ஐ ஏ எஸ் கோச்சிங் போனோமே ஞாபகம் இருக்கா? ஜெயம்மா புன்சிரிப்போடு கேட்டாள் சங்கரனை.
சங்கரன் ஞாபக மறதியோடு சிரித்தார்.
“நீயும் அந்த சோழ பிரம்மஹத்தி தைனிக் ஜாக்ரன் எடிட்டர் குப்தாவும் க்ளாஸுக்கு முதல்லே வந்து பேக்கு பேக்குன்னு உட்கார்ந்திருந்தீங்க. என்ன வயசு இருபத்துமூணு இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். ஆனா பாரு பகவான் ஆகிருதியை ரெண்டு பேரை ஒண்ணாக்கி நீட்டி நிமித்தினமாதிரி ஆக்கிட்டான்” என்றாள் ஜெயம்மா.
சங்கரன் மணலுக்குள் ஜெயம்மா கையை இழுத்து வைத்து மேலே மணலால் கோபுரம் செய்து மறைத்தபடி சொன்னார் –
“ஆறடிக்கு ஆஜானுபாகுவா ஒரு பொம்மணாட்டி, நிச்சயம் ஏதோ சப்ஜெக்ட் ப்ரபசர் தான் வந்திருக்கார்னு நடுநடுங்கி என்னைப் பார்த்து குப்தாவும் அவனைப் பார்த்து நானும் எழுந்து நின்னு குட் மார்னிங் மிஸ்ஸுனு கிண்டர் கார்டன் குழந்தைகள் மாதிரி விஷ் பண்றோம். சாயந்திரம் ஆறு மணிக்கு குட் மார்னிங் எல்லாம் சிங்சாங் வாய்ஸ்லே. நீ என்ன பண்ணினே சொல்லு” என்று ஜெயம்மாவைப் பார்த்து சிரித்தார்.
நானா என்று ஜெயம்மா சிரிக்க, ”நர்ஸரி பசங்க தானே, ஒன் பாத்ரூம் போய்ட்டு வந்துடுங்க, இல்லேன்னா ரெண்டு மணி நேரம் போக பெர்மிஷன் இல்லேன்னு சொல்லிட்டாங்களா”?
”சரியா சொன்னே தெரிசா” என்றார் சங்கரன்.
எப்படி தெரியும் தெரிசாவுக்கு? ஜெயம்மா ஆச்சரியத்தோடு கேட்க, ”வயதுக்கு வந்தது பத்தின சினிமா எத்தனை பார்த்திருக்கோம், புத்தகம் படிச்சிருக்கோம். ப்ரைம் ஆஃப் ஜீன் ப்ராடி மாதிரி, கேட்சர் இன் தி ரை மாதிரி.. துடுக்குத்தனமாத்தான் பதில் இருக்கும்னு தெரியும்”.
வசந்தி தெரிசாவுக்குக் கிடைத்த பாராட்டில் ஒரு ஓரமாகக்கிள்ளி மூளியாக்கி மண்ணில் புதைத்து மூடினாள். அதை சிரித்தபடி, தெரிசாவின் தோளில் கைபோட்டி இறுக்கியபடி செய்தாள்
தனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல தெரிசாவுக்கு ஆர்வம்தான். ஆனால் எப்படிச் சொல்ல? சங்கரனோடு ஒரு பிற்பகல் மழை நேரப் புணர்ச்சியில் போகம் முந்தாதிருக்க என்னென்னவோ சொல்லும்போது இது ரொம்ப நாழி சிரித்தபடி வைத்திருந்து தெரிசாவையும் சங்கரனையும் உச்சம் தொட்டு நீடித்து நிற்க வைத்தது ஜெயம்மா ஜோக்.
அது அம்பலப்புழையில் நடந்தது. அவள் பிங்க் ப்ளவுஸ் அணிந்து தலை குளித்து ஆற்றியிருந்தாள். வெள்ளைப் புடவை இடுப்பு காட்ட, பிங்க் இணை விழைய அழைக்க பிற்பகல் முழுக்கக் கூடிக் கிடந்த அந்த மழைநேரக் கலவி இருபது வருடம் முன் வந்தது.
அவள் தலை நிமிர்த்தி ஒரு வினாடி சங்கரனைப் பார்த்து மறுபடி தலை தாழ்த்திக் கொண்டதை வசந்தி பார்க்கத் தவறவில்லை. சங்கரன் மண்ணை மறுபடி குவித்துக் கொண்டிருந்தார்.
pic Vembanattu-k-kayal backwaters
ack Times of India