும். பயணம் போனால், எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறேனோ அவ்வளவு விரைவில் மிர்ஜான் திரும்ப வேண்டும். யாரெல்லாம் என்னோடு வருகிறார்கள். இது நல்ல கேள்வி. கல்யாண கோஷ்டி மாதிரி முப்பது, நாற்பது பேரோடு லிஸ்பன் புறப்பட நானும் விரும்ப மாட்டேன். உங்கள் அரசரும் அவர்தம் குடும்பமும் கூட இவ்வளவு பெரிய குழுவைச் சந்திக்க விருப்பப்பட மாட்டார்கள். ஆமாம், பயணம் என்றால் கப்பல் சீட்டு, லிஸ்பனில் தங்க, உணவு உண்ண, சுற்றிப் பார்க்க, இதெல்லாம் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? அந்தக் கணக்கு தெரிய வேண்டாமா பயணம் என்று புறப்படும் முன்னால்? ஒரு பேச்சுக்காக பத்து பேர் கொண்ட பயணக் குழு என்று வைத்துக் கொள்வோமா?”
பெத்ரோ சிரித்தபடி இருகை கூப்பி இந்தியனாக வணங்கினார்.
”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். ஆனால் எந்தச் செலவும் குறையேதும் வராதபடி திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”.
”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி, பேகம் சாய்பா ஒரேயடியாக சிரசைக் குளிர வைக்கிறீர்களே? திரும்ப ஜலதோஷம் பிடித்தால் எங்கள் வைத்தியனைத்தான் கூப்பிட வேண்டும். கசப்பு கஷாயம் திப்பிலி, சுக்கு, பனஞ்சீனி என்று தட்டிப்போட்டு காய்ச்சிக் கொடுப்பதை பிடிக்கவில்லை என்று தள்ளவும் முடியாது, பிடிக்கிறதென்று ஒரு குவளைக்கு மேல் அந்தக் கருப்பு திரவத்தைப் பருகவும் முடியாது. வைத்தியன் அத்தியாவசியமான ஒருவர்”
சென்னபைரதேவி மகாராணி பெத்ரோவைப் பார்த்தாள். அவர் ஒரு வினாடி யோசித்தார்.
“அத்தியாவசியமாக யாரெல்லாம் வரக்கூடும் என்பதை ஊகித்துப் பார்க்கலாமே. நான் குத்துமதிப்பாகப் பார்த்தால் இளையவர் நேமிநாதன், அவர் மனைவியவர்கள், வைத்தியர்”.
பெத்ரோ அடுக்கிக் கொண்டு போக போதும் என்று கைகாட்டினாள் சென்னா.
”இந்தப் பட்டியலை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இல்லை”.
ஒருவினாடி சாந்தமான அந்த முகத்தில் சினம் தெரிய, பெத்ரோ பதறிப் போனார்.
எஸ்பேனியத் தலைநகர் மாட்ரிட் – ஒரு பழைய புகைப்படம்